கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்து சீனப் பிரஜைகள் குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம், எலியகொடை – கரந்தன காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை (23) பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் வைத்து பொலிஸாரால் வியாழக்கிழமை (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை, துறைமுக நகரப் பகுதியில் தூண்டிலில் மீன்பிடிப்பதுக்காக நேற்று (23) அதிகாலை மூன்று சீனப் பிரஜைகள் கெப் ரக வாகனமொன்றில் வருகை தந்துள்ளனர். இதன்போது இரு வாகனங்களில் குறித்த பகுதிக்கு வருகை தந்த மற்றொரு சீனர்கள் அடங்கிய குழுவொன்று, அம்மூவரையும் கடுமைக தாக்கியுள்ளதோடு, தாக்குதலை நடத்திய நபர்கள், அங்கிருந்த ஒரு சீனப் பிரஜையைக் கடத்திச் சென்றதுடன், தாம் வருகை தந்த வேன் ஒன்றை அவ்விடத்திலேயே விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் நடத்திய சோதனையின் போது, குறித்த வேனிலிருந்து எர் பிஸ்டல் (கைத்துப்பாக்கி) ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனிடையே, கரந்தன – கேட்டுகடே பகுதியில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு தொடர்பில் கிடைக்கப்பெற்றிருந்த இரகசிய தகவலுக்கமைய, சோதனை நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த எஹலியாகொடை பொலிஸ் குழுவினர், வனப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் கற்கள் குவிக்கப்பட்டிருந்த இடமொன்றை அவதானித்துள்ளதுடன், அதில் மனிதக் கையொன்று தென்பட்டதையடுத்து பொலிஸார் உடனடியாக அப்பகுதியைச் சோதனையிட்டபோது கற்களுக்கு இடையே மனிதச் சடலமொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த சடலம் சீனப் பிரஜை ஒருவரது என அடையாளம் காணப்பட்டதுடன், அவரே கொழும்பு துறைமுக நகரத்தில் வைத்துக் கடத்தப்பட்டவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. சடலம் மேலதிக விசாரணைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சடலம் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகில் காரொன்றும் மீட்கப்பட்டுள்ளது. அது சந்தேகநபர்கள் சடலத்தைக் கொண்டு வரப் பயன்படுத்திய வாகனமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சீனப் பிரஜைகள் நாட்டிலிருந்து தப்பியோடுவதற்கு முற்பட்ட போது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கரையோரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்யப் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். எனினும், இக் குழுக்களுக்கிடையிலான மோதலுக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
மேலும் இச்சம்பவம் குறித்துத் இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், அதில் இச்சம்பவம் தொடர்பில் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் துல்லியமான தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக உடனடியாக விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இலங்கையில் வாழும் சீனப் பிரஜைகளின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவர்களின் சட்டப்பூர்வ உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை பொலிஸாரிடம் சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இலங்கையில் வசிக்கும் சீனப் பிரஜைகள் தங்களது பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்குமாறும், அவசர காலங்களில் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிப்பதோடு தூதரகத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.



