மாகாண சபைத் தேர்தலை அரசு திட்டமிட்டு பிற்படுத்துகிறது –

 

மாகாண சபையை பலப்படுத்தி தமிழ் மக்களுகான அதிகாரப் பரவலாக்களை உறுதிப்படுத்துவதாக தேர்தல் காலங்களில் பிரசாரம் செய்து வந்த அரசாங்கம் தற்போது மாகாண சபை தேர்தலை நடத்தாமல் திட்டமிட்டு பிற்படுத்தி வருகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

ஜூலை கலவரத்தை சரி செய்துகொள்ளும் வகையில் ஜேஆர். தமிழ் மக்களை ஆட்சியில் பங்காளியாக்கும் வகையில், கொழும்பை மையப்படுத்தியிருந்த அதிகாரத்தை பரவலாக்க மாகாணசபை முறையை அவர் கொண்டுவந்தார். குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களை ஆட்சியில் பங்காளியாக்கிக்கொண்டும். நாட்டின் ஏனைய மாகாண மக்களும் அதிகாரத்தை பரலாக்கும் வகையிலே மாகாணசபை முறையை கொண்டுவந்தார்.

ஆனால் ஜேவிபி இந்த மாகாணசபை முறைக்கு இனக்கம் தெரிவித்தார்களா? தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்குவதை ஆதரித்தார்களா? இல்லை. மாகாணசபை முறையை கொண்டுவரும்போது, நாட்டை பிளவு படுத்துவதாகவே இவர்கள் தெரிவித்தார்கள். மாகாணசபை வேண்டாம் என்றார்கள். வாக்களித்தால் கொலை செய்வதாக அச்சுறுத்தினீர்கள். தேசப்பற்று மக்கள் அமைப்பை உருவாக்கி கொலை செய்ய ஆரம்பித்தார்கள்.தமிழ் மக்களுக்கு ஏதாவது உரிமையை வழங்குவதாக இருந்தால் அதற்கு எதிராகவே இவர்கள் இருந்தார்கள்.

அத்துடன் தேசிய ஐக்கியத்தை கட்டி எழுப்புவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது ஆனால் அதற்கான எந்த வேலை திட்டத்தையும் இதுவரை செய்யவில்லை .குறிப்பாக 13 வது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட மாகாண சபை தேர்தலை கூட நடத்தாமல் பிற்படுத்தி வருகிறார்கள்.

தேசிய ஐக்கியத்தை கட்டி எழுப்புவது மிகவும் முக்கியமாகும் அதன் மூலமே நாட்டை கட்டி எழுப்ப முடியும். எந்த அரசாங்கமாக இருந்தாலும் தேசிய ஐக்கியத்தை கட்டி எழுப்புவது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். அதனை செய்ய வேண்டும். அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை கிடைத்திருப்பது இந்த தேசிய ஐக்கியத்தை கட்டி எழுப்பதற்காகவாகும் .என்றாலும் அரசாங்கம் அதற்கான எந்த வேலை திட்டத்தையும் இதுவரை முன் வைக்கவில்லை.

அதேபோன்று கொவிட் காலத்தில் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு அனுமதிக்காமல் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அரச அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அதிகாரிகளை தங்களது அமைச்சுகளின் செயலாளர்களாக நியமித்துக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு இருக்கையில் அரசாங்கம் எவ்வாறு இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும்.

எனவே அரசாங்கம் தேசிய ஐக்கியத்தை கட்டி எழுப்பதற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் அதற்கான ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றோம் என்றார்.