ஸ்பெயின் நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள நோடெய்ன் நகரில் நடைபெற்ற பாரம்பரிய திருவிழாவின் தொடக்க நிகழ்வின் போது எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. செயின்ட் மைக்கேல் திருவிழாவைத் தொடங்கி வைப்பதற்காக வாணவேடிக்கைகள் வெடிக்கப்பட்ட போது, அவை எதிர்பாராதவிதமாக மக்கள் கூட்டத்திற்குள் பாய்ந்து வெடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
முதல் வாணவேடிக்கையில் இருந்து பறந்த தீப்பொறிகள் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மற்ற வெடிகளையும் தற்செயலாகப் பற்றவைத்ததால், அந்தப் பட்டாசுகள் மேல்நோக்கிச் செல்வதற்குப் பதிலாகக் கீழே சதுக்கத்தில் திரண்டிருந்த பொதுமக்களை நோக்கித் திசைமாறி வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு உற்சாகமாகக் கூடிருந்த மக்கள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பீதியடைந்து நாலாபுறமும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 41, 53 மற்றும் 54 வயதுடைய மூன்று நபர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சத்தத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி, காது வலி மற்றும் லேசான தீக்காயங்களுக்கு ஆளான மற்ற 47 பேருக்கு உள்ளூர் மருத்துவ மையங்களில் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
வழக்கமான பாரம்பரிய உடைகளுடன் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்த பொதுமக்களிடையே இந்த விபத்து பெரிய சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவிலான பொதுக் கூட்டங்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் வாணவேடிக்கைகளைக் கையாளும் போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு முறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்துக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.



