சமூகங்களிடையே பிளவுகளையும் குரோதங்களையும் ஏற்படுத்துவதற்கு இக்காலத்தில் ஒரு சில இனவாத போக்குடையவர்களும் சமூக ஊடகங்களும் இருந்தால் போதும் என்ற நிலையை உணர்த்திய சம்பவம் கடந்த வாரம் எமது நாட்டில் இடம்பெற்றது.
ஆனால், இந்த சம்பவத்தின் மையப்புள்ளியாக விளங்கியது என்னவோ ‘சுப்ரமணி’ என்ற பெயர் கொண்ட ஓர் நாய் தான் எனும் போது, ஐந்தறிவு கொண்ட விலங்கொன்று நாட்டில் இரு சமூகங்களிடையே முறுகலை ஏற்படுத்த காரணமாக இருந்திருக்கின்றதா என்ற ஆச்சரியமும் தலைதூக்குவதை தவிர்க்க முடியாதுள்ளது.
கதிர்காமத்துக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுடன் ‘சுப்ரமணி’ என்று அழைக்கப்படும் ஒரு நாயும் இணைந்து பயணித்து வருகின்றது.
யாத்ரிகர்கள் கல்முனை நகரை கடந்து பயணிக்கும் போது அங்கு இளநீர் கடை வைத்திருக்கும் ஒரு இளைஞன் அந்த நாயை உதைத்து விடுகின்றார்.
அவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர். யாத்திரீகர்கள் குழுவில் உள்ள ஒருவர் தாம் பாத யாத்திரை செல்வதை தனது திறன் பேசி மூலம் பதிவு செய்து கொண்டே போகின்றார்.
ஒரு சில இடங்களில் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக காட்சிகளை பதிவு செய்கிறார். அவரது கவனம் தம்மோடு வரும் நாயின் மீதே உள்ளமையை அவரது பதிவுகள் காட்டுகின்றன. அதில் குறித்த இளைஞன் நாயை எட்டி உதைப்பதும் பதிவாகி விடுகின்றது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்து விட்டது.
ஒரு பக்கம் பொதுமக்கள் மற்றும் மிருகவளர்ப்பு ஆர்வலர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பையும் கடுமையான கண்டனங்களையும் தோற்றுவித்தது.
மனிதநேயமற்ற இந்தச் செயலுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் மிக வேகமாக வைரலாகின. வளர்ப்பு மிருகம் ஒன்றை இவ்வாறு தாக்குவது முறையற்றது என எதிர்ப்புக்குரல்கள் அதிகரித்தன. மறுபக்கம்
இது ஒரு மதநிந்தனை என்ற வாதங்கள் அதிகமாக பரவின. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் சமூக ஊடகங்களை நிறைத்தன.
இதேவேளை, நாயை தாக்கிய இளைஞர் தனது செயலுக்கு மன்னிப்பு கோரிய வீடியோ பதிவும் சமூக ஊடகங்களில் வெளியானது.
ஆனால், அதன் பிறகும் கூட எழுந்த எதிர்ப்பலைகளால் குறித்த இளைஞர், கல்முனை தலைமை பொலிஸ் காரியாலய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
குறித்த இளைஞரை 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்ததுடன் இது தொடர்பான வழக்கை எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டுள்ளது.
இவ்வளவு சம்பவங்கள் இடம்பெற்றும் சமூக வலை தளங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் தமக்குள் பரஸ்பரம் கடும் வார்த்தைப் பிரயோகங்களை பதிவிடுவதை நிறுத்தவில்லை.
இதன் உச்சகட்டமாக சவூதி அரேபியாவில் பணியாற்றும் தமிழ் இளைஞர் ஒருவர் நபிகள் நாயகம் குறித்த ஒரு மோசமான பதிவை இடுகின்றார்.
இது ஒட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் கோபத்துக்குள்ளாக்கியதில் அவர் பணிபுரியும் நிறுவனம் தொடர்பில் தகவல்களை சேகரித்து அங்கு பொலிஸாருக்கு அவரைப் பற்றிய முறைப்பாடு செய்யுமளவுக்கு நிலைமை சென்று விட்டது.
அதன் விளைவாக குறித்த இளைஞரை சவூதி பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியுள்ளனர். பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழ்ந்து வரும் மேற்காசிய நாடுகளில் மத நிந்தனைக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை அமுலில் உள்ளது.
இந்நிலையில் குறித்த தமிழ் இளைஞருக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகின்றது என்ற பதற்றத்தில் அவரது குடும்பத்தினர் இங்கு தவித்து வருகின்றனர். ஆனால், தான் கைது செய்யப்படுவதற்கு முன்பதாக குறித்த தமிழ் இளைஞரும் தனது பதிவுக்கு முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரி வீடியோ பதிவொன்றையும் இட்டிருந்தார்.
கல்முனை சம்பவம் தற்செயலானது. ‘சுப்ரமணி’ கதிர்காம யாத்திரீகர் குழுவுடன் செல்வது குறித்து அங்கு இளநீர் விற்றுக்கொண்டிருக்கும் இளைஞருக்கு தெரிய வாய்ப்பில்லை.
மேலும் நாய்களின் எச்சில் தம்மீது படுவது மார்க்க ரீதியாக அசுத்தம் என்பதால் முஸ்லிம்கள் நாய்களைக் கண்டால் விலகியே செல்வர்.
ஆனால், அது முன்பாதுகாப்பே ஒழிய நாய்கள் மீதான வெறுப்பில்லை. வீட்டை காப்பதற்கும், கால்நடைகளை வளர்ப்பதற்கும் நாய்களை வளர்க்க இஸ்லாம் அனுமதியளிக்கின்றது என்பதே உண்மை.
யாத்திரீகர்களுடன் சென்ற ‘சுப்ரமணி’ குறித்து அவ்விளைஞனுக்கு எடுத்துக் கூறிய பின்னர் அப்பகுதியிலுள்ளவர்களும் அதற்கு தமது வேதனையை வெளிப்படுத்தியிருந்தனர்.
இளைஞர் மன்னிப்பு கோரிய வீடியோவில் ஒருவர் “கல்முனை மக்கள் சார்பாக நாம் மன்னிப்பு கோருகிறோம்” என்று கூறியிருந்தமை முக்கிய விடயம். சில நேரங்களில் நாயை உதைத்த இளைஞர் முஸ்லிம் அல்லாத ஒருவராக இருந்திருந்தால் இந்தளவுக்கு நிலைமை சென்றிருக்காது என்று தான் கூற வேண்டியுள்ளது.
குறித்த சம்பவத்தை தமது குரோதங்களுக்காகவும் இனங்களிடையே நிலவும் நல்லுறவை சிதைப்பதற்கும் தருணம் பார்த்து சிலர் பயன்படுத்திக்கொண்டனர் என்பதும் உண்மை.
இதன் காரணமாகவே மன்னிக்கும் பண்புகளை கொண்ட மனிதர்களின் சொற்களைவிட, முறுகல்களை விரும்பும் தரப்பினரின் இனவாத கருத்துகள் மிக வேகமாக சமூக ஊடகங்களில் பயணித்து சம்பவத்தை திசை திருப்பி விட்டது.
உணர்ச்சி வசப்பட்டு பொதுவெளியில் வார்த்தைகளை விடுவதால் அது இந்தளவுக்கு தீவிரத்தை ஏற்படுத்தும் என சவூதியில் பணியாற்றும் தமிழ் இளைஞரும் நினைத்திருக்க மாட்டார்.
தாம் எந்த நாட்டில் பணியாற்றினாலும் அந்நாட்டின் சட்ட திட்டங்களை அறிந்து செயற்பட வேண்டும் என்பதை இளையோர் அறிந்து கொள்ளல் எந்தளவுக்கு அவசியம் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. அவருடைய நிலைமை குறித்து அரசாங்கமும் தனது கவனத்தை திருப்ப வேண்டிய சூழ்நிலைகள் எழுந்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் அமைதிக்கான நடை பயணத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த பெளத்த துறவிகளுடன் ஆலோக்கா என்ற நாயும் இணைந்து கொண்டிருந்தமை அனைவரும் அறிந்த விடயம்.
ஆலோக்கா சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த நாயாகும். அதன் வருகை குறித்து முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அதன் பராமரிப்புக்கென பிரத்தியேக குழுவினரும் வந்திருந்தனர்.
பெளத்த துறவிகள் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஆலோக்கா சென்ற போது இலங்கை மக்களால் அதற்கு பெரு வரவேற்பளிக்கப்பட்டது. ஆனால் ‘சுப்ரமணி’ என்ற நாய் குறித்து நாட்டு மக்கள் அறிந்திருக்கவில்லை. தமிழ் மக்களிடம் மாத்திரமே அது குறித்து செய்திகள் சென்றடைந்திருந்தன. எனவே கல்முனை சம்பவத்துக்கு அதுவும் ஒரு காரணம்.ச்
இலங்கையில் வாழ்ந்து வரும் சிறுபான்மை இன மக்களின் இறை நம்பிக்கைகள் குறித்து பெரும்பான்மை மக்கள் மற்றும் பெளத்த மதத் துறவிகளால் பல சந்தர்ப்பங்களில் விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.
இஸ்லாம் மார்க்கம் பற்றி ஞானசார தேரர் உள்ளிட்ட தரப்பினர் கடும் வார்த்தைப் பிரயோகங்களை வெளிப்படுத்தியிருந்தமையை நாடே அறியும். முஸ்லிம்களின் ஆடை மற்றும் அவர்களின் கலாசாரம் குறித்து கடந்த காலங்களில் அதிகமாக விமர்சித்து வந்தவர் ஞானசார தேரர். ஆனால், அனைத்தையும் சகித்து கொண்டு அமைதியாக இருந்தனர் முஸ்லிம் மக்கள். இஸ்லாம் மன்னிக்கும் மார்க்கம் என்பதில் அவர்கள் அளவு கடந்த நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.
வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய வழிபாட்டிடங்கள் மற்றும் தொல்லியல் பிரதேசங்களை ஆக்கிரமித்து அங்கு புதிதாக விகாரைகளை அமைத்து வரலாற்றையே மாற்றியமைக்கும் வேலைகளையும் இதே பெளத்த பிக்குகளே முன்னெடுத்தனர்.
இதற்கு தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மூலம் வெளிப்படுத்தினாலும் மறுபக்கம் சட்டரீதியாகவும் இதற்கு முகங்கொடுத்து வருகின்றனர். மேற்படி சம்பவங்களைப் பார்க்கும் போது, இந்நாட்டின் தமிழர்களும் முஸ்லிம்களும் பேரினவாத சிந்தனை கொண்ட பெளத்த துறவிகளாலும் ஒரு சில நபர்களாலும் , தமது இறை நம்பிக்கை, வழிபாடுகள் மீதான அடக்குமுறைகளுக்கு உட்பட்ட தரப்பினராக விளங்குகின்றனர்.
இந்த நிலைமைகள் இன்னும் தொடர்கின்றன. அவ்வாறு இருக்கையில் இந்த இருதரப்பினரும் சில சம்பவங்களை ஊதி பெருப்பித்து தமக்குள்ளும் மதரீதியாக பகைமைகளை வளர்த்துக்கொள்ளல் பேரினவாத சிந்தனையாளர்களுக்கு ஒரு வாய்ப்பாக அமைய இடமுண்டு.
கல்முனை சம்பவத்தை பூதாகரமானதாக சித்தரித்து, இதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் குறித்த இளைஞன் மன்னிப்பு கேட்க வேண்டும் என யாத்திரீகர்கள் குழுவில் உள்ளோர் மேற்கொண்ட முகநூல் பதிவுகளும் இதற்கு காரணமாயிற்று. ஆன்மிக யாத்திரைகளில் பல இடையூறுகள் , துன்பங்கள் ஏற்படலாம். மனிதர்களை பக்குவப்படுத்துவதற்கே நெறிகளும் மதங்களும் உருவாகின என்றால் அந்தப் பக்குவம் ஆறறிவு படைத்த மனிதர்களுக்கே ஏற்பட வேண்டும்.
கல்முனை முஸ்லிம் இளைஞன் வழக்கிலிருந்து விடுபட சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால், சவூதியில் பணியாற்றும் தமிழ் இளைஞனின் நிலை குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.
“கண்ணுக்குக் கண் எனப் பழி வாங்கத் தொடங்கினால், இறுதியில் உலகமே குருடாகிவிடும்” என்பது மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற கூற்று. பழிவாங்கும் உணர்வு முடிவற்ற வன்முறைக்கு வழிவகுக்கும் என்பது இதன் அர்த்தம். எனவே, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம் இது.



