மானிடப் பிறவிகள் கடனில்லாத வாழ்க்கை வாழ முடியுமா?அது சாத்தியமே இல்லை

 

மானிடப் பிறவி எடுத்த எவருடைய வாழ்க்கையிலும் கடன்களே இல்லாமல் இருக்குமா என்றால், அது சாத்தியமே இல்லை. எண்களில் ஐந்திற்குப் பிறகு நேரடியாக ஏழு வருவதில்லை; இடையே ஆறு என்ற எண் இருக்கிறது. அந்த ஆறைக் கடந்துதான் நாம் ஏழிற்கு வரவேண்டும். அதேபோலத்தான் ஜோதிடத்திலும், வாழ்க்கையிலும் ஐந்தாம் பாவத்தைக் கடந்தே ஆறாம் பாவத்திற்குச் சென்று ஏழை அடைய முடியும். அந்த ஆறாம் பாவத்தை நாம் எவ்வாறு எதிர்கொள்கிறோம், எப்படிக் கடக்கிறோம் என்பதில்தான் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையின் அமைப்பே அடங்கியிருக்கிறது.

ஆறாம் பாவம்: ருண பாவம் (கடன் தத்துவம்)

ஜோதிடத்தின் 12 பாவங்களில் ஆறாம் பாவம் என்பது மிக முக்கியமான இடம் வகிக்கிறது. இது `ருண, ரோக, சத்ரு ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. ருணம் என்றால் கடன்.

இவ்வுலகில் கடன் இல்லாத மனிதர்கள் இருக்க முடியுமா? நாம் பிறப்பெடுத்ததே ஏதோ ஒரு கடனைக் கழிப்பதற்காகத் தானே! முன்ஜென்மத்தில் நாம் செய்த பாவமோ, புண்ணியமோ ஒருவிதக் கடனாக நம் கூடவே பிறக்கிறது. அந்தப் பிராரப்த கர்மாவைக் கழித்து ஆன்மாவைச் சுத்தப்படுத்துவதற்காகவே இந்த வாழ்க்கை நமக்கு வழங்கப்பட்டுள்ளது. சாஸ்திரங்கள் மனிதப் பிறவிக்கு பல வகையான கடன்களைக் குறிப்பிடுகின்றன:

*தேவ கடன்:இறை வழிபாடுகளையும் புண்ணிய காரியங்களையும் செய்யத் தவறுவது.

* பித்ரு கடன்: முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும், தர்ப்பணங்களையும்

செய்யாமல் விடுவது.

*ரிஷி கடன்: மகான்கள் மற்றும் குருமார்களின் உபதேசங்களைப் பின்பற்றாமல் வாழ்வது.

எனவே, “எனக்கு வாழ்க்கையில் எந்தக் கடனுமே இல்லை’’ என்று யாராலும் சொல்ல முடியாது.

2. பொருளாதாரக் கடனும் அதன் மூன்று நிலைகளும்

இனி, உலகியல் ரீதியான பொருளாதாரக் கடனைப் பற்றிப் பார்ப்போம். இதையும் தீர்மானிப்பது இந்த ஆறாம் பாவமே ஆகும். மனித வாழ்க்கையில் கடன் என்பது மூன்று நிலைகளில் வருகிறது:

* பிறக்கும்போதே கடன்,

* வாழும் போது கடன்,

*சாகும்போது கடன் (அ) பிறக்கும் போதே கடன் (பூர்வீகக் கடன் – பிராரப்த கர்மா).

சிலர் பிறக்கும் பொழுதே கோடிக்கணக்கான சொத்துக்களோடு, தங்கக் கரண்டியோடு பிறப்பார்கள். ஆனால், சிலர் பிறக்கும் பொழுதே மிகப்பெரிய கடன் அமைப்போடும், வறுமையோடும் பிறப்பார்கள். அவர்கள் வளர்ந்த பிறகு என்னதான் ஒழுங்கான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர்களின் முன்னோர்கள் வைத்துவிட்டுச் சென்ற கடன் தீர்ந்தால்தானே அவர்கள் வாழ்க்கையில் தலைதூக்க முடியும்!

கிரக நிலை (பிறக்கும் போதே கடன் அமைப்பு)

*பித்ருகாரகனாகிய சூரியன், பூர்வ புண்ணிய அதிபதியான 5-ஆம் அதிபதி அல்லது லக்னாதிபதி ஆகியோர் 6, 8, 12ல் மறைந்து, ராகு – கேது அல்லது சனியால் பீடிக்கப்பட்டிருத்தல்.

*9-ஆம் அதிபதி (தந்தை/பூர்வீகம்) 6-ஆம் அதிபதியுடன் சேர்ந்து 6-ஆம் வீட்டில் அமர்வது அல்லது 6-ஆம் அதிபதி 9-இல் அமர்ந்து பாபக் கிரகங்களின் பார்வையைப் பெறுவது.

* லக்னம் மற்றும் 2-ஆம் பாவம் (தனம்) கடுமையாக அடிவாங்கி, 6-ஆம் அதிபதியின் தசா/புத்தி பிறப்பிலேயே தொடங்குவது. இதன் காரணமாக, இளமையிலேயே தந்தை இழப்பு, குடும்பத்தைப் பராமரிக்கும் பாரம் சிறு வயதிலேயே தோளில் விழுவது போன்ற கடுமையான சூழல்கள் உருவாகின்றன.

இதிலிருந்து மீள புத்திசாலித்தனமும், தொடர் உழைப்பும், பொறுமையும் மட்டுமே வழிகாட்டிகளாகும். (அ) வாழும்போது தோன்றும் கடன் (சுய தவறு – வியாதிகளால் கடன்)

நன்றாகத் பிறந்தவர்கள்கூட, நடுவயதில் சுய தவறுகளாலோ அல்லது எதிர்பாராத நோய்களாலோ கடனில் மூழ்குகிறார்கள்.

1. சுய தவறுகளால் கடன்:

விவரம் தெரியாமல் வியாபாரத்தில் முதலீடு செய்வது, வாழத் தெரியாமல் ஆடம்பரமாகத் தலைகால் புரியாமல் வாழ்வது, சூது/பங்குச்சந்தையில் வீழ்வது. 2-ஆம் அதிபதி (தனம்) மற்றும் 11-ஆம் அதிபதி (லாபம்) கெட்டு, 6-ஆம் அதிபதி வலுப்பெற்று சுக்கிரன் அல்லது புதனுடன் தவறாகத் தொடர்பு கொள்வது. லக்னாதிபதி பலவீனமாகி, 6-ஆம் இடத்தில் பாபக் கிரகங்கள் (ராகு, செவ்வாய்) அமர்ந்து துர்யோகங்களை இயக்குவது.

2. வைத்தியத்தினால் கடன் (ரோகம்):

பிறந்ததிலிருந்து நோய், அல்லது நடுவயதில் திடீரென வரும் கொடிய வியாதிகளால் சொத்துக்களை விற்றும், கடன் வாங்கியும் மருத்துவம் பார்க்கும் நிலை. 6-ஆம் பாவம் ஆரோக்கியத்தையும் குறிக்கும், கடனையும் குறிக்கும். லக்னாதிபதியும், லக்னமும் பலமற்று, 6-ஆம் பாவாதிபதி லக்னத்தைப் பார்ப்பது அல்லது லக்னத்தில் அமர்வது. மேலும் 6-ஆம் அதிபதியுடன் மாந்தி, ராகு போன்ற அசுப கிரகங்கள் இணைவது.

3. வழக்குகளால் கடன் (சத்ரு பாவம்)

சிலர் வீண் வழக்குகளில் மாட்டி, “ஜெயித்து விடுவோம்’’ என்று நீதிமன்றப் படிகளை ஏறி இறங்கி, தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்து கடனாளியாவார்கள். 6-ஆம் அதிபதியுடன் செவ்வாய் (வழக்கு/பூமி) சேர்ந்து 6 அல்லது 8ல் வலுப்பெறுவது. 6-ஆம் பாவம் மற்றும் 6-ஆம் அதிபதி 10, 11-ஆம்

அதிபதிகளோடு பகைத் தொடர்பு கொள்வது

ஆறாம் பாவத்தின் நேர் எதிர் பாகம் 12-ஆம் பாவம் ஆகும். 12-ஆம் பாவம் என்பது அயன, சயன, போக ஸ்தானம் அதாவது நிம்மதியான தூக்கம், விரயம் மற்றும் நிம்மதியைக் குறிக்கும் இடம். ஜோதிட விதியின்படி, 6-ஆம் பாவம் அசுபத்துவமாகி வலிமை பெற்றால், 12-ஆம் பாவம் தானாகவே கெட்டுவிடும். கடன், நோய், பகை என்ற ஆறாம் பாவப் பிரச்னைகள் தலைதூக்கும் போது, மனிதனுக்கு இரவில் நிம்மதியான தூக்கம் பறந்துபோகிறது; மன அமைதி சீர்குலைகிறது.

கடன் சிக்கல்களிலிருந்து மீளும் ஜோதிட நிவர்த்தி வழிகள்

ஏழாம் பாவத்தின் பலனைப் பெறுதல் (6-க்கு 2-ஆம் இடம்)

ஏழாம் பாவம் என்பது மனைவி, வாழ்க்கைத் துணை, மற்றும் கூட்டுத் தொழில் நண்பர்களைக் குறிக்கும். ஆறாம் பாவத்திற்கு ஏழாம் பாவம் என்பது தன ஸ்தானம் (2-ஆம் இடம்).

நற்குணமுள்ள மனைவி மற்றும் உண்மையுள்ள நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால், அல்லது அவர்களின் ஆதரவைப் பெற்றால், 6-ஆம் பாவத்தின் வீரியம் குறைந்து கடன் அடங்கும்.

ஐந்தாம் பாவத்தை வலுப்படுத்துதல் (பூர்வ புண்ணிய பலன்)

ஐந்தாம் பாவத்திற்கு 2-ஆம் இடமாக 6-ஆம் பாவம் அமைகிறது. எனவே, நம் பூர்வ புண்ணிய பலனை அதிகரிக்க வேண்டும்.

குலதெய்வ வழிபாடு: ஆண்டிற்கு ஒருமுறையாவது குடும்பத்தோடு குலதெய்வக் கோயிலுக்குச் சென்று முடி காணிக்கை, அபிஷேகம் செய்து வழிபடுதல் வேண்டும்.

இஷ்ட தெய்வ வழிபாடு: தினமும் வீட்டில் விளக்கேற்றி இஷ்ட தெய்வங்களை வழிபடுவது பூர்வ புண்ணிய பலனைத் தூண்டி, கடன் தீர்க்கும் வழியைக் காட்டும்.

லக்ன பாவத்தை வலுப்படுத்துதல் (ஆன்ம பலம்

ஆறாம் பாவத்திற்கு நேர் எட்டாம் இடம் லக்ன பாவம் (1-ஆம் இடம்) ஆகும். எட்டாம் இடம் என்பது லக்னத்திற்கு `மாரக/அழிவைக்’ கொடுக்கும் இடம். எனவே, லக்ன பாவத்தை வலுப்படுத்தினால் 6-ஆம் பாவம் அழிந்துவிடும். லக்னம் என்பது சுய பலம், ஆன்ம பலம், தன்னம்பிக்கை, மற்றும் சான்றோர்களின் ஆசி.

“இனி எந்தச் சூழலிலும் தேவையற்ற கடன் வாங்க மாட்டேன்’’ என்ற வைராக்கியத்தை மனதிற்குள் வளர்ப்பது லக்னத்தின் பலமாகும். பெரியோர்களையும், பெற்றோரையும் மதிக்கத் தொடங்கும் போது லக்னம் வலிமை பெறுகிறது. லக்னம் வலிமை பெற்றால் 6-ஆம் பாவம் தன் வீரியத்தை இழக்கும். லக்ன பலத்தையும் பூர்வ புண்ணிய பலத்தையும் பெருக்கிக் கொண்டு செயலாற்றினால், ருண விமோசனம் நிச்சயம் சாத்தியமே!