ஜெர்மன் நாஜி சர்வாதிகாரியான ஹிட்லரின் டிஎன்ஏ ஆய்வு முடிவு-புதிய தகவல்கள் வெளியீடு!

 

ஜெர்மன் நாஜி சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லரின் இரத்த மாதிரிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட டிஎன்ஏ-வை இங்கிலாந்தின் பிரபல மரபியல் நிபுணர் பேராசிரியர் துரி கிங் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சிக்குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த மரபணு பரிசோதனையின் முடிவில் ஹிட்லருக்கு ‘கால்மேன் சப்ரோம்’ என்ற அரிய வகை மரபணுக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்க்குறி பருவமடைதலைத் தாமதப்படுத்துவதுடன், பாலியல் உறுப்புகளின் வளர்ச்சிக் குறைபாட்டிற்கும் வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டென்மார்க்கின் ஆர்ஹஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் டிட்டே டெமோன்டிஸ் மேற்கொண்ட கூடுதல் மரபணு பகுப்பாய்வில், ஹிட்லருக்கு மனநோய் மற்றும் மனநிலைக் கோளாறுகளுக்கான மரபியல் அறிகுறிகள் அதிகமாக இருந்ததும் தெரியவந்தது. இருப்பினும், அவரது மரபணு நிலையை வைத்து அவரது கொடூரமான குற்றங்களையோ அல்லது வரலாற்று முடிவுகளையோ முழுமையாக நியாயப்படுத்த முடியாது என விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும் பல தசாப்தங்களாகப் பரப்பப்பட்டு வந்த ஹிட்லரின் யூதப் பாரம்பரியம் பற்றிய வதந்திகளுக்கும் இந்த டிஎன்ஏ ஆய்வு முடிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நபர்களின் உடலியல் ரகசியங்களை நவீன மரபியல் தொழில்நுட்பம் மூலம் கண்டறிவது அறிவியல் ரீதியாக ஒரு முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரபியல் ஆபத்துக் காரணிகள் ஒரு நபரின் நடத்தையையோ அல்லது சித்தாந்தத்தையோ நேரடியாகத் தீர்மானிப்பதில்லை என பேராசிரியர் சர் சைமன் பரோன் கோஹன் போன்ற முன்னணி ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஹிட்லர் தொடர்பான இந்த ஆய்வின் விரிவான விவரங்கள் ஆவணப்படமாகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும் வெளியிடப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த மரபணு ஆய்வறிக்கை தொடர்பான கருத்துகள் உலகளவில் உள்ள வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

வரலாற்று நாயகர்களின் உயிரியல் தரவுகளைக் கையாள்வதில் உள்ள அறிவியல் மற்றும் அறநெறி சார்ந்த அணுகுமுறைகள் குறித்து மேலும் பல ஆராய்ச்சிகள் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது