”
சிறுமி ஒருவரைப் பிரதான பௌத்த பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, நாட்டில் பெரும் கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
நாட்டில் 95 சதவீதமான மக்கள், “இது ஒரு படுபாதகச் செயல்” என்றும், “குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் கூறிவருகின்ற நிலையில்; ஒரு சிலரே இந்தத் தரங்கெட்ட செயலையும் நியாயப்படுத்த முனைவதைக் காணமுடிகின்றது.
சமூக ஒழுக்கம் என்று ஒன்று இருக்கின்றது; அடிப்படை மானிடப் பண்பு என்று ஒன்று உள்ளது; சட்டம், ஒழுங்கு என்றெல்லாம் பல விடயங்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் மீறுகின்ற அநாகரிகமான, அருவருக்கத்தக்க செயல்களை ஏற்றுக்கொள்ளவோ, கண்டும்காணாதது போல் கடந்துசெல்லவோ முடியாது.
சட்டத்தரணி சஜீவனியின் துணிச்சல்:
அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி பள்ளேகம ஹேமரத்ன தேரரினால், 15 வயதான சிறுமி ஒருவர் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொலிஸார் இதுதொடர்பில் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுக்கத் தாமதித்திருந்த போதிலும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கையால் மேற்படி பிக்கு கைது செய்யப்பட்டார். குறிப்பாக, அதன் சட்ட அமலாக்கல் பிரிவின் பணிப்பாளர், சட்டத்தரணி சஜீவனி அபேகோனின் துணிச்சல்மிக்க நடவடிக்கை நாட்டு மக்களால் பெரிதும் சிலாகித்துப் பேசப்படுகின்றது.
தன்னை ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திவிட்டார் என்பதைப் பருவமடைந்த பெண்களே வெளியில் சொல்லத் தயங்குகின்ற ஒரு சமூகச் சூழலில், 15 வயதான சிறுமியும் அவரைச் சார்ந்தோரும் இந்த அநாகரிகச் செயலைச் சாதாரணமாக வெளிப்படுத்தியிருக்க மாட்டார்கள்.
அதற்குப் பின்னால் அளவிட முடியாத பெரிய வலி இருக்க வேண்டும். ஒரு பிரதான தேரர், அதுவும் அனுராதபுரம் அட்டமஸ்தானாதிபதி சிறு பிள்ளை ஒன்றைக் சீரழித்துள்ளார் என்ற விவகாரத்தை, சட்டத்தரணி சஜீவனி எந்தவொரு ஆதாரமும் இன்றி முன்னெடுத்துச் சென்றிருப்பார் என்று யாராவது கருதுவார்களென்றால், அவர்களைப் போன்ற முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது.
நீதிமன்றப் பிணையும் சலசலப்பும்:
கைது செய்யப்பட்ட பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இது நாட்டில் ஒருவித சலசலப்பையும், நீதித்துறையின் மீதான கேள்விகளையும் ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
எனினும், நீதிமன்றத்திற்குத் தேவை சட்ட அடிப்படைகளும் ஆதாரங்களும்தான்; ஒரு பொதுமகனைப் போல உணர்ச்சிவசப்பட்டு நீதிமன்றம் செயற்படுவதில்லை.
அந்த அடிப்படையிலேயே தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன; குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்குப் பாரிய தண்டனையொன்றை நீதிமன்றம் விதிக்கலாம் என்பதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.
அவருக்குப் பிணை வழங்கியதை விடவும், இப்படியான ஒரு கேடுகெட்ட செயலை ஒரு வயதான பௌத்த துறவி செய்திருக்கின்றார் என்பதையும்; அதுவும் ஒரு சிறு பிள்ளையின் வாழ்வை ஈவிரக்கமின்றிச் சீரழித்திருக்கின்றார் என்பதையுமே இலங்கை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை.
அசட்டுத் துணிச்சலுடன் இந்தச் சிறுமி சார்ந்தவர்களும், சிறுவர் பணியகமும் செயற்பட்டுக்கொண்டிருக்க, சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு தரப்பினர் ஏன் ஒரு சிறுமிக்கு எதிரான குற்றத்தைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை என்பதுதான் எழும் முக்கிய கேள்வியாகும்.
நீதியை நிலைநாட்டப் போவதாகவும், சட்டம் ஒழுங்கை எல்லோருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் என்.பி.பி. (NPP) அரசாங்கம் கூறிவருகின்ற நிலையில் இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இவ்விடயத்தில் அரசாங்கம் நீதியை நிலைநாட்டத் தயங்குகின்றதா என்ற சந்தேகமும் எழாமலில்லை.
பௌத்த பீடங்களுக்கு விழுந்த இழுக்கு:
ஹேமரத்ன தேரர்
காவி உடையை உடுத்திக்கொண்டு, ஊருக்கு உபதேசம் செய்துகொண்டு, பௌத்த பீடத்தின் அட்டமஸ்தானாதிபதி என்ற கௌரவமிக்க ஒரு பதவியில் இருந்துகொண்டு, ஹேமரத்ன தேரர் தனது பேத்தி வயதையொத்த சிறுமி மீது இப்படியொரு பாலியல் வன்கொடுமையைப் புரிந்திருப்பது உண்மையென்றால், அதனைப் போலப் படுபாதகச் செயல் வேறொன்றும் இருக்காது.
இது பௌத்த துறவிகளுக்கும், காவியுடையின் புனிதத்திற்கும் ஏற்படும் பெரிய இழுக்காகும். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒட்டுமொத்த பௌத்த பீடங்களும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைமை ஏற்படலாம். ஏனென்றால், சிங்கள மக்கள் உட்பட நாட்டில் உள்ள சித்தசுயாதீனமுள்ள எந்தவொரு பொதுமகனும் இந்தக் குற்றத்தை ஒருபோதும் மன்னித்துவிட மாட்டான்.
நிலைமை இப்படியிருக்க, ஹேமரத்ன தேரருக்கு ஆதரவாகப் பல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். நீதியை நிலைநாட்டுவதற்காகப் பெரும்பாலான சட்டத்தரணிகள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், அபத்தமான குற்றங்களைப் புரிந்தவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் சிலர் களமிறங்குகின்றமை சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
பௌத்த பிக்குகள் மற்றும் ஒரு சில அரசியல்வாதிகள் ஹேமரத்ன தேரருக்கு வக்காளத்து வாங்குகின்ற விதத்தில் கருத்துத் தெரிவிப்பதைக் காணமுடிகின்றது. நீதியின்படி அவர் தண்டிக்கப்படட்டும் அல்லது விடுதலை செய்யப்படட்டும் என்று விட்டுவிடாமல், அவர் மீதான கறைகளைக் கழுவுவதற்கு இவர்கள் வீணாக முயன்றுகொண்டிருக்கின்றனர்.
நாட்டில் இனவாதத்தைக் கக்கிய மற்றும், “சிங்கள மக்களுக்குக் கருவுண்டாகாமல் தடுக்க முஸ்லிம்கள் முயற்சிக்கின்றார்கள்” என்று கட்டுக்கதைகளைக் கூறி குழப்பத்தை ஏற்படுத்திய ஞானசார தேரர் போன்ற பிக்குகள், “இது ஒரு மனிதத் தவறு” என்ற கோணத்தில் கூறியிருப்பது, ஹேமரத்ன தேரர் செய்த காரியத்தை விடக் கேவலமானது.
ஆடைக்குள் மறையும் அதிகாரம்:
சிறுவர் துஷ்பிரயோகங்களும், பாலியல் வன்கொடுமைகளும் எல்லா இடங்களிலும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
பாலியல் லஞ்சம், பாலியல் சீண்டல்களுக்கு அளவே இல்லை; எல்லா விவகாரங்களும் வெளியில் வருவதும் இல்லை. ஆனால், அதனையும் மீறி ஒரு சிறுமி, அவளின் குடும்பம், அவளைச் சூழ உள்ளவர்கள் தைரியமாக முன்வருகின்றார்கள் என்றால் அது சர்வசாதாரணமான விடயமல்ல.
நாட்டுக்கு ஒழுக்கத்தைச் சொல்லி, முன்மாதிரியாகச் செயற்பட வேண்டியவர்கள் இப்படித் தரங்கெட்டுச் செயற்படுவதை எக்காரணம் கொண்டும் பொறுத்துக்கொள்ள முடியாது.
நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதன்முறையல்ல. பௌத்த துறவிகள் மட்டுமன்றி, ஏனைய சமயங்களைச் சேர்ந்த மதபோதகர்கள் ஒரு சிலரும் பாலியல் ரீதியான அல்லது குற்றவியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால், ஒரு விபச்சாரி, குடிகாரன், தறிகெட்ட இளைஞன், போதைப்பொருள் வியாபாரி அல்லது ஊரில் பெண்பித்தன் என அறியப்பட்டவன் இப்படியான கேடுகெட்ட காரியங்களைச் செய்வதற்கும்; பொறுப்பான பதவியில் உள்ள மதகுரு, ஆசிரியர், தந்தை அல்லது குடும்ப உறுப்பினர் இவ்வாறான அபத்தங்களில் ஈடுபடுவதற்கும் பெரிய வித்தியாசமுள்ளது. இதனைக் கண்டும்காணாது போல் விடுவது, இப்படியான குற்றங்கள் சமுதாயத்தில் பல்கிப் பெருகுவதற்கே நிச்சயம் வழிவகுக்கும்.
அதிகாரத்திற்குள், ஆடைக்குள், மத அடையாளங்களுக்குள் மறைந்துகொண்டு எதுவுமே செய்யலாம் என்ற நிலைமை உருவானால், இலங்கைச் சூழலில் ஒழுக்கமுள்ள சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புவது முடியாத காரியமாக மாறிவிடும். ஆகவே, அனுராதபுரம் சம்பவத்தைக் கண்டும்காணாதது போல விட்டுவிட முடியாது; ‘பத்தோடு பதினொன்று’ என்று கூறிவிட்டு கடந்து செல்லவும் முடியாது.
பின்வாங்கக் கூடாது அரசாங்கம்:
அந்தச் சிறுமி பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு முழுமையான நீதி வேண்டும்; காவியுடைக்குள் ஒளிந்திருக்கும் கயமைத்தனம் வெளிக்கொணரப்பட வேண்டும். நாட்டில் பௌத்த கொள்கைகளையும் தார்மீகத்தையும் பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள பௌத்த பீடங்கள், இவ்விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்;
பதில் அட்டமஸ்தானாதிபதி ஒருவரை நியமித்தால் மட்டும் போதாது. சில பௌத்த பிக்குகளுக்கு மறைமுக நிகழ்ச்சி நிரல்கள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் காவியுடையின் மரியாதையைக் காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.
மறுபுறத்தில், ஒரு பெண்பிள்ளையைச் சீரழித்தவர் பிக்கு என்பதற்காக அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று சாதாரண சிங்கள மக்கள் ஒருபோதும் நினைக்கமாட்டார்கள்; ஏனெனில், எல்லோரது வீட்டிலும் சிறு பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
எனவே, பொது ஒழுக்கத்தையும் சட்டம் ஒழுங்கையும் பேணுவதாகக் கூறுகின்ற அரசாங்கம், எவ்வித பாரபட்சமுமின்றிச் சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் துணைநிற்க வேண்டும். “பௌத்த பிக்குவைச் சிறையிலடைத்தால் ஏனைய பௌத்த துறவிகளின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும்” அல்லது “சிங்கள மக்கள் குழம்புவார்கள்” என்று எண்ணி அரசாங்கம் பின்வாங்கக் கூடாது.
இந்தச் சிறுமியின் விடயத்தில் சட்டமும், ஒழுங்கும், நீதியும் சரிவர நிலைநாட்டப்படவில்லை என்றால், இன்னும் பல சிறுமிகளை நாம் பலிகொடுக்க வேண்டிவரலாம் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.




