கேரள வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்

 

கேரளாவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, வயநாடு (Wayanad) மாவட்டத்தில் மீண்டும் ஒரு மிகப்பெரிய நிலச்சரிவு (Major Landslide) ஏற்பட்டு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வயநாட்டின் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி (Kalladi) என்ற பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவின் போது, அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் நொடிப் பொழுதில் மண்ணுக்குள் புதைந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!
வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியில், கட்டுமானப் பணி நடைபெறும் தளம் ஒன்றில் ஒரு பெரிய லாரி மற்றும் பச்சை நிற ஜீப் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது திடீரென மலையிலிருந்து கொட்டிய பிரம்மாண்ட சேற்று வெள்ளமும் பாறைகளும் அங்கிருந்த ஆட்களையும் வாகனங்களையும் அப்படியே மூழ்கடிக்கிறது.குறிப்பாக, லாரிக்கு அருகில் நின்று கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தப்பிக்க ஓடும்போது, கண் இமைக்கும் நேரத்தில் நிலச்சரிவின் இடிபாடுகளிலும் சேற்றிலும் சிக்கிக் கொள்ளும் நெஞ்சை உலுக்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது.

சுரங்கப் பாதை திட்டப்பகுதியில் விபத்து
இந்த நிலச்சரிவானது மலப்புறம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அனக்கம்பொயில் – மேப்பாடி சுரங்கப் பாதை சாலை திட்டப்பகுதியில் உள்ள மீனாட்சி பாலத்திற்கு அருகே நிகழ்ந்துள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட சமயத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் உட்படப் பல கட்டுமானப் பணியாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய பாதிப்பு நிலவரம் உயிரிழப்புகள்
இந்த கோர விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.விபத்தில் சிக்கிய 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. நிலச்சரிவின் இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால், மீட்புக் குழுவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.