பாக்யராஜுக்கு அவர் அப்பா இறந்து 10 நாட்களுக்கு பிறகு தான் தகவல் கிடைத்திருக்கிறது. அதை கேட்ட பாக்யராஜ் ஊருக்கு கிளம்பிச் செல்ல கையில் பணம் இல்லாமல் தவித்தது குறித்து பேசியிருக்கிறார் சுந்தர்ராஜன். மேலும் தன்னிடம் கடைசியாக பேசியது குறித்தும் தெரிவித்திருக்கிறார்.
கே. பாக்யராஜின் நண்பர்களில் ஒருவரான இயக்குநரும், நடிகருமான சுந்தர் ராஜன் பலருக்கும் தெரியாத தகவலை தெரிவித்துள்ளார். அதாவது பாக்யராஜின் அப்பா இறந்து 10 நாட்கள் கழித்து தான் அவருக்கு தெரிய வந்திருக்கிறது. அப்பா இறந்தது குறித்து அறிந்ததும் பாக்யராஜ் அழுதிருக்கிறார்.
ஊருக்கு போக பாக்யராஜிடம் பணம் கிடையாது. ஏன் 10 நாள் கழித்து தான் தெரிய வந்தது என பாக்யராஜிடம் கேட்க, தெரியல இப்போ தான் தகவல் வந்தது என்று கண்ணீர் விட்டிருக்கிறார். சரிப்பா, இப்போ அழுது என்ன செய்ய என சுந்தர் ராஜன் கேட்டிருக்கிறார். அப்பா இறந்ததற்காக நான் இப்போ அழவில்லை. எங்கம்மாவை முதல் முறையாக வெள்ளை சேலையில் எப்படி பார்ப்பேன் என்று தான் அழுகிறேன் என கூறியிருக்கிறார்.
உதவிய நண்பர்: இதையடுத்து சுந்தர் ராஜனோ தான் வேலை செய்யும் இடத்திற்கு சென்று முதலாளியிடம் தன் அம்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதாகவும், சிகிச்சைக்காக ரூ. 1,000 வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார். முதலாளியும் சுந்தர் ராஜன் சொன்ன பொய்யை நம்பி ஆயிரம் ரூபாய் கொடுக்க அதில் 50 ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள பணத்தை பாக்யராஜிடம் கொடுத்திருக்கிறார்.
காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பிய பேருந்தில் பாக்யராஜ் தன் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். அம்மாவுக்கு சிகிச்சை என்று பொய் சொல்லி பணம் வாங்கிவிட்டு நாளை மறுநாள் வேலைக்கு வருகிறேன் என்று சொன்னதால் வீட்டிலேயே இருந்திருக்கிறார் சுந்தர் ராஜன். மறுநாள் பசி தாங்க முடியாமல் வேலு மிலிட்டரி ஹோட்டலில் சாப்பிட கிளம்பியிருக்கிறார். கையில் ரூ. 50 இருந்த தைரியத்தில் நல்ல சாப்பாடு சாப்பிட சென்ற சுந்தர் ராஜனை பணம் கொடுத்த முதலாளி பார்த்துவிட்டார். இந்த தகவலை இந்தியாகிளிஸ்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் சுந்தர் ராஜன்.
கடைசி கால்: பாக்யராஜ் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு அவரும், சுந்தர் ராஜனும் போனில் பேசியிருக்கிறார்கள். இரவு 10.30 மணிக்கு பேசிய நிலையில் விடிந்தால் பாக்யராஜ் இறந்துவிட்டார் என்று தகவல் வரவே சுந்தர் ராஜன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
இதற்கிடையே பாக்யராஜ் உயிர் பிரிந்த தகவல் கிடைத்த கையோடு அவர் வீட்டிற்கு வந்த பார்த்திபனோ இறுதிச் சடங்கை முடித்துவிட்டு தான் தன் வீட்டிற்கு கிளம்பிச் சென்றார். அவர் எல்லா வேலையையும் தானே செய்ததை பார்த்து பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து நடிகரான ஒருவர் சபித்து மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.
ஏதோ நீ தான் பாக்யராஜை பெத்தது மாதிரி யாருக்கும் எந்த வேலையும் கொடுக்காமல் செய்த. இதனால் தான் குடும்பம் இல்லாமல் தனியா நிற்கிற. நீ சீக்கிரமே செத்துடுவ, உன் சாவுக்கு யாரும் வர மாட்டார்கள் என அந்த நபர் மெசேஜ் அனுப்ப அதை பார்த்திபனோ பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.



