அதிபர் கிம் ஜாங் உயிருடன் இருக்கிறார்..? செய்திகளுக்கு கிடைத்த விடை.

..

உலகின் சூப்பர் லீடர்களில் ஒருவராக கருதப்படும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக வெளியாகி இருந்த செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த செய்தி உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது அது வதந்தி என கூறி பெரும் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது வடகொரிய அரசு. கோமாவிற்கு சென்று இறந்து விட்டதாக கூறப்பட்ட கிம் ஜாங் உன்-னின் புதிய வடகொரிய அரசு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது .

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அவரது மகளுடன் சேர்ந்து ஆடை மற்றும் காலணி கண்காட்சி ஒன்றை பார்வையிடுவது போன்ற ஃபோட்டோக்கள் வடகொரிய அரசால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. முன்னதாக அமெரிக்காவில் வசிக்கும் சீனச் சமூக ஆர்வலர் ஒருவர் தனது எக்ஸ் (X) தளத்தில், கிம் ஜாங் உன்னுக்கு மூளைக் கசிவு ஏற்பட்டு, பெய்ஜிங்கில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக கூறினார். இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து சர்வதேச அளவில் கிம் ஜாங் உடல்நிலை பேசுபொருள் ஆனது. இந்த நிலையில் தான் நேற்று கிம் ஜாங் உன் ஒரு பிராந்திய ஆடை மற்றும் காலணி கண்காட்சியை பார்வையிட்டதா கூறி, சில புகைப்படங்களை வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படங்களில் கிம் ஜாங் உன் குழந்தைகளுக்கான காலணிகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகளை ஆய்வு செய்வது போன்றும், அதிகாரிகளுடன் கலந்துரையாடுவது போன்றும் ஆரோக்கியமாக காட்சியளிக்கிறார். அவருடன் அவரது மகள் கிம் ஜு ஏ-வும் உடன் இருந்துள்ளார். வடகொரியா பின்பற்றி வரும் தீவிர ரகசியத்தன்மை காரணமாக, அந்நாட்டின் அதிபர் சில நாட்கள் பொதுவெளியில் வராவிட்டாலும் இதுபோன்ற வதந்திகள் பரவுவது வழக்கமாக உள்ளது. இதனிடையே கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாக கூறப்படும் வதந்திகளுக்கு எந்தவொரு நம்பகமான ஆதாரமும் இல்லை என்று தென்கொரிய உளவு அமைப்புகளும் சர்வதேச கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.