ஆந்திர எல்லையில் கணவனை கொன்று புதைத்து பைக்கில் சுற்றிய மனைவி, காதலனுடன் கைது

 

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக- ஆந்திர எல்லை வனப்பகுதியில் கடந்த 2ம் தேதி போலீசாரும், வருவாய்த்துறையினரும் நடத்திய சோதனையில் ஆண் சடலம் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தோண்டி எடுத்து சடலத்தை சோதித்தபோது, கழுத்து நெரித்தும், முகம் மற்றும் தலையில் பலமாக தாக்கியும் கொலை செய்திருப்பது தெரியவந்தது.

பேண்டில் இருந்த நகைக்கடை அடமான ரசீதின்படி கொலை செய்யப்பட்ட நபர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே குரிசிலாப்பட்டு, ராஜபாளையம் கரம்பூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(36) என்பதும், இவருக்கு லட்சுமி (32) என்ற மனைவியும், 7 மற்றும் 13 வயதில் இரு மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. சசிகுமார் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். கடந்த மாதம் 29ம் தேதி முதல் தம்பதி மாயமானதாக உறவினர்கள் தேடி வந்துள்ளனர் என்று குப்பம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் சசிகுமாரின் மனைவி லட்சுமிக்கும் ஆந்திர மாநிலம் குப்பம், கங்குந்தியை சேர்ந்த பிரபுதேவா (32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் குப்பம் அருகே பைக்கில் வந்த அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தீர்த்துக்கட்ட கடந்த மாதம் 29ம் தேதி வீட்டிலிருந்து அவரை லட்சுமி ஆந்திர வனப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளார்.

அங்கு மறைந்திருந்த கள்ளக்காதலன் பிரபுதேவாவும் லட்சுமியும் சேர்ந்து சசிகுமாரை தாக்கி கழுத்தை இறுக்கி கொடூரமாக கொலை செய்து புதைத்துவிட்டு, 22 நாட்களாக பைக்கிலேயே பெங்களூர், ஐதராபாத், திருப்பதி மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றித்திரிந்து உல்லாசமாக இருந்துள்ளதும், கையில் இருந்த பணம் தீர்ந்ததால் சொந்த ஊருக்கு திரும்பியபோது போலீசிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து குப்பம் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.