குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உடன்பிறந்த தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், 22 வயதான சோபியா ஃபாரூக் என்ற பெண் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சோபியாவின் தந்தை முகம்மது ஃபாரூக் (56) மற்றும் சகோதரன் முகம்மது ஹாபில் (38) ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கொலைக்கான பின்னணி:
ஜுஹாபுரா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக சோபியா பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஆண் நண்பர் ஒருவருடன் சோபியா இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் குடும்பப் பெயர் கெட்டுவிட்டதாகக் கருதி ஆத்திரமடைந்த தந்தையும் சகோதரனும், சோபியாவைக் கண்டிக்கத் தொடங்கினர். மேலும், குடும்பத்தின் “கௌரவத்தைக் காக்க” அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர்.
சாலை விபத்தாக நாடகமாடியது எப்படி?
கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு, மருத்துவமனையிலிருந்து சோபியாவை அழைத்துக்கொண்டு சகோதரன் ஹாபில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். சர்கேஜ் பகுதிக்கு அருகே உள்ள கேல்ஜிபுரா என்ற ஆள்நடமாட்டமற்ற தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, மறைத்து வைத்திருந்த இரும்புச் சுத்தியலால் சோபியாவின் மண்டையில் பலமுறை தாக்கியுள்ளனர். இதில் சோபியா பரிதாபமாகப் பலியானார்.
அதன்பின்னர், கொலையை மறைப்பதற்காகச் சோபியாவின் உடலைச் சாலைக்குக் கொண்டு வந்து போட்டுவிட்டு, அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது போல நாடகமாடியுள்ளனர். தனது வாகனத்தைச் சேதப்படுத்தித் தானும் காயமடைந்தது போல் காட்டி, காவல் துறையில் பொய்யான விபத்துப் புகாரையும் அளித்துள்ளனர்.
போலீஸ் விசாரணையில் அம்பலமான உண்மை:
ஆரம்பத்தில் இது சாலை விபத்து வழக்காக விசாரிக்கப்பட்டாலும், விபத்து நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தில் போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளில் எந்த வாகனமும் வராததாலும் காவல் துறையினருக்குச் சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து சோபியாவின் சகோதரன் ஹாபிலிடம் காவல் துறை நடத்திய தீவிர விசாரணையில், குடும்பக் கௌரவத்திற்காகத் தந்தையும் மகனும் சேர்ந்து சுத்தியலால் அடித்துக் கொன்றுவிட்டு நாடகமாடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.



