தாய்லாந்தின் தெற்குப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல்: 5 இராணுவ வீரர்கள் பலி

 

தாய்லாந்தின் தெற்கு எல்லையோர மாகாணமான நராதிவாட்டில் அமைந்துள்ள இராணுவச் சோதனைச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதலில் 5 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, 10 வயதுச் சிறுவன் உட்பட 6 பொதுமக்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதன்கிழமை (22) மாலை 6:45 மணியளவில் நராதிவாட் மாகாணத்தின் ரங்கே மாவட்டத்தில் உள்ள புக்கே சாமி சோதனைச் சாவடியில் ’45வது ரேஞ்சர் படைப்பிரிவு’ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கருப்பு நிற ஆடை அணிந்த 6 சந்தேகநபர்கள் பிக்கப் ரக வாகனத்தில் வந்து, திடீரெனச் சோதனைச் சாவடியை நோக்கிப் பைப் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலுக்குப் பின்னர் அண்டை மாவட்டத்தை நோக்கித் தப்பிச் சென்ற தாக்குதல்தாரிகள், தாங்கள் பயன்படுத்திய வாகனத்திற்குத் தீவைத்துச் சான்றுகளை அழிக்க முயன்றுள்ளனர்.

தாய்லாந்து பிரதமர் அனுடின் சர்ன்விராகுல் இத்தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்:

இச்சம்பவம் நாட்டிற்கு விடுக்கப்பட்ட “பகிரங்கப் பயங்கரவாதச் செயல்” எனவும், நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் எனவும் அவர் வர்ணித்துள்ளார்.

அப்பகுதியில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இத்தாக்குதல் பெரும் தடையாக இருக்கும் எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தின் தெற்கு மாகாணங்களான நராதிவாட், பட்டாணி மற்றும் யாலா ஆகிய பகுதிகளில் 2004 ஆம் ஆண்டு முதல் பிரிவினைவாதக் குழுக்களுக்கும் தாய்லாந்து பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நீடித்து வரும் மோதல்களில் இதுவரை 7,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2-3 மாதங்களாக அரசு அதிகாரிகளையும் பொதுமக்களையும் இலக்கு வைத்துப் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதாகவும், தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர் நிலைமையை நேரில் ஆய்வு செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.