மயிலாடுதுறை அருகே இலுப்பூரில் நடந்த கொலை சம்பவத்தில் சொத்துக்காக, 3 மகள்கள் கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. தாயும் உடந்தையாக இருந்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா இலுப்பூரை சேர்ந்தவர் மகேந்திரன்(56). இவருக்கு சரஸ்வதி(57) என்ற மனைவியும், மகாலட்சுமி(32), கலைவாணி(31), அக்ஷயாதேவி(19) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். முதல் 2 மகள்களுக்கு திருமணமான நிலையில் மூன்றாவது மகள் திருப்பூரில் பணியாற்றி வருகிறார்.
வெளிநாட்டில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த மகேந்திரன், சில ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய நிலையில், குடும்ப சண்டை காரணமாக மனைவியை பிரிந்து தனியே வசித்து வந்தார். இதனால் மகேந்திரனை அவரது சகோதரி குடும்பத்தார் கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு மர்ம நபர்கள் இருவர், மகேந்திரனின் வீட்டுக்குள் புகுந்து, அவரின் கழுத்தை அறுத்தும், உடலில் கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு, நகையை அறுத்துக்கொண்டு தப்பி சென்றனர்.
அப்போது கணவரிடம் சண்டையிட்டுக்கொண்டு வந்து வீட்டில் தங்கியிருந்த மூத்த மகள் மகாலெட்சுமி சம்பவம் குறித்து பொறையார் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பொறையார் போலீசார் கொலை வழக்கு பதிந்து மகேந்திரனின் மனைவி, 3 மகள்களிடம் விசாரணை நடத்தினர். மகேந்திரன் வங்கிக்கணக்கில் உள்ள ரூ.47 லட்சம் பணம், வீடு மற்றும் வீட்டுமனைகளை தன்னை கவனித்துவரும் சகோதரியின் மகன் சாதிக் என்கிற பிரவீன்குமாருக்கு எழுதிவைக்க எண்ணியுள்ளார்.
இதனால் தங்களுக்கு சொத்து கிடைக்காது என்ற ஆத்திரத்தில் மனைவி சரஸ்வதி மற்றும் 3 மகள்கள் சேர்ந்து அவரை கொல்ல திட்டம் தீட்டி உள்ளனர். இளையமகள் அட்சயாவின் காதலன், திருப்பூர் ஆண்டிபாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்த கௌதம்குமார்(21) என்பவரை தொடர்பு கொண்டு சதி திட்டத்தை கூறி ரூ.5 லட்சம் தருவதாக கூறி உள்ளனர். இதனை தொடர்ந்து அவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர் ரஞ்சித்குமார்(21) என்பவரையும் சேர்த்துள்ளார்.
பின்னர் கடந்த 15ம் தேதி இரவு வீட்டின் லொகேஷனை மகாலட்சுமி, கௌதம்குமாருக்கு அனுப்பி வர சொல்லி உள்ளார். அதன்படி கௌதம்குமாரும், ரஞ்சித்குமாரும் அங்கு சென்று மகேந்திரனை கொலை செய்துள்ளனர். திட்டமிட்ட கொலை என்று தெரியாமல் இருக்க நகைகளை பறித்து சென்றுள்ளனர். ஏற்கனவே தன்னை கொடுமைப்படுத்துவதாக மகாலட்சுமி, தனது கணவர் பிரபாகரன் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் காரணமாக பிரபாகரனை போலீசார் தேடி வந்தனர். கடந்த 14ம்தேதி பிரகாரனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் இது தெரியாத மகாலட்சுமி, கொலை குற்றத்தை பிரபாகரன் மீது சுமத்தி உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் உரிய வகையில் விசாரித்ததில் இந்த சதி திட்டம் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து சரஸ்வதி, அவரின் மகள்கள் மகாலட்சுமி, கலைவாணி, அக்ஷயா, அவரது காதலன் கௌதம்குமார், நண்பர் ரஞ்சித் குமார் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.



