லிங்கங்கள் என்பது ரிஷிகளால் உண்டாக்கப்பட்டு வணங்கப்படுபவை பல்வேறு வகை சிவலிங்கங்கள்!

 

கல்லில் வடிக்கப்பட்டுக் கோயில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் அசல லிங்கம் எனப்படும்.

விரும்பும் இடத்துக்கு எடுத்துச் செல்லத்தக்கபடி அமைக்கப்படும் லிங்கம் சல லிங்கம் எனப்படும்.

ஒரு நிலையில் இருப்பது போல் தோன்றினாலும் இடம் மாற்றி வைக்கும்படி அமையும் லிங்கம் சலாசல லிங்கம் எனப்படும்.

ஆர்ஷ லிங்கம் என்பது ரிஷிகளால் உண்டாக்கப்பட்டு வணங்கப்படுபவை. அவை அடிப்புறம் சற்று பெருத்து கிட்டத்தட்ட தேங்காய் வடிவம் போல் இருக்கும்.

தானே தோன்றியது சுயம்பு லிங்கம். ராட்சதர்களால் உண்டானது ராட்சச லிங்கம்.

சல லிங்கங்கள் எனப்படும் அசையும் லிங்கங்கள் மண், உலோகம், நவரத்தினம், மரம், கல் போன்றவற்றால் செய்யப்படும். இவை அவரவர் கையில் வைத்து எடுத்துச் சென்று பூஜை செய்யும் வகையில் அளவில் சிறியவைகளாக இருக்கும்.

க்ஷண லிங்கம் அல்லது க்ஷணிக லிங்கம் என்பவை அந்த அந்த நேர பூஜைக்காக ஆவாஹனம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுபவை. இவை அரிசி, சாதம், மண், களிமண், பசுஞ்சாணி, வெண்ணெய், ருத்ராட்சம், சந்தனம், தர்ப்பம், பூ, வெல்லம், மஞ்சள் மற்றும் மாவு போன்றவற்றால் செய்யப்படும்.

உலோக லிங்கங்களில் தங்கத்தில் செய்யப்பட்ட லிங்கத்தை பூஜித்தால் செல்வம் பெருகும். சாதத்தில் லிங்கம் செய்து வழிபட்டால் நல்லுணவு குறைவின்றி கிடைக்கும். களிமண் லிங்க பூஜையில் தாவர சொத்துக்கள் பெருகும். பசுஞ்சாணி, மஞ்சள் ஆகியவற்றாலான லிங்கம் நோய் நொடியை நீக்கும். வெண்ணெய், மன மகிழ்ச்சி உண்டாக்கும். ருத்ராட்சம் ஞானம் பெருகும். சந்தனம் அனைத்து நலனையும் உண்டாக்கும்.

தர்ப்ப லிங்கம்-ஆன்ம விடுதலையையும், பூலிங்கம் ஆயுளையும், வெல்லம் அனைத்துப் பிரச்னைகளையும், மாவு லிங்கம் உடல் மற்றும் மன உறுதியையும் தரும்.

சில லிங்கங்கள் அவை செய்யப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டே பெயர் சூட்டப்படுகின்றன. மருண்மய என்பவை மண்ணால் செய்யப்பட்டவை.

லோகஜ என்பவை உலோகத்தால் செய்யப்பட்டவை.

முத்து, பவழம் போன்ற ரத்தினங்களால் செய்யப்படுபவை ‘ரத்னஜ’ எனவும், பால் வடியும் மரங்களில் இருந்து செய்யப்படும் லிங்கங்கள் ‘தாருக’ எனவும், கல்லால் செய்யப்படுபவை ‘சிலா’ அல்லது ‘சைலஜ’ எனவும் அழைக்கப்படும்.

சிவலிங்கத்தில் உருளை வடிவ லிங்கப் பகுதியில் உருளையாக இருப்பதற்குப் பதிலாக பட்டை பட்டையாக நீள வாக்கில் உள்ள லிங்கங்கள் உண்டு. இவை ‘தாராலிங்கம்’ என அழைக்கப்படும். இந்தப் பட்டைகள் 5 முதல் 64 வரை இருக்கும். 16 பட்டைகள் அமைந்த லிங்கங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

லிங்கப் பகுதியில் சுற்றும் 107 சிவலிங்கங்கள் பொறிக்கப்பட்டு இருப்பின் அது ‘அஷ்டோத்ரசத லிங்கம்’ என அழைக்கப்படும்.

சிவலிங்கத்தின் பாணத்தில் 999 அல்லது 1007 சிறிய லிங்க உருவங்கள் செதுக்கப்பட்டிருந்தால் அது ‘சஹஸ்ர லிங்கம்’.

லிங்கத்தின் பாணத்தில் சிவபெருமானின் முகங்கள் காணப்பட்டால் அது ‘முகலிங்கம்’ என அழைக்கப்படும்.

அரிதான லிங்கம் ஒன்று காஞ்சிபுரத்தில் காணப்படுகின்றது. சிவன்-சக்தி ரூபத்தின் ஒருமித்த வடிவமாக அமைந்துள்ள இது சக்தி லிங்கம் என அழைக்கப்படுகிறது. இதன் பாணத்தில் வீராசனத்தில் நான்கு கரங்களுடன் சக்தி அமர்ந்திருக்கிறாள்.

தங்கம், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களில் செய்யப்படுவது லோஹஜ லிங்கமாகும்.

வில்வம், அசோக மரம், தேவதாரு, சந்தனம் முதலிய மரங்களினால் உருவாக்கப்படும் லிங்கம் தாருஜ லிங்கமாகும்.

நர்மதை நதியிலிருந்து கிடைக்கும் நீண்ட உருண்டை வடிவமான லிங்கம் பாணலிங்கம் எனப்படும்.

உருண்டு ஓடும் பாதரசத்தை திரட்டி உருவாக்கப்படும் லிங்கம் ரஸ லிங்கம் எனப்படும்.