நியூசிலாந்தில் விமானப் பயிற்சி பெற்ற பிளைடுபாய் துணை விமானி

 

கடந்த வாரம் துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிப் பயணித்த பிளைடுபாய் விமானத்தின் தலைமை விமானியை, அவசர உதவிக்குப் பயன்படுத்தப்படும் கோடரியால் தாக்கி விமானத்தை வீழ்த்த முயன்றதாகக் கூறப்படும் ஓமான் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்தில் தனது விமானப் பயிற்சியின் ஒரு பகுதியை நிறைவு செய்துள்ளதாக நியூசிலாந்து பொலிஸார் இன்று (06) உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை சட்டத்தரணி இந்தச் சம்பவத்தை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ எனக் குறிப்பிட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்டு அமீரக காவலில் உள்ள ஹமாம் அல்-ஹம்மாமி தொடர்பில் சர்வதேச அளவில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

உதவி ஆணையாளர் மைக்கேல் ஜோன்சன் வெளியிட்ட அறிக்கையின்படி, குறித்த நபர் பிரித்தானியாவைச் சேர்ந்த நிறுவனமொன்றின் மூலம் 2018 நவம்பர் 30 முதல் 2019 மே 23 வரை மாணவர் விசாவில் நியூசிலாந்தில் தங்கியிருந்து விமானப் பயிற்சி பெற்றுள்ளார்.

அவர் நியூசிலாந்தில் தங்கியிருந்த காலப்பகுதியில் யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது தொடர்பான ஆவணங்களை நியூசிலாந்து பொலிஸார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

அதேவேளை, குறித்த நபருக்கு அவுஸ்திரேலியாவுடன் ஏதேனும் தொடர்புகள் அல்லது ஆதரவாளர்கள் உள்ளனரா என்பது தொடர்பிலும் அவுஸ்திரேலிய பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

துபாயில் இருந்து இஸ்ரேலுக்குப் புறப்பட்ட FZ1073 விமானத்தில் நடுவானில் வைத்து தலைமை விமானியை அவசரக்காலக் கோடரியால் தாக்கி விமானத்தை வீழ்த்த முயன்றதாகக் கூறப்படும் உதவி விமானி, பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அமீரகப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.