சூடான் – எரிபொருள் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்: 153 பேர் உயிரிழப்பு

 

சூடான் மற்றும் தெற்கு சூடான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய அபியாய் பிராந்தியத்தில், எரிபொருள் நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 153 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபியாய் நகருக்கு வடக்கே அமைந்துள்ள அமித் சந்தையில் திங்கட்கிழமை காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சிரேஷ்ட சூடானிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிளர்ச்சிப் படையான விரைவு ஆதரவுப் படைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் தாங்கிகளே தாக்குதலின் இலக்காக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஃப் உறுப்பினர்கள் மற்றும் எரிபொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என அந்த இராணுவ அதிகாரி தெரிவித்துள்ள போதிலும், இந்தத் தகவல் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

தெற்கு சூடானின் எல்லைப் பகுதிக்கு அருகில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீ, செவ்வாய்க்கிழமை (20) வரையிலும் தொடர்ந்து எரிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மீட்கவும், தீ பரவுவதைக் கட்டுப்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபையின் மருத்துவக் குழுவினரும் தீயணைப்புப் படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்களையும் சிவில் உட்கட்டமைப்புகளையும் இலக்குவைத்துத் தாக்குவது சர்வதேச சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அமெட் பெக் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் மருத்துவச் செயற்பாடுகளுக்கான முகாமையாளர் வைத்தியர் கிறிஸ்டியன் லிண்டாவெர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.