தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் மாதங்களில் அமெரிக்காவுக்கும் உலகச் சந்தைகளுக்கும் பல லட்சம் டன் டீசல் எரிபொருளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு ரஷ்ய எரிபொருளை இறக்குமதி செய்ய டொனால்ட் டிரம்ப் எடுத்துள்ள முடிவு, அவரது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுகிறது.
மூன்று வாரங்களுக்கு முன்புதான், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது புதிய அமெரிக்கத் தடைகள் மற்றும் வரிகளை விதிக்க அனுமதிக்கும் சட்டத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
ஆனால், தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வரும் மாதங்களில் அமெரிக்காவுக்கும் உலகச் சந்தைகளுக்கும் பல லட்சம் டன் டீசல் எரிபொருளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இரான் போரால் ஏற்பட்டுள்ள அரசியல் விளைவுகளையும் உலகளாவிய எரிசக்தி விலைகளில் அதன் தாக்கத்தையும் சமாளிக்க டிரம்ப் போராடி வரும் சூழலில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் அதிகரித்த விலைகளாலும், அதன் தொடர்ச்சியாக அனைத்துப் பொருட்களின் விலைகளிலும் ஏற்பட்ட பணவீக்கத்தாலும் பொதுமக்கள் மத்தியில் டிரம்பின் செல்வாக்கு சரிந்துள்ளது.
விவசாய இயந்திரங்களை இயக்கவும், விளைபொருட்களைச் சந்தைகளுக்குக் கொண்டு செல்லவும் டீசலைப் பெரிதும் சார்ந்துள்ள அமெரிக்காவின் விவசாய மாகாணங்களில் போரின் தாக்கம் தீவிரமாக உணரப்பட்டுள்ளது.
அயோவா, கன்சாஸ், டெக்சாஸ் மற்றும் ஓஹியோ போன்ற மாகாணங்கள், எதிர்வரும் தேர்தல்களில் எதிர்பாராத அரசியல் போட்டிக்களங்களாக மாறியுள்ளன.
இந்தத் தேர்தல்களின் முடிவுகளே, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டை குடியரசுக் கட்சி தொடர்ந்து தக்கவைக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.
கடந்த பல மாதங்களாக, தனது கட்சி எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடியைக் குறைப்பதற்கான வழிகளை அமெரிக்க அதிபர் தேடி வருகிறார்.
சமீபத்தில், ஐரோப்பிய நட்பு நாடுகள் தங்களது எண்ணெய் இருப்புகளை மேலும் பயன்படுத்த வேண்டும் என்று அவர் அழுத்தம் கொடுத்தார்.
எரிபொருள் மீதான மத்திய அரசின் வரிகளை அவர் ஒத்திவைத்தார். விவசாயப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருளை மாகாணங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்துக்கும் பயன்படுத்த அனுமதி அளித்தார்.
மேலும், இடைக்காலத் தேர்தல் முடியும் வரை இரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்க மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் ஏற்படுத்தும் அரசியல் தாக்கத்தை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருப்பது வழக்கத்திற்கு மாறானதாகும்.
ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள டிரம்ப் எடுத்துள்ள முடிவு, சமீபத்திய மற்றும் மிகவும் வியத்தகு முயற்சியாகும்.
ரஷ்யாவுடனான இந்தப் புதிய ஒப்பந்தம், தூதரக ரீதியாகச் சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், பொருளாதார நிவாரணம் விரைவில் கிடைக்கும் என்ற தனது வாக்குறுதி வெறும் வார்த்தையல்ல என்பதை அமெரிக்க வாக்காளர்களை நம்பவைக்க இந்த ஒப்பந்தம் உதவும் என டிரம்ப் நம்புகிறார்.
டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிடும் பதிவுகள் பெரும்பாலும் முழுமையான தகவல்களை வழங்குவதில்லை.
உலகச் சந்தைக்கு ரஷ்யா இந்த எரிபொருளை எவ்வாறு வழங்கும், இதற்குப் பதிலாகத் தனக்குத் தேவையான அந்நியச் செலாவணியைத் தவிர வேறு என்ன பலன்களைப் பெறும் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை.
இந்த ஒப்பந்தம், ரஷ்யாவின் போருக்கான நிதி ஆதாரங்களுக்கு அமெரிக்க அரசு தற்போது உதவி வருகிறது என்று ஐரோப்பிய நட்பு நாடுகளும் அமெரிக்க அரசியல்வாதிகளும் விமர்சிப்பதற்கு வழிவகுத்துள்ளது.
யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி, இந்த ஒப்பந்தத்தைப் புதினுக்கு வழங்கப்பட்ட ஒரு “பரிசு” என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதிலாக ரஷ்யா “பயங்கரவாதத்தையும் நம்பிக்கை துரோகத்தையும்” வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
“ரஷ்யா பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிப்பது, முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய ஒரு போரை நீடிப்பதற்கான முதலீடாகும்” என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த நடவடிக்கை தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதும் உறுதியாகத் தெரியவில்லை.
ஐரோப்பிய நாடுகள் உறுதியளித்த டீசல் விநியோகத்தால் எரிசக்தி விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. அதேபோல், ரஷ்ய எரிபொருள் எவ்வளவு விரைவாகச் சந்தைக்கு வரும் என்பது குறித்தும் எந்தத் தகவலும் இல்லை.
யுக்ரேன் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களால் ரஷ்யாவின் டீசல் சுத்திகரிப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களைக் குறைத்துக்கொள்ளுமாறு யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியிடம் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் நாளொன்றுக்கு சுமார் 36 லட்சம் பேரல் டீசல் பயன்படுத்தப்படுகிறது. எனவே, இந்த மாதம் ரஷ்யா உறுதியளித்துள்ள 3 லட்சம் டன் டீசலை வழங்கினால்கூட, அது அமெரிக்காவின் ஒருநாள் நுகர்வில் ஏறக்குறைய பாதியாகத்தான் இருக்கும்.
இதனால் அமெரிக்க மக்கள் உடனடியாகப் பெரிய மாற்றத்தை உணர வாய்ப்பில்லை.
யுக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கியை வாஷிங்டன் டிசியில் சந்தித்தபோது, கிரிமியாவின் எதிர்காலம் குறித்து முக்கியமாகப் பேசப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போரில், நிலப்பரப்பு பிரச்னை யுக்ரேனில் அமைதி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.
நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்துக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், பல மாகாணங்களில் முன்கூட்டியே வாக்களிப்பது ஏற்கெனவே தொடங்கிவிட்டது. பொதுவாகக் கூறப்படுவது போல, தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் அரசியல் களம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.
“அமெரிக்கர்கள், குறிப்பாக எங்களின் சிறந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் லாரி ஓட்டுநர்களுக்கு விலைகளைக் குறைப்பதே எனது தலையாய முன்னுரிமை” என்று டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கடந்த ஏழு மாதங்களாக எரிசக்தி, எரிபொருள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன.
அதேவேளையில், போர் வெற்றிகரமாக முடிவுக்கு வருவதும், அதன் பொருளாதாரத் தாக்கம் குறைவதும் விரைவில் நிகழும் என்று டிரம்பும் அவரது அதிகாரிகளும் கவலையில் இருக்கும் பொதுமக்களிடம் தொடர்ந்து உறுதியளித்து வருகின்றனர்.
ரஷ்யாவுடனான இந்தப் புதிய ஒப்பந்தத்தால் ராஜ்ஜிய ரீதியாகச் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். இருப்பினும், பொருளாதார நிவாரணம் விரைவில் கிடைக்கும் என்ற தனது வாக்குறுதி வெறும் வார்த்தையல்ல என்பதை அமெரிக்க வாக்காளர்களை நம்பவைக்க இந்த ஒப்பந்தம் உதவும் என டிரம்ப் நம்ப வேண்டிய நிலை உள்ளது.



