திருகோணமலை, பாலையூற்றுப் பகுதியில் இரண்டு பெண்களை வெள்ள வேனில் கடத்திச் சென்று, கடற்படை முகாமின் கன்சைட் என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய அறையில் சிறைவைத்து சித்திரவதைக்கு உட்படுத்திப் படுகொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரிகளையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீன், செவ்வாய்க்கிழமை (2026.10.20) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதத்தில், மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரண்டு பெண்களும் கடத்தப்பட்டுப் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கூட்டுச் சூறையாடல் விசாரணைப் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த மூன்று சந்தேகநபர்களையும் கடந்த திங்கட்கிழமை (2026.10.19) கொழும்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மாத்தளை, பூஸ்ஸ மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 47 மற்றும் 53 வயதுடைய ஓய்வுபெற்ற கடற்படையின் நிர்வாகப் பிரதான கீழ்நிலை அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டு, செவ்யாக்கிழமை (2026.10.20) திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதே குற்றச்சாட்டில் இந்த மாத முற்பகுதியில் இரண்டு முன்னாள் பெண் கடற்படையினரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட உதயகுமார, ரத்னாயக்க மற்றும் சந்தன சில்வா ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.



