இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தீவு, சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதைகளிலும் உலக வல்லரசுகளின் புவிசார் அரசியல் உத்திகளிலும் எப்போதுமே ஒரு தவிர்க்க முடியாத புள்ளியாக இருந்து வந்துள்ளது.
அண்மைக்காலமாக ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் ஆதிக்கப் போட்டிகளுக்கு மத்தியில், தற்போது ஐரோப்பாவின் முக்கிய வல்லரசான பிரான்ஸ் இந்த புவிசார் அரசியல் சதுரங்கப் பலகையில் மிக ஆக்ரோஷமான ஒரு புதிய நகர்வை மேற்கொண்டுள்ளது.
இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் பிரான்சின் முன்னணி எண்ணெய் நிதியமானது புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளமை இந்த பிராந்தியத்தின் கடல்சார் சமன்பாடுகளை முற்றாக மாற்றியமைக்கக் கூடிய ஒரு புதிய திருப்பமாக உருவெடுத்துள்ளது.
இவ்வாறானதொரு அசாதாரண அரசியல் மற்றும் பொருளாதாரப் பின்னணியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி பிரான்சுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயமானது ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவினர் பங்கேற்கவுள்ளதுடன், இது இலங்கையின் எதிர்கால பொருளாதார மீட்சி மற்றும் கடல்சார் வர்த்தக அபிலாஷைகளை தீர்மானிக்கும் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக அமையவுள்ளது.
இலங்கைக்கான தற்போதைய பிரெஞ்சு தூதுவர் ரெமி லம்பேர்ட், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய இரு துறைகளிலும் மிகச்சிறந்த பட்டதாரி ஆவார்.
ஒரு வரலாற்றாசிரியராகவும் புவியியல் நிபுணராகவும் விளங்கும் அவர், பிரான்சின் புகழ்பெற்ற பேரரசர் நெப்போலியன் போனபார்ட் திருகோணமலை இயற்கை துறைமுகம் குறித்து வெளியிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூற்றை நிச்சயம் ஆழமாகப் புரிந்து வைத்திருப்பார்.
உலக வரலாற்றில் ‘திருகோணமலையைக் கட்டுப்படுத்துபவனே ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடலையும் தன் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறான்’ என்று நெப்போலியன் தீர்க்கதரிசனமாகக் குறிப்பிட்டிருந்தார்.
நெப்போலியன் போர்களின் போது இந்த பிரம்மாண்டமான இயற்கை அரண்மிக்க துறைமுகமே பிரித்தானிய ரோயல் கடற்படையின் மிக முக்கிய விநியோக மற்றும் பாதுகாப்புத் தளமாக விளங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், நெப்போலியன் போர்களுக்கும் முன்னதாகவே இந்த பிராந்தியம் பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான ஒரு பிரதான இராணுவ மோதல் களமாக இருந்திருக்கிறது.
அமெரிக்க சுதந்திரப் போரின் ஒரு நீட்சியாக 1782 ஆம் ஆண்டில் நடைபெற்ற புகழ்பெற்ற ‘திருகோணமலைப் மோதலில்;’ பிரெஞ்சு கடற்படை தளபதி அட்மிரல் பெய்லி டி சுஃப்ரென் பிரித்தானிய ரோயல் கடற்படையை மிகக் கடுமையாக எதிர்த்துப் போரிட்டார்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மோதலின் போது பிரெஞ்சுப் படைகள் தற்காலிகமாக திருகோணமலைத் துறைமுகத்தைக் தங்களது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததுடன், இந்தியாவில் தங்களுக்கு ஆதரவாக இருந்த பிராந்திய அரசுகளுக்கான மிக முக்கிய கடல்சார் விநியோகத் தளமாகவும் அதனைப் பயன்படுத்தின.
எனவே, பிரான்ஸ் நாட்டிற்கு, இலங்கையுடனும் அதன் கடல் எல்லைகளுடனும் உள்ள தொடர்பு என்பது இன்று நேற்றுத் தொடங்கியதல்ல, அது பல நூற்றாண்டுகள் பழமையான மூலோபாய வரலாற்றைக் கொண்டது என்பதை தற்போதைய பிரெஞ்சு தூதுவரின் நகர்வுகள் மீண்டும் நினைவூட்டுகின்றன.
நவீன உலக அரசியல் சூழலில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இந்தியப் பெருங்கடலில் இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவத்தை மிகச்சரியாகக் கணித்து அதற்கேற்ப காய்களை நகர்த்தி வருகிறார்.
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் எதிர்கொண்ட மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் வீழ்ச்சி நிலையின் போது, இலங்கையின் சர்வதேசக் கடன் மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காகப் ‘பாரிஸ் கிளப்’ அமைப்பின் ஊடாக ஜனாதிபதி மெக்ரோன் தனிப்பட்ட முறையில் தலையிட்டு பெரும் வசதிகளைச் செய்து கொடுத்தார்.
இதன் காரணமாகவே இலங்கையினால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மிக வெற்றிகரமாக எட்ட முடிந்தது. அந்த இக்கட்டான காலகட்டத்தில், பிரான்சில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரான்ஸ் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் பசிபிக் பிராந்தியத்திற்கான தனது பயணத்தின் போது கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ஒரு குறுகிய கால இடைத்தங்கல் சந்திப்பை மேற்கொண்டு, இருதரப்பு உறவுகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புப் பங்களிப்புகள் குறித்து விசேட கலந்துரையாடல்களை நடத்தினார்.
இந்த சந்திப்பின் தொடர்ச்சியாக, இந்தியப் பெருங்கடலுக்கான பிரான்ஸ் கூட்டுப் படைகளின் தளபதி ரியர் அட்மிரல் ஹியூக்ஸ் லைன் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த உயர்நிலைச் சந்திப்புகள் அனைத்தும், பிரான்ஸ் தனது எதிர்கால கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கையின் புவியியல் அமைவிடத்தை எவ்வளவு தூரம் நம்பியிருக்கிறது என்பதை வெளிப்படையாக உணர்த்துகின்றன.City & Local Guides
கொழும்பு துறைமுகத்தில் பிரான்ஸ் முதலீடுகளின் அதிரடிப் பிரவேசம்
கடந்த வாரம் அமெரிக்க பசிபிக் விமானப்படை தளபதியின் இலங்கை விஜயத்தின் போது, பிரான்ஸ் தூதுவர் ரெமி லம்பேர்ட் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை நேரில் சந்தித்து மிக முக்கியமானதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வதற்குப் பிரான்ஸ் முதலீட்டாளர்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக அவர் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு நடைபெற்ற சில தினங்களிலேயே, தூதுவர் லம்பேர்ட் பிரான்சின் முன்னணி முதலீட்டாளர்கள் குழுவொன்றை நேரடியாகத் திரட்டிக்கொண்டு துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க மற்றும் துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஆகியோரைச் சந்தித்து விரிவான பேச்சுவார்த்தைகளில்
இந்த உயர்மட்ட முதலீட்டுக் குழுவிற்கு உலகப் புகழ்பெற்ற பிரெஞ்சு கப்பல் நிறுவனமான சி.எம்.ஏ. – சி.ஜி.எம். யின் நிர்வாகத் துணைத் தலைவர் தலைமை தாங்கியிருந்தார்.
உலகெங்கிலும் உள்ள சுமார் 65 க்கும் மேற்பட்ட பிரதான சர்வதேச துறைமுகங்களில் கொள்கலன் முனையங்களைச் சொந்தமாகக் கொண்டு வெற்றிகரமாக இயக்கி வரும் இந்த பிரெஞ்சு நிறுவனம், கொழும்பு துறைமுகத்தின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடத்தைக் கருத்தில் கொண்டு, இங்கு கூட்டு முயற்சி முதலீடுகள் மூலம் கொள்கலன் மறு ஏற்றுமதி மற்றும் போக்குவரத்தின் அளவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத் திட்டத்தின் இரண்டாம் கட்ட முதலீட்டு சாத்தியக்கூறுகள் குறித்தும் தங்களது நிறுவனம் ஏற்கனவே ஆழமான ஆய்வுகளைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த பின்னணியில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 16 ஆம் திகதி பிரான்சுக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயமானது வெறும் ஒரு சாதாரண இராஜதந்திர பயணம் மட்டுமல்ல, அது நாட்டின் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய நகர்வாகும்.
இந்த விஜயத்தின் போது, சி.எம்.ஏ. – சி.ஜி.எம். நிறுவனத்தின் உலகளாவிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ரோடால்ஃப் சாடே மஹானாவை ஜனாதிபதி நேரில் சந்தித்து கொழும்பு துறைமுகத்தின் பெரும் முதலீட்டுத் திட்டங்களை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு பிரான்ஸ் முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதில் பிரான்ஸ் அரசு காட்டும் ஆர்வம் இந்த சந்திப்பின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.Multilateral Organizations
அதேவேளை, இந்த விஜயத்தின் போது ஐரோப்பிய ஒன்றியத்துடனான இலங்கையின் ஒட்டுமொத்த வர்த்தக உறவுகளையும், நாட்டின் ஆடைத் தொழில் உள்ளிட்ட ஏற்றுமதித் துறைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் மிக முக்கியமான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது மற்றும் அதனை மேலும் சாதகமாகப் பயன்படுத்துவது
குறித்து இருதரப்பு உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன. இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஐரோப்பிய சந்தையில் உள்ள புதிய வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மற்றும் நாட்டின் பொருளாதார மீட்சியை ஸ்திரப்படுத்துவது குறித்து பிரான்ஸ் அரசாங்கத்துடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் விரிவான இணக்கப்பாடுகளை எட்டவுள்ளனர்.
உலக வங்கியின் மதிப்பீடும் சர்வதேச கவனமும்
அண்மைய நாட்களில் உலக வங்கியானது கொழும்பு துறைமுகம் தொடர்பாக மிக முக்கியமானதொரு சிறப்பு மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் கொழும்பு துறைமுகத்தின் பிராந்திய முக்கியத்துவம் குறித்தும், அங்கு சர்வதேச தரத்திலான உட்கட்டமைப்புகளை அவசரமாக மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அண்மைக்காலமாக சர்வதேச நிதி மற்றும் கப்பல் துறை பிரமுகர்களான செர்ஜியோ கோர் மற்றும் போல் கபூர் ஆகியோரின் இலங்கைக்கான பயணங்கள், பிரான்சின் முன்னணி கப்பல் நிறுவனத்தின் திடீர் முதலீட்டு ஆர்வம் மற்றும் கொழும்பு துறைமுகம் குறித்த உலக வங்கியின் நேர்மறையான மதிப்பீட்டு அறிக்கை என்பன இலங்கையின் கடல்சார் பொருளாதாரம் தற்போது சர்வதேச மட்டத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவதை உறுதிசெய்துள்ளன.
ஈழத்தமிழர் செய்திகள்
இந்த ஒட்டுமொத்த சர்வதேச கவனத்திற்கு மத்தியில், பிரான்சின் எண்ணெய் நிதியமானது இலங்கை எல்லைக்கு மிக அருகாமையில் உள்ள கடல் பகுதிகளில் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வாராய்ச்சிப் பணிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ள செய்தி, இலங்கையை நோக்கி மேலும் பல சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் கவனத்தைத் திருப்பியுள்ளது.
எனவே, ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயமானது வெறுமனே துறைமுக அபிவிருத்தி மற்றும் ஐரோப்பிய முதலீடுகளுடன் மட்டும் நின்றுவிடாமல், இலங்கையின் புதிய எரிசக்தி கொள்கை மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.Geographic Reference
இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் நிலப்பரப்பில் பிரான்சின் இந்த தீவிரமான பிரவேசமும், இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் எரிசக்தித் துறைகளில் அது மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பெரும் முதலீடுகளும் பிராந்திய வல்லரசுகளுக்கு இடையே புதிய சலனங்களை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையின் கடல்சார் எல்லைகளிலும் துறைமுகங்களிலும் ஏற்கனவே தங்களது பலத்த செல்வாக்கை நிலைநிறுத்தப் போராடி வரும் அமெரிக்கா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள், இலங்கையின் புவிசார் அரசியல் சதுரங்கப் பலகையில் பிரான்சின் இந்த அதிரடி வரவை எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும்.
எவ்வாறாயினும், சர்வதேச வல்லரசுகளின் போட்டிகளுக்கு மத்தியில் சிக்கிக் கொள்ளாமல், பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய சக்திகளின் முதலீடுகளையும் இராஜதந்திர ஆதரவையும் பயன்படுத்தி, நாட்டின் பொருளாதார மீட்சி, துறைமுக அபிவிருத்தி, எரிசக்தித் தேவைகள் மற்றும் ஜி.எஸ்.பி வரிச்சலுகை நீடிப்பு ஆகியவற்றை வெற்றிகரமாகச் சாதித்துக் கொள்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்த பிரான்ஸ் விஜயம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.



