பிரான்ஸ் : பாரிஸ் வீதிகளில் திரண்ட ஒரு லட்சம் பேர் தீவிரமடையும் போராட்டம்

 

பிரான்ஸ் முழுவதும் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சனிக்கிழமையன்று பாரிஸ் நகரில் சுமார் 1 லட்சம் மக்கள் திரண்டு பேரணியாக சென்றனர். இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீரைப் பீய்ச்சி அடித்துக் கூட்டத்தைக் கலைத்தனர்.

கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் என 70,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பாரிஸில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக லூவ்ரே, ஆர்சே, பிக்காசோ அருங்காட்சியகம் மற்றும் கிராண்ட் பலாஸ் உள்ளிட்ட பல முக்கிய கலாச்சார மையங்கள் சனிக்கிழமையன்று மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டன. மேலும், நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுப் போக்குவரத்து நெறிப்படுத்தப்பட்டது.

கடை உரிமையாளர்கள் தங்களது வணிக நிறுவனங்களைப் பாதுகாப்பதற்காக ஜன்னல்களில் மரப்பலகைகளைக் கொண்டு பாதுகாப்புக் கட்டமைப்புகளை ஏற்படுத்தியதுடன், கூடுதல் காவலாளிகளையும் பணியமர்த்தினர். லூயிஸ் உய்ட்டன், டியோர் மற்றும் பல்காரி போன்ற முன்னணி பிராண்டுகளின் கடைகள் அமைந்துள்ள வாண்டோம் சதுக்கப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர், ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் மூலமாக முக்கியப் பகுதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்ட சம்பவங்கள் குறித்துக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

பாரிஸ் மட்டுமின்றி லியான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தடை செய்யப்பட்ட பகுதியில் கூடிக் கலவரத்தில் ஈடுபட முயன்றவர்களைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

பிரான்ஸ் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளை எதிர்த்து கடந்த மாதம் உயர்நிலைப்பள்ளி மாணவர்களால் இந்தப் போராட்டங்கள் தொடங்கப்பட்டன. தற்போது இப்போராட்டம் பரவி, வாழ்க்கைச் செலவின உயர்வு, ஊதிய உயர்வு, பொதுச் சேவைகள் மற்றும் பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிரான தேசிய அளவிலான பெரிய போராட்டமாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.