ஈரான் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி அளித்த குற்றச்சாட்டிற்காக இந்திய தம்பதிக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ஈரானிய அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தநிலையில் அமெரிக்க நிதித்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவை சேர்ந்த சுனில் குமார் சர்மா மற்றும் அவரது மனைவி ஜஸ்ப்ரீத் பிரீத்தி ஷாஹித் ஆகியோரின் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவர்கள் போலியான இணையதளங்களை உருவாக்கி, பல்வேறு நாடுகளின் பெயரில் போலி கப்பல் பதிவுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, ஈரானிய எண்ணெயை சுமந்து செல்லும் கப்பல்கள் சர்வதேச கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்க உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இவர்களுடன் தொடர்புடைய ஓஷானிக் டெக்னாலஜிஸ் இந்தியா, ஆர்யாவார்ட் ஷிப் மேனேஜ்மென்ட், பிரிசெப்ட் டிரெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்,பாலினேஷியா மாரிடைம் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 8 இந்திய நிறுவனங்களும் இந்த தடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், ஈரானிய விமான நிறுவனங்களுக்குச் சேவைகளை வழங்கிய துருக்கியை சேர்ந்த ‘புகோ கிரவுண்ட் சர்வீசஸ்’ என்ற நிறுவனத்தின் மீதும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.



