கோவை மாவட்டம், ஆளியாற்றின் கரையில் அமணேஸ்வரர் ஆலயங்கள் எனும் பெயரில் இருபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் உள்ளன. இவை திருமூர்த்திமலை அணமலிங்கேஸ்வரர் ஆலயத்தினைப் போற்றும் வகையில், ஆங்காங்கு அமைக்கப் பட்டுள்ளன. இதில் பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் ஆகிய மூவரும் யோகத்தில் வீற்றிருக்கின்றனர். இவர்கள் தம்மைப் படைத்து முத்தொழிலை அளித்த பரமசிவத்தைத் தியானித்துக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகின்றனர். கோவை மாவட்டத்தில் சில ஊர்களில் யோக நாராயணர் திருவுருவம் வழிபாட்டில் உள்ளது. சிதம்பரத்தை அடுத்த எரும்பூர் கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் கோட்டங்களில் யோகப் பிரம்மன், யோக விஷ்ணு, யோக ருத்திரர் ஆகிய மும்மூர்த்திகளை அமைத்திருந்தனர். யோக விஷ்ணுவின் திருவுருவம் இன்று இல்லை யோக ருத்திரர் திருவுருவம் அண்ணாமலையார் எனும் பெயரில் உள்ளது.
கோட்டோவியத்தில் கயிலாயக்காட்சி
சைவ சமய புராண நூல்களில், கயிலை மலையின் சிறப்பையும் பெருமைகளையும் விளக்கும் பகுதி இடம்பெற்றுள்ளதைக் காணலாம். அந்த நூல்கள் அச்சு வாகனம் ஏறிய போது அதில் குறிப்பிட்ட காட்சிகளை விளக்கும் வகையில் கோட்டோவியங்கள் இடம் பெற்றன. அத்தகைய கோட்டோ வியங்களில் இது ஒன்றாகும். இதில் நெடிய கயிலாய மலை காட்டப் பட்டுள்ளது. மலையின் உச்சியில் மூன்று கொலு மண்டபங்கள் உள்ளன. நடுவில் உள்ளதில் உமையுடன் சிவபெருமானும், ஒன்றில் விநாயகரும் மற்றதில் சுப்பிரமண்ய சுவாமியும் எழுந்தருளியுள்ளனர். மலைமீது சூரியன் பிரம்மன், இந்திரன், சந்திரன், விஷ்ணு முதலிய தேவர்கள் நெருங்கி நின்றுள்ளனர். அவர்களைப் பொற்பிரம்பால் அதட்டி அதிகார நந்தி ஒழுங்குபடுத்துகின்றார். நந்தியின் வாயிலிருந்து கங்கை பொங்கி ஓடுகிறாள். கயிலை மலைக்குச் செல்லும் படிகள் இதில் காட்டப் பட்டுள்ளது. இதில் வியாக்ர பாதரும் பதஞ்சலியும் இடம் பெற்றுள்ளனர்.
ராஜயோக சிம்ம தட்சிணாமூர்த்தி
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தி ஒருகாலை சிங்க வாகனத்தில் வைத்துள்ளார். மற்றொரு கால் வழக்கம் போல் முயல்கள் மீது உள்ளது. இதுபோன்ற அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது. மேலும், இவரை அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி என்பர். காரணம் என்னவென்றால் இவரது ஒருகால் அம்பிகையின் வாகனமான சிம்மத்தின் மீதும், மற்றொரு கால் நடராஜப் பெருமானின் காலடியில் உள்ள முயலகன் மீதும் உள்ளதாலும் ஆகும். மேலும் இவரது ஒருபுறம் ஆண்மையின் மிடுக்கும் மறுபுறம் பெண்மையின் நளினமும் இத்திருவுருவில் தெரிகிறது.
எழுந்து நிற்கும் நந்தி
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் தியாகராஜ பெருமாளின் முன்பு இருக்கும் நந்தி எழுந்து நின்ற வண்ணம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சமயம் சுந்தரருக்காக தூது சென்ற பெருமான், அவசரத்தில் நந்தி மீது அமர்ந்து செல்லாமல் திருவீதிகளில் நடந்தே சென்றார். இனி பெருமானை நடக்க விடக்கூடாது. நந்தியில் அமர்ந்து செல்வதற்காக நந்திதேவன் தயாராக எழும்பியே நிற்கிறார் என்பது ஐதீகம்.



