சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் ஸ்ரீதர் தரப்புக்கு அவகாசம் ஏன்-

 

 

சாத்தான்குளம் தந்தை–மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் மரண வழக்கில் மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம் நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உறுதி செய்ய சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளில் பெரும்பாலானோர் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை–மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவல் மரண வழக்கில் வழங்கப்பட்ட இரட்டை மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு பிறகு குற்றம் சாட்டப்பட்ட காவல்துறையினர் மீது 2,427 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சாத்தான்குளம் காவல் மரண வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், 2020 ஜூன் மாதத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த காலகட்டத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணையை கண்காணித்தது. பின்னர் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வசம் மாற்றப்பட்டது.
சிபிஐ விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை
சாத்தான்குளம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் காவலர் பால்துரை கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

சிபிஐ இந்த வழக்கில் இரண்டு கட்டங்களாக மொத்தம் 2,427 பக்கங்கள் கொண்ட விரிவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை
மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 23-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6-ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டதுடன், ரூ.1 கோடியே 40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகையை பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

விசாரணை நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்யக் கோரி சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் தாமஸ் பிரான்சிஸ் தவிர மற்ற குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, மேல்முறையீட்டு மனுக்களை எந்த அமர்வு விசாரிக்க வேண்டும் என்பது குறித்து வழக்கறிஞர்கள் முடிவு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஸ்ரீதர் தரப்புக்கு அவகாசம்
இன்று நடைபெற்ற விசாரணையில், ஸ்ரீதர் காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார். அவரது தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அது இன்னும் பட்டியலிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தாமத மன்னிப்பு மனுவை முறையாக எண் வழங்கி பட்டியலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், தற்போதைய அமர்வு ஜூன் 25 வரை மட்டுமே இந்த வழக்குகளை விசாரிக்க முடியும் என்பதால், மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து விசாரிக்க இயலாது என தெரிவித்த நீதிபதிகள், தேவையான ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வழக்கை ஜூன் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.