கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இஸ்ரேலியத் தேர்தல்கள் எவ்விதத் தெளிவான பெரும்பான்மையும் கிடைக்கப்பெறாத நிலையில், ஒரு இழுபறியுடன் முடிவடைந்துள்ளன.
அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் தேர்தலில் மொத்தம் 19 இடங்களைக் கைப்பற்றியுள்ள ‘ராஆம்’ (Ra’am) மற்றும் ‘ஜொயிண்ட் லிஸ்ட்’ (Joint List) ஆகிய இரண்டு முக்கிய அரபு கட்சிகளும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அதிகாரத்திலிருந்து அகற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) தலைமையிலான எதிர் அணிக்கு ஆதரவளிக்கக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
‘டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ (Times of Israel) செய்தி அறிக்கையின்படி, ‘ஜொயிண்ட் லிஸ்ட்’ (Joint List) கட்சி, அரசாங்கத்தில் நேரடியாகப் பங்கேற்க விரும்பவில்லை என்றாலும், பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிரான கட்சிகளுக்கு வெளியிலிருந்து ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.
“இந்த மோசமான அரசாங்கத்தைக் கவிழ்க்க விரும்பும் எவருக்கும் நாங்கள் உதவ விரும்புகிறோம்ஸ அதற்குப் பதிலாக வேறொரு அரசாங்கத்தைக் கொண்டுவர விரும்புகிறோம்.
நாங்கள் ஒரு மாற்றத்தின் ஒரு பகுதியாக, நம்பிக்கையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம்” என்று அரபு இனத்தைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் (MK) அஹமட் திபி கூறியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அவரை ‘ஜொயிண்ட் லிஸ்ட்’ கட்சியின் இரண்டாவது முக்கிய நபர் என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், அரபு அரசியல் இயக்கத்தின் முக்கிய பிரமுகரான ஜாஃபர் ஃபரா, ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகையிடம், ஐசன்கோட் தலைமையிலான எதிர்க்கட்சி அணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதை ராஆம் மற்றும் ஜொயின்ட் லிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிடம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.
அவர்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையின் (IDF) முன்னாள் தலைமைத் தளபதியான காடி ஐசன்கோட்டை அடுத்த பிரதமராகப் பரிந்துரைப்பார்கள் என்றும் ஃபரா கூறினார்.
2023 ஹமாஸ் தாக்குதலுக்குப் பின்னர் இஸ்ரேல் தனது முதல் தேர்தலை கடந்த வாரம் கண்டது.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நெதன்யாகுவை எதிர்க்கும் யூத பெரும்பான்மைக் கட்சிகள் 48 இடங்களை வென்றன, அதே நேரத்தில் இரண்டு அரபு பெரும்பான்மைக் கட்சிகளான ராஆம் மற்றும் ஜொயிண்ட் லிஸ்ட் ஆகியவை இணைந்து 19 இடங்களைப் பெற்றன.
நெதன்யாகுவின் அணி 53 இடங்களை வென்றது, இது முன்பு அவர்கள் பெற்றிருந்த 68 இடங்களை விட கணிசமாகக் குறைவு.
இருப்பினும், 120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றமான நெசெட்டில் எந்தக் கட்சியாலும் 61 இடங்கள் என்ற பெரும்பான்மையைத் தாண்ட முடியவில்லை.
இந்த நிலையில் ஐசன்கோட்டின் அணிக்கும் அரபு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி, நெதன்யாகுவுக்கு எதிரான அணிக்கு 67 இடங்கள் என்ற வசதியான பெரும்பான்மையை வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



