சிவகங்கை, ராஜபாளையம், வேடசந்தூர், கடலூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (எ) சுள்ளான் மதன் (26). இவர், சிவகங்கை அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று பிற்பகலில் மாட்டை கொண்டு சென்றிருந்தார். அப்போது டூவீலரில் வந்த ஒரு கும்பல் திடீரென மதனை வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வெட்ட முயன்றது.
அவர்களிடமிருந்து தப்பித்து அருகில் இருந்த கரும்பு தோட்டத்தின் பக்கம் ஓடினர். அந்த கும்பல் விடாமல் விரட்டிச் சென்று கரும்பு தோட்டத்திற்குள் வைத்து மதனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. தகவலறிந்த எஸ்பி அபிஷேக் குப்தா, டிஎஸ்பி அமல அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். கொலையான மதன் மீது 2 கொலை வழக்கு உள்பட 14 வழக்குகள் உள்ளன.
2024ல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கரடிப்பட்டியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான சூர்யா (24), சுபாஷ் (23) ஆகியோரை காளையார்கோவிலில் கொலை செய்த வழக்கில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் ஜாமீனில் வந்தவரை சிவகங்கை அருகே ஏற்கனவே கொலை செய்ய 2 முறை நடைபெற்ற முயற்சியில் இருந்து தப்பித்த நிலையில் நேற்று கொல்லப்பட்டார்.
இந்நிலையில் வீட்டின் அருகே காலி இடத்தில் மாட்டுத் தொழுவம் அமைப்பது குறித்து, நேற்று முன்தினம் சகோதரர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. வெளியே சென்ற, மகேந்திரன் மது அருந்திவிட்டு இரவில் திரும்பி வந்து, தூங்கி கொண்டிருந்த பொன்னுக்காளை தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டுள்ளார். இதில் தலை நசுங்கி அவர் பலியானார். வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து மகேந்திரனை கைது செய்தனர்.
மூதாட்டி படுகொலை: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமுத்துப்பட்டியை சேர்ந்தவர் தெய்வானை (60). விவசாயி. இவரது உறவினர் சந்தானம் (55). பெயிண்டர். இருவருக்கும் நீண்ட நாட்களாக சொத்துப் பிரச்னை இருந்துள்ளது. தெய்வானை அம்மாபட்டியில் உள்ள உறவினர் தோட்டத்தில் நேற்று இருந்தார். அங்கு வந்த சந்தானம், அவரிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் சந்தானம், மண்வெட்டியால் தெய்வானையை பலமாக தாக்கியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். எரியோடு போலீசார் சந்தானத்தை கைது செய்தனர்.
கம்பால் அடித்து மகனை கொன்ற தந்தை: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பண்டரக்கோட்டை வாணியம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(42), டைல்ஸ் தொழிலாளி. இவரது மனைவி தேன்மொழி, புதுப்பேட்டையில் உள்ள சோப் பேக்டரியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குணால்(18), ராகுல் என 2 மகன்கள். குணால், கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து பாதியில் நின்று விட்டார்.
குடித்து விட்டு வேலைக்கு போகாமல் ஊரில் தகராறு செய்வதும், பெற்றோரிடம் பணம் கேட்டு சண்டை போட்டும் வந்ததால் தந்தை, மகன் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 16ம் தேதி தேன்மொழி வேலைக்கு சென்ற பின், வீட்டில் படுத்திருந்த குணாலை, வேலைக்கு போகாமல் தூங்குகிறாயே என தந்தை வெங்கடேசன் திட்டி தடியை எடுத்து மகனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர்
முன்விரோதத்தில் வாலிபர் கொலை : ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27), கூலி தொழிலாளி. இவர் கடந்த 13ம் தேதி அதிகாலை அதே பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் முகம், கை உள்ளிட்ட இடங்களில் சரமாரி கத்தியால் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் அதேபகுதியை சேர்ந்த இன்பரசு(21), அவரது நண்பர்கள் ஆகாஷ்(24), ராகுல்காந்தி(22), விக்னேஷ்(22) ஆகியோர் முன்விரோதம் காரணமாக வெட்டியதும் தெரிய வந்தது. கொலை முயற்சி வழக்கில் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று மணிகண்டன் இறந்ததால், கொலை வழக்காக மாற்றினர்.
மனைவி கொலை: கர்நாடக மாநிலம் பெங்களூரு பங்காரப்பா நகரை சேர்ந்தவர் அனில்குமார் (32), கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே அக்கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடராமன் மகள் ருக்மணியை (28) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் மகள் இருக்கிறாள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அக்கொண்டப்பள்ளி கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி, அனில்குமார் கூலிவேலை செய்து வருகிறார். ருக்மணி மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
ருக்மணி, யாருடனோ அடிக்கடி செல்போனில் பேசியும், குறுஞ்செய்தி அனுப்பியும் வந்துள்ளார். இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அனில்குமார், நேற்று முன்தினம் நள்ளிரவு, வீட்டில் தூங்கி கொண்டிருந்த ருக்மணியின் தலையில் கொடுவாளால் பயங்கரமாக தாக்கினார். இதில் ருக்மணியின் மண்டை பிளந்து மூளை சிதறியது. ஆத்திரம் தீராமல் கத்தியை எடுத்து ருக்மணியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதையடுத்து, அனில்குமார் கெலமங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
விழுப்புரம் அருகே அய்யூர்அகரம் பகுதியில் 6 வயது சிறுமி நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர், திடீரென சிறுமியிடம் சீண்டலில் ஈடுபட்டு அவரை தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக சிறுமி வீட்டுக்கு வராததை கண்டு தாய் வெளியே தேடி பார்த்தபோது, வாலிபர் தூக்கிச் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை பிடித்து சிறுமியை மீட்டனர்.
தொடர்ந்து அவருக்கு தர்ம அடி கொடுத்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்தனர். தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சென்று வாலிபரை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் சிறுமியை கடத்தி சென்றவர் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்தது.
பெயர், விலாசம் தெரியாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, சிறுமியை பாலியல் சீண்டலுக்காக கடத்தி சென்றாரா அல்லது உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவரா என தொடர்ந்து விசாரிக்கின்றனர்.



