உலக வல்லரசுகளான அமெரிக்கா, சீனா , ரஷ்யா ஆகிய நாடுகள் விண்வெளியிலும் தன்னுடைய இருப்பை தக்க வைத்து கொள்ள மறைமுகமாக பனிப்போரை மேற்கொண்டு வருகின்றன.
நிலவில் மனிதர்களைத் தங்க வைப்பதற்கு தடையில்லா மின்சாரம் மிக அவசியம். சூரியத் தகடுகள் பகல் நேரத்தில் மின்சாரம் வழங்க முடியும், ஆனால் பூமியின் நாட்காட்டியின்படி சந்திரனின் இரவுகள் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிப்பதால், சூரிய ஆற்றலை மட்டும் நம்பியிருப்பது சாத்தியமற்றதாகும்.
ரஷ்யா மற்றும் சீனா இணைந்து ‘செலினா’ என்ற பெயரில், நிலவு அணு உலையை உருவாக்கி வருகின்றன. 10 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த உலை, மனித உதவி இன்றி தொடர்ந்து 10 ஆண்டுகள் இயங்கும் திறன் கொண்டது. இதனை 2036க்குள் நிலவில் நிறுவ திட்டமிட்டுள்ளன.
எனவே இந்தத் திட்டம், சீனாவின் தலைமையில் இயங்கும் சந்திர நிலையங்களுக்கு மின்சாரம் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
அமெரிக்காவின் நாசா 2030-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிலவில் 20 கிலோவாட்ஸ் திறன் கொண்ட அணு உலையை நிறுவ, இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் எவ்வித மனிதப் பராமரிப்பும் இன்றி ஐந்து ஆண்டுகள் தானாக இயங்கும் வகையில் இதனை வடிவமைக்க, ஒப்பந்ததாரர்களிடம் நாசா கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அணு உலைகளை ஏந்திச் செல்லும் ராக்கெட்டுகள் விபத்துக்குள்ளானால், வளிமண்டலத்திலும் பூமியின் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் மேலும் விண்வெளியில் அணு உலைகளை அனுப்புவது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
விண்வெளி என்பது இப்போது வெறும் அறிவியல் ஆராய்ச்சித் தளமாக மட்டுமல்லாமல், ஆயுதமயமாக்கல் மற்றும் உளவுத்துறையின் முக்கிய போர்க்களமாக மாறி வருவதால், இது ஒரு ‘புதிய விண்வெளி பனிப்போர்” சூழலையும் தோற்றுவித்துள்ளது எனலாம்.



