ஈரான் மீது மீண்டும் தாக்குதலா அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ? அதிபர் டிரம்ப் அதிரடி பதில்

 

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி போர் தொடுத்தன. கடந்த 6 மாதமாக சண்டை ஓய்ந்தாலும், இருதரப்பிலும் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் பல சிக்கல்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியில் தனது ஆதிக்கத்தை விட்டுத்தர முடியாது என்பதில் ஈரான் உறுதியாக இருக்கிறது. இதன் காரணமாக, ஈரானில் இன்னும் போர் பதற்றம் தீராமல் உள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ம் தேதி இடைக்கால தேர்தல் நடக்க உள்ளது. அதே போல இஸ்ரேலிலும் நாளை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை குறிவைத்து ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் மீண்டும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தக்கூடும் என ஈரானும் பல உலக நாடுகளும் கருதுகின்றன. ஆனால் இடைக்கால தேர்தலுக்கு முன்பாக ஈரானை மீண்டும் தாக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார்.தேர்தல் செய்திகள்

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள அவரிடம் செய்தியாளர்கள் நேற்று இக்கேள்வியை மீண்டும் எழுப்பினர். அதற்கு அதிபர் டிரம்ப் எரிச்சலடைந்தார். இது ஒரு முட்டாள்தனமான கேள்வி என கூறிய அவர், ‘‘நான் தாக்குதல் நடத்தப் போகிறேன் என்பதை உங்களிடம் சொல்வேன் என நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? ஆனால் அதை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

இன்றோ, நாளையோ கூட தாக்குதல் நடக்கலாம். அதே சமயம் அழகான ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. ஈரான் உண்மையிலேயே ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. ஆனால் அவர்கள் எந்தளவுக்கு அந்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பார்கள் என்பதுதான் பிரச்னை. ஈரானின் உச்ச தலைவர் ஒப்பந்தத்தை முடிக்க உத்தரவிட்ட நிலையில், அதற்கான பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகள் விதிகளை மீறிவிட்டனர். அந்த கயவர்கள் பேச்சுவார்த்தையை நாசமாக்கிவிட்டனர்’’ என்றார்.