“நவராத்திரி” என்றால் சமஸ்கிருதத்தில் ‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள். ஆண்டின் பல்வேறு காலங்களில் வந்தாலும், புரட்டாசி (அல்லது ஐப்பசி) மாதத்தில் வரும் சாரதா நவராத்திரியே மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு (2026) நவராத்திரி பெருவிழா அக்டோபர் 11 முதல் அக்டோபர் 20 வரை விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது.
இதில் ஒன்பது நாட்கள் வெறும் சடங்கு மட்டுமல்ல; ஆன்மிக மற்றும் லெளகீக ஆற்றலை முழுமையாகப் பெறும் ஒரு அற்புதமான ஆன்மிகப் பயிற்சிக் காலம். பகல் நேரங்களில் உலகியல் கடமைகளில் மூழ்கியிருக்கும் மனம், இரவுவேளையில் அமைதியை நாடுகின்றது. இந்த ஒன்பது இரவுகளில் தேவியை வழிபடுவது மனதை ஒருமுகப்படுத்தி, ஆன்மிக விழிப்புணர்வைத் தரும்.
மேலும் உள்ள
குழந்தையை நடுத்தெருவில் தவிக்கவிட்டு போதையில் சாலையில் கிடந்த அரபு அரசு குடும்ப பெண்ணுக்கு தண்டனை: லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு’
இந்தி சினிமா உலகில் மத அடையாளங்கள் மீது வெறுப்பு அதிகரிப்பு: பெண் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் சாடல்’
கட்சிக்குள்ளேயே போதைப்பொருள் கடத்துவோரை வைத்துக்கொண்டு, பொதுவெளியில் போதைக்கு எதிராக மாரத்தான் ஓடி நடிப்பதில் என்ன பயன்? டிடிவி தினகரன் கேள்வி’
தொடர் விடுமுறையால் விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு: சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ரூ.17,300; டெல்லிக்கு ரூ.23,000 பயணிகள் அதிர்ச்சி!’
ஆயுத பூஜை விடுமுறை: சொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்!’
2. வாழ்வியல் வளம்
மும்மூர்த்திகளின் சக்திகளான துர்கை (அறியாமை நீக்குதல்), லட்சுமி (நற்குணங்களை வளர்த்தல்), சரஸ்வதி (மெய்ஞானம் தருதல்) ஆகியோரின் அருளால் ஆன்மிகத் தடை நீங்கி முக்திப்பாதைக்கு வழி பிறக்கிறது. அசுரர்களை அழிக்க அன்னை எடுத்த உக்கிர மற்றும் சாந்த வடிவங்களைத் தியானிப்பது, மனிதனின் உள்ளே இருக்கும் கோபம், பேராசை, அகந்தை போன்ற தீய குணங்களை வெல்லும் ஆன்மிக பலத்தைத் தருகிறது. ஆன்மிக முன்னேற்றத்தோடு நின்றுவிடாமல், மனிதனின் அன்றாட லெளகீக வாழ்க்கைக்குத் தேவையான செல்வம், ஆரோக்கியம் மற்றும் குடும்ப நிம்மதியை அன்னை வழங்குகிறாள்.
குறிப்பாக கலை, கல்வி, வியாபாரம் மற்றும் தொழிலில் உச்சம் தொடத் தேவையான விடாமுயற்சியையும், புத்திக் கூர்மையையும் இந்த நாட்களில் செய்யும் வழிபாடு பெற்றுத் தருகிறது. நவராத்திரியில் வைக்கப்படும் கொலு மூலமாக சொந்த பந்தங்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்கள் கூடி மகிழும் சமூக ஒற்றுமையும், மகிழ்ச்சியும் பெருகுகிறது. இந்த ஒன்பது இரவுகளில் தன்னை முழுமையாக அம்பிகைக்கு அர்ப்பணித்து வழிபடுபவர்களுக்கு, உடல் ரீதியான சோர்வு நீங்கி புதுத்தெம்பும், மன அமைதியும், லெளகீக வாழ்வில் வெற்றியும் பரிசாகக் கிடைக்கும் என்பது முற்றிலும் உண்மை.
3. அக இருளை நீக்கும் ஆன்மிகத் தத்துவம்
மனிதனின் மனம் வெளிப்புற உலகப் பொருள்களின்மீது நாட்டம் கொண்டு அலைபாய்கிறது. இரவுநேர வழிபாடுகள் மனதை வெளிப்புறத் தூண்டுதல்களில் இருந்து விடுவித்து, அகவயமான சுயபரிசோதனைக்கு வழிவகுக்கின்றன. நம்முள் இருக்கும் அகந்தை, பேராசை, சோம்பல் மற்றும் அறியாமை ஆகிய இருளை (அசுரர்களை) ஞான ஒளியைக் கொண்டு (சக்தி வழிபாடு) அழிப்பதே நவராத்திரியின் மூலத் தத்துவமாகும்.
இச்சை (துர்கை), கிரியை (லட்சுமி), ஞானம் (சரஸ்வதி) ஆகிய மூன்று சக்திகளின் வழிபாடும் மனிதனைப் பாசத் தளைகளில் இருந்தும், அறியாமையில் இருந்தும் விடுவித்து விடுதலை (முக்தி) நோக்கி அழைத்துச் செல்கிறது. நவராத்திரி என்பது வெறும் புறச்சடங்கு அல்ல; மனிதனின் உடலுக்குள் இருக்கும் தேஜஸை (ஆற்றலை) தட்டி எழுப்பி, ஆன்மிக அறிவையும் லெளகீக வெற்றியையும் ஒருசேரப் பெற உதவும் ஒரு தெய்வீக வாய்ப்பாகும்.
4. எல்லோரும் கொண்டாடும் நவராத்திரி
நவராத்திரி விழா இந்திய சமய மரபின் மிக முக்கியமான மூன்று பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் ஆகிய பிரிவுகளுக்கும் பொதுவான ஒரு விழா. சித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங்களையும் எமனின் கோரப்பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே நவராத்திரி வழிபாடு உள்ளது.கலாச்சாரம் காண்
சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத்திரியும் கொண்டாடப் படுகிறது. சாரதா நவராத்திரி அனைவரும் கொண்டாடும் தனிச்சிறப்பு பெற்றது. உத்தரபிரதேசத்தில் ராமலீலா, மேற்கு வங்காளத்தில் காளிபூஜை, துர்காபூஜை, கர்நாடகத்தில் தசரா பண்டிகை, என்று பல்வேறு பெயர்களில் இந்த நவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது,மூன்று சமயப் பிரிவுகளுக்கும் உரிய பண்டிகையாக இருந்தாலும் இது பெண் தெய்வத்துக்கு உரிய பண்டிகை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
5. நவராத்திரி கொண்டாட்டங்களில் வேறுபாடு
நவராத்திரிப் பெருவிழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டாலும், வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் கொண்டாட்ட முறைகளிலும், கலாச்சார வெளிப்பாடுகளிலும் சுவாரஸ்யமான பல வேறுபாடுகள் உள்ளன. வடமாநிலங்களில் (குறிப்பாக உத்தரப்பிரதேசம், தில்லி, குஜராத் போன்ற இடங்களில்) நவராத்திரி என்பது ராமாயணக் கதையை அடிப்படையாகக் கொண்டது.
ஒன்பது நாட்களும் ‘ராமலீலா’ என்ற பெயரில் ராமரின் கதைகள் நாடகங்களாக நடத்தப்படுகின்றன. பத்தாம் நாளான விஜய தசமியன்று, ராவணன், கும்பகர்ணன் ஆகியோரின் பெரிய பொம்மை களை எரியூட்டும் ‘ராவண தஹனம்’ மிக பிரமாண்டமாக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. குஜராத் மற்றும் மேற்குப் பகுதிகளில் இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் ஆண்கள் பாரம்பரிய உடைகளில் ஒளிரும் தடிகளுடன் (டாண்டியா) வட்டவடிவில் பாடி ஆடும் ‘கர்ப்பா’ நடனம் நவராத்திரியின் முக்கிய அடையாளமாகும். மேற்கு வங்கத்தில் சாரதா நவராத்திரி ‘துர்கா பூஜை’ என்ற பெயரில் மிகப் பிரமாண்டமான கலைநயமிக்க பந்தல்கள் அமைக்கப்பட்டு, மகா சஷ்டி முதல் தசமி வரை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
6. தென்னாட்டின் கொண்டாட்ட முறைகள்
தென்னகத்தில் (குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா) நவராத்திரியின் மையப் புள்ளியாக அமைவது ‘கொலு’ ஆகும். ஒன்பது படிகளில் மரப்பொம்மைகள், புராணக் கதாபாத்திரங்கள், கொலு பொம்மைகளைக் கொண்டு பிரபஞ்சத்தின் படைப்புத் தத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் படிகளாக அடுக்கி வைப்பார்கள்.புவியியல் காண்
தமிழகத்தில் அம்மன் வழிபாட்டோடு சேர்ந்து, இல்லங்களிலும் கோயில்களிலும் தேவார திருவாசகம், அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம் மற்றும் பாசுரங்கள் பாடி இறைவனை வழிபடும் வழக்கம் தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அம்மனுக்குத் தனித்தனியாக ஒன்பது விதமான சுண்டல்கள், பாயசங்கள், பாரம்பரியப் பிரசாதங்கள் செய்யப்பட்டு, மாலையில் கொலு பார்க்க வரும் பெண்களுக்குத் தாம்பூலம் மற்றும் பிரசாதம் வழங்கும் சமூகப் பண்பாடு தென்னகத்தின் தனிச்சிறப்பாகும்.
மார்க்கண்டேய புராணத்தில் உள்ள ‘தேவி மாகாத்மியம்’ (ஸ்ரீ துர்கா சப்தசதி) எனப்படும் நூலின்படி, அசுரர்களின் அரசனான மகிஷாசுரனை அழிக்க மும்மூர்த்திகளின் சக்தியால் அன்னை ஆதிசக்தி தோன்றி, அவனுடன் ஒன்பது இரவுகள் மற்றும் பகல்கள் உக்கிரப் போர் புரிந்தாள். பத்தாம் நாளான விஜயதசமியன்று அன்னை அவனை வதம் செய்தாள். இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில்தான் நவராத்திரி வழிபாடு தோன்றியது. இதிகாச காலத்தில் ராவணனை வதம் செய்வதற்கு முன்பு, ராமர் தன் வெற்றிக்காக நவராத்திரி விரதத்தைத் தொடங்கினார் என்று ஒரு செய்தி உண்டு.. நவராத்திரி இன்றைக்கு இவ்வளவு பிரமாண்டமாகவும் விரிவாகவும் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதற்குப் பின்வரும் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பிரமுகர்களின் பங்களிப்பு முக்கியக் காரணம் தேவி உபாசகர்கள்:
8. சக்தி உபாசனை
ஆதி காலத்தில் காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் சக்தி வழிபாட்டைத் தொன்மையாகச் செய்து வந்த முனிவர்களும், தாந்திரீக உபாசகர்களும் இந்த ஒன்பது நாள் வழிபாட்டை முறைப்படுத்தினர். தென்னிந்தியாவில் நவராத்திரி விழாவிற்குப் புத்துயிர் கொடுத்து, கொலு மற்றும் தசரா திருவிழாவை மிக விரிவாகக் கொண்டாடும் வழக்கத்தைக் கொண்டுவந்ததில் விஜயநகரப் பேரரசர்களின் பங்கு மிக முக்கியமானது. 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில் தசரா திருவிழா அரசு விழாவாக மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே கொலு வழிபாடுகள் விரிவடைந்தன.
வடகிழக்கு மாநிலங்களில் (குறிப்பாக மேற்கு வங்கம்) பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிறகு உள்ளூர் ஜமீன்தார்களும், மன்னர்களும் பொதுமக்களை இணைத்து ‘துர்கா பூஜை’யாக இதை மிக விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கினர். காலப்போக்கில் இது தேசிய விழாவாக உருவெடுத்தது. இது அசுரர்களை அழிக்க அன்னை நிகழ்த்திய போரின் நினைவாகவும், தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியை நிலைநிறுத்தவும் தோன்றியது. பிற்காலத்தில் மன்னர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் இதனை ஒரு மக்கள் திருவிழாவாக மாற்றி விரிவாகக் கொண்டாடினர்.
9. முப்பெரும் தேவியர் வழிபாடு
நவராத்திரியின் ஒன்பது நாள்களும் மனிதனின் ஆன்மிக வளர்ச்சிக்குத் தேவையான மூன்று முக்கிய நிலைகளைக் குறிக்கும் வகையில், முப்பெரும் தேவியரான துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு முறையே மூன்று மூன்று நாட்கள் பிரிக்கப்பட்டு வழிபடப்படுகிறார்கள். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்திக்கு (விருப்பச் சக்தி) உரியவை. மனிதனின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் அறி யாமை, சோம்பல், பேராசை மற்றும் தீய குணங்களை வேரோடு கிள்ளி எறிவதே இக்காலகட்டத்தின் நோக்கமாகும்.அசுரர்களின் கொட்டத்தை அடக்க அன்னை ஆதிசக்தி துர்கா தேவியாக உருவெடுத்து, தீய சக்திகளை அழித்த உக்கிர வடிவ காலமிது.இந்த நாட்களில் துர்கை மற்றும் காளி தேவியைப் பூஜித்து வழிபடுகிறோம்.
10. செல்வமும் நற்குணங்களும்
அறியாமை நீங்கிய மனத்தில் நற்குணங்களையும், ஆன்மிகச் செல்வங் களையும் நிலைநிறுத்துவதே இடை மூன்று நாள்களின் கிரியா சக்தி (செயல்பாட்டுச் சக்தி) வழிபாடாகும்.வெறும் லெளகீகச் செல்வம் (தங்கம், பணம்) மட்டுமல்லாமல், அமைதி, கருணை, பொறுமை, மனநிறைவு மற்றும் நற்பண்புகள் ஆகிய உன்னதமான செல்வங்களை அன்னை மகாலட்சுமி இந்த நாட்களில் அள்ளி வழங்குகிறாள். மனக் குப்பைகளை அகற்றிய பின், அங்கே தெய்விகச் செல்வம் குடியேறவும், குடும்பத்தில் ஐசுவரியம் பெருகவும் லட்சுமி தேவியை மனதார வழிபடும் காலம் இது.
11. மெய்ஞ்ஞானம் மற்றும் கலை
கடை மூன்று நாள்கள், தீமை அழிந்து, நற்குணங்கள் நிறைந்த மனத்தில் இறுதி நிலையாக ஞானம் ஒளிர வேண்டும். அதைக் குறிப்பதே ஞான சக்தியான சரஸ்வதி தேவியின் வழிபாடாகும். கல்வி, கலை, வித்தை மற்றும் உலகியல் அறிவைத் தாண்டிய மெய்ஞ்ஞானத்தை (ஆன்மிக அறிவு) வழங்கி, ஆன்மாவை விடுவிப்பது சரஸ்வதி தேவியின் அருளாகும்.கடைசி மூன்று நாள்களில் புத்தகங்கள், கலைப்பொருட்கள் மற்றும் இசைக் கருவிகளை வைத்து பூஜை செய்து, சரஸ்வதியை வழிபடுவதோடு, பத்தாம் நாளான விஜயதசமியில் கல்வித் தொடக்கத்தையும் (வித்யாரம்பம்) இதன் நீட்சியாகக் கொண்டாடுகிறோம்.முதல் மூன்று நாள்கள் நம்மைத் தீமைகளில் இருந்து விடுவிக்கின்றன; அடுத்த மூன்று நாள்கள் நற்குணங்களையும் வளத்தையும் தருகின்றன; இறுதி மூன்று நாள்கள் மெய்ஞான ஒளியை ஏற்றி முக்திக்கு வழிகாட்டுகின்றன. இந்த மூன்றும் இணைந்ததே முழுமையான நவராத்திரிப் பெருவிழா ஆகும்.
12. மகிஷாசுர வதம்
நவராத்திரிப் பெருவிழாவின் மிக முக்கியமான உச்சக்கட்ட நிகழ்வு மகிஷாசுர வதம். தேவி மாகாத்மியம் நூலில் விவரிக்கப்பட்டுள்ள கதையும், அதிலுள்ள ஆழமான ஆன்மிக உட்பொருளும் மனித வாழ்க்கைக்கு மிகப்பெரிய தத்துவத்தை உணர்த்துகின்றன.முதலில் கதையைப் பார்ப்போம். எருமைத் தலையும் மனித உடலும் கொண்ட மகிஷாசுரன் என்னும் அசுரன், தன் கடுமையான தவத்தால் பிரம்மனிடம் வரம் பெற்று தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பெரும் துன்பம் விளைவித்தான். ஆண்மகனால் தனக்கு மரணம் இருக்கக்கூடாது என்ற வரத்தின் செருக்கால் அவன் யாரையும் மதிக்காமல் மூவுலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். தேவர்களின் துயரத்தைப் போக்க மும்மூர்த்திகளின் (பிரம்மன், விஷ்ணு, சிவன்) மற்றும் இதர தேவர்களின் தேஜஸ் (பேரொளி) ஒன்றிணைந்து ஒரு உக்கிரமான பெண் சக்தியாக உருவெடுத்தது. அவர்தான் அன்னை ஆதிசக்தி (துர்காதேவி).
13. ஒன்பது நாள் போர் சொல்லும் தத்துவம்
மகிஷாசுரனுக்கும் அன்னை துர்கா தேவிக்கும் இடையே கடுமையான போர் தொடர்ச்சியாக ஒன்பது இரவுகள் மற்றும் பகல்கள் நடைபெற்றது. மகிஷாசுரன் பல்வேறு விலங்கு வடிவங்களை எடுத்து தேவியை ஏமாற்ற முயன்றான்.இறுதி நாளில், எருமை உருவத்தில் இருந்த மகிஷாசுரனின் மீது அன்னை தன் சூலாயுதத்தால் பாய்ந்து அவனது அகந்தையை அடக்கி வதம் செய்தாள். இதனால் தேவிக்கு ‘மகிஷாசுர மர்த்தினி’ (மகிஷாசுரனை அழித்தவள்) என்ற திருநாமம் கிடைத்தது.இது வெறும் கதையா ?இல்லை இந்த கதை நமக்கு சில அற்புதமான செய்திகளை சொல்கிறது.
1. எருமை மாடு என்பது ஆன்மிகத்தில் மடமை (அறியாமை), சோம்பல், அடம் மற்றும் மந்தமான குணங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
2. மனிதனின் உள்ளே இருக்கும் ஆணவம், பேராசை, தீய எண்ணங்கள் மற்றும் ‘நான்’ என்ற அகந்தைதான் மகிஷாசுரன்.
3. இந்தத் தீய குணங்கள் கட்டுப்பாடு இல்லாமல் பெருகும்போது மனிதனின் ஆன்மா அழிவை நோக்கிச் செல்கிறது.
4. தேவியின் கைகளில் உள்ள ஒவ்வொரு ஆயுதமும் மனிதனின் மனத்திலிருக்கும் தீமைகளை அழிக்கத் தேவையான விவேகம், விடாமுயற்சி மற்றும் ஆன்மிக அறிவைக் குறிக்கின்றன.
5. நம்முள் இருக்கும் அறியாமை மற்றும் தீய குணங்களைச் சக்தி வாய்ந்த பக்தி மற்றும் ஞான ஒளியைக் கொண்டு முற்றிலும் அழித்துவிட்டு, உள்ளத்தில் அமைதியையும் தூய்மையையும் நிலைநாட்டுவதே மகிஷாசுர வதத்தின் உண்மையான உட்பொருளாகும்.
14. முதல் மூன்று நாள்கள் – அலங்காரம்
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரம் ஒரே மாதிரியாக எல்லா கோயில்களிலும் இருப்பதில்லை. அந்தந்த ஆலய மரபு, ஆகமம், வித்யா வழிபாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்து பெயர்களும் வரிசையும் மாறலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் துர்க்கை-லட்சுமி-சரஸ்வதி என்ற மூன்று நிலைகளாக ஒன்பது நாட்களைப் பார்ப்பது பரவலான மரபு. ஆனால், தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஒன்பது அலங்காரங்களையும் அதன் தத்துவத்தையும் எளிமையாக இப்படிப் புரிந்துகொள்ளலாம்.புவியியல் காண்
முதல் நாள் – பாலா திரிபுரசுந்தரி- குழந்தை போன்ற தூய மனம். இறைவனை அடைய முதலில் மனம் தூய்மையாக வேண்டும்.
இரண்டாம் நாள் – அன்னபூரணி – உணவு என்பது உயிரின் ஆதாரம். பசியைப் போக்குவது மிகப்பெரிய தர்மம்.
மூன்றாம் நாள்- காயத்ரி – அறிவும் ஞானமும் பெறும் நிலை. அறியாமை என்ற இருளை அகற்றும் சக்தி.
15. அடுத்த ஆறு நாள்கள்
நான்காம் நாள் – லலிதா திரிபுரசுந்தரி-அன்பு, அழகு, கருணை ஆகியவற்றால் வாழ்க்கையை இனிமையாக்கும் சக்தி.
ஐந்தாம் நாள் – சண்டிகா / சாமுண்டி-தீமையை எதிர்த்து நிற்கும் துணிவு. அநீதிக்கு எதிரான சக்தி.
ஆறாம் நாள் – மகாலட்சுமி – செல்வம் என்பது பணம் மட்டுமல்ல; உடல் நலம், குடும்ப நலம், மனநிறைவு ஆகியவையும் செல்வமே.
ஏழாம் நாள் – சப்தமி – சரஸ்வதி, கல்வி, கலை, அறிவு, ஞானம். மனிதனை உயர்த்துவது அறிவு.
எட்டாம் நாள் – பிரசித்தி பெற்ற துர்க்காஷ்டமி – பயத்தையும் தடைகளையும் வெல்லும் மன உறுதி.
ஒன்பதாம் நாள் – மகிஷாசுரமர்த்தினி – மனிதனுக்குள் இருக்கும் அகங்காரம், ஆணவம், தீய எண்ணங்களை அழித்தல்.
பத்தாம் நாள் – ராஜராஜேஸ்வரி / விஜயதசமி எல்லா சக்திகளும் ஒன்றாகி வெற்றியைத் தரும் நிறைவு.
16. வேறு விதமாக 9 நாள் அலங்காரமும் தத்துவமும்
முதலாம் நாள் அலங்காரம்: சைலபுத்ரி வடிவம் – மலைகளின் மகளாகவும், சாந்த சொரூபமாகவும் காட்சி தருதல்.
இரண்டாம் நாள் அலங்காரம்: பிரம்மச்சாரிணி வடிவம் – தவக்கோலம் மற்றும் துறவறத்தின் மேன்மையை உணர்த்துதல்.
மூன்றாம் நாள் அலங்காரம்: சந்திரகாந்தா வடிவம் – நெற்றியில் சந்திரப் பிறையுடன் வீரம் மற்றும் கருணையை வெளிப் படுத்துதல்.
நான்காம் நாள் அலங்காரம்: கூஷ்மாண்டா வடிவம் – பிரபஞ்சத்தைப் படைத்த அமுதச் சுடராகத் தோன்றுதல்.
ஐந்தாம் நாள் அலங்காரம்: ஸ்கந்தமாதா வடிவம் – முருகனின் (ஸ்கந்தன்) தாயாகக் கையில் குழந்தையுடன் அன்னை அருள்புரிதல்.
ஆறாம் நாள் அலங்காரம்: காத்யாயனி வடிவம் – கோபமும் கருணையும் கலந்த மகரிஷி காத்யாயனரின் மகளாகக் காட்சி அளித்தல்.
ஏழாம் நாள் அலங்காரம்: காலராத்ரி வடிவம் – அச்சுறுத்தும் தோற்றத்தில் தீய சக்திகளை முற்றிலும் அழிப்பவளாகத் திகழ்தல்.
எட்டாம் நாள் அலங்காரம்: மகாகௌரி வடிவம் – தூய்மையின் அடையாளமாகவும், பசுமை மற்றும் அமைதியின் வடிவமாகவும் இருத்தல்.
ஒன்பதாம் நாள் அலங்காரம்: சித்திதாத்திரி வடிவம் – சகல சித்திகளையும், வரங்களையும் பக்தர்களுக்கு வாரி வழங்கும் கருணை வடிவம்.
17. ஒன்பது படி நிலைகள்
நவராத்திரி என்பது ஒன்பது அம்மன்களை தனித்தனியாக வணங்குவது மட்டும் அல்ல.அது மனிதனுடைய ஆன்மிகப் பயணத்தை ஒன்பது படிகளாகக் காட்டுகிறது.
1. முதல் நிலை – தூய்மை. பாலா திரிபுரசுந்தரி.
2. அடுத்த நிலை – உயிரைக் காப்பது. அன்னபூரணி.
3. பின்னர் – அறிவைப் பெறுவது. காயத்ரி.
4. அறிவுடன் அன்பும் கருணையும் வளர்வது. லலிதா.
5. தீமையை எதிர்க்கும் துணிவு வருவது. சண்டிகை.
6. வாழ்க்கைக்குத் தேவையான வளம் கிடைப்பது. மகாலட்சுமி.
8. அந்த வளத்தையும் அறிவையும் நல்ல வழியில் பயன்படுத்துவது. சரஸ்வதி.
9. உள்ளிருக்கும் பயத்தை வெல்வது. துர்க்கை.
10. கடைசியில் அகங்காரத்தை அழிப்பது. மகிஷாசுரமர்த்தினி.
அதன் பிறகுதான் விஜயம். அதனால்தான் பத்தாம் நாள் விஜயதசமி.
ஒன்பது நாட்கள் – பூஜையும் நிவேதனமும்
18. முதல் நாள் – பாலா திரிபுரசுந்தரி
நவராத்திரியின் முதல் நாள் அம்மனை பாலா திரிபுரசுந்தரி வடிவில் வழிபடுவது வழக்கம். குழந்தையின் மனம் எவ்வாறு கள்ளம் கபடமற்றதாக இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் தூய்மையாக வேண்டும் என்பதே இதன் தத்துவம். செவ்வந்தி போன்ற மலர்களால் அம்மனை அர்ச்சித்து, லலிதா திரிபுரசுந்தரி தியானம் அல்லது அம்மன் தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கலை நிவேதனமாகப் படைக்கலாம். வாழ்க்கையின் முதல் தேவை மனத் தூய்மை என்பதையே இந்த நாள் உணர்த்துகிறது.
19. இரண்டாம் நாள் – அன்னபூரணி
இரண்டாம் நாள் அன்னபூரணி அலங்காரம். உலகில் உயிர்கள் வாழ உணவே முதன்மையானது. எனவே பசியைப் போக்குவது மிகப்பெரிய தர்மம் என்பதை அன்னபூரணி வழிபாடு உணர்த்துகிறது. மல்லிகை மலர்களால் அம்மனை அர்ச்சித்து, அன்னபூர்ணா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். பால் சாதம் அல்லது தயிர் சாதம் நிவேதனமாகப் படைக்கலாம். “எல்லா உயிர்களுக்கும் உணவு கிடைக்க வேண்டும்” என்ற நல்ல எண்ணத்தோடு இந்த வழிபாடு அமைய வேண்டும்.
20. மூன்றாம் நாள் – காயத்ரி
மூன்றாம் நாள் காயத்ரி தேவி வழிபாடு. இருளை அகற்றி வெளிச்சத்தைத் தருவது போல, அறியாமையை அகற்றி அறிவைத் தருவது கல்வி. செந்தாமரை போன்ற மலர்களால் அம்மனை அர்ச்சித்து, காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். வெண்பொங்கல் நிவேதனமாகப் படைக்கலாம். அறிவு என்பது புத்தகத்தில் மட்டும் இருப்பதல்ல; நல்லதைத் தெரிந்து, அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதே உண்மையான அறிவு என்பதை இந்த நாள் நினைவூட்டுகிறது.
21. நான்காம் நாள் – லலிதா திரிபுரசுந்தரி
நான்காம் நாள் லலிதா திரிபுரசுந்தரி வழிபாடு. அன்பும் அழகும் கருணையும் நிறைந்த தெய்வ வடிவம் இது. ரோஜா போன்ற மலர்களால் அம்மனை அலங்கரித்து, லலிதா ஸ்தோத்திரங்கள் அல்லது லலிதா திரிசதி பாராயணம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் நைவேதனமாகப் படைக்கலாம். வாழ்க்கையில் அறிவு மட்டும் போதாது; அந்த அறிவுடன் அன்பும் கருணையும் சேர்ந்தால்தான் மனித வாழ்க்கை அழகாகிறது என்பதே இந்த நாளின் செய்தி.
22. ஐந்தாம் நாள் – சண்டிகை
ஐந்தாம் நாள் சண்டிகை அல்லது சாமுண்டி வடிவில் அம்மனை வழிபடலாம். தீமையை எதிர்த்து நிற்கும் துணிவையும், அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனத்தையும் சண்டிகை நமக்குத் தருகிறாள். செவ்வரளி போன்ற மலர்களால் அர்ச்சித்து, தேவி கவசம் போன்ற தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். கடலைச் சுண்டல் நைவேதனமாகப் படைக்கலாம். தீமையைப் பார்த்தும் அமைதியாக இருப்பது நல்ல பண்பு அல்ல; தர்மத்தின் பக்கம் நிற்கும் துணிவு வேண்டும் என்பதே இந்த நாளின் தத்துவம்.
23. ஆறாம் நாள் – மகாலட்சுமி
ஆறாம் நாள் மகாலட்சுமி வழிபாடு. தாமரைமலர் லட்சுமியின் அடையாளம். தாமரையால் அம்மனை அர்ச்சித்து, ஸ்ரீ சூக்தம் பாராயணம் செய்யலாம். பால் பாயசம் போன்ற இனிப்புகளை நிவேதனமாகப் படைக்கலாம். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல. உடல்நலம், நல்ல குடும்பம், நல்ல உறவுகள், மனநிறைவு, தர்மமாக வாழும் வாய்ப்பு ஆகிய அனைத்தும் செல்வங்களே என்பதை மகாலட்சுமி வழிபாடு உணர்த்துகிறது.
24. ஏழாம் நாள் – சரஸ்வதி
ஏழாம் நாள் சரஸ்வதி தேவி வழிபாடு. வெள்ளைத் தாமரை அல்லது மல்லிகை போன்ற மலர்களால் அம்மனை அர்ச்சித்து, சரஸ்வதி ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். அவல் அல்லது வெள்ளைச் சுண்டல் போன்ற எளிய நிவேதனங்களைப் படைக்கலாம். புத்தகங்கள், இசைக்கருவிகள், குழந்தைகளின் கல்விப் பொருட்கள் ஆகியவற்றை அம்மன் முன் வைத்து வழிபடுவதும் இந்த நாளின் சிறப்பு. மனிதனை உயர்த்தும் உண்மையான செல்வம் கல்வியும் ஞானமுமே என்பதை சரஸ்வதி வழிபாடு எடுத்துச் சொல்கிறது.
25. எட்டாம் நாள் – துர்கை
எட்டாம் நாள் துர்கை அம்மன் வழிபாடு. செம்பருத்தி போன்ற மலர்களால் அம்மனை அலங்கரித்து, துர்கா கவசம் அல்லது துர்கா ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். புளியோதரை அல்லது சுண்டல் நிவேதனமாகப் படைக்கலாம். துர்கை என்றால் நம்மைச் சூழ்ந்திருக்கும் துன்பங்களையும் தடைகளையும் கடந்து செல்லச் செய்யும் சக்தி. வெளியில் இருக்கும் எதிரிகளைவிட நமக்குள் இருக்கும் பயம், சோர்வு, தாழ்வு மனப்பான்மை ஆகியவற்றை வெல்வதே முக்கியம் என்பதை இந்த நாள் உணர்த்துகிறது.
26. ஒன்பதாம் நாள் – மகிஷாசுரமர்த்தினி
ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி வழிபாடு. செவ்வந்தி, செம்பருத்தி போன்ற மலர்களால் அம்மனை அலங்கரித்து, மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் போன்ற தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல் அல்லது பாயசம் நிவேதனமாகப் படைக்கலாம். மகிஷாசுரன் என்பது வெளியில் இருந்த ஒரு அசுரன் மட்டுமல்ல; மனிதனுக்குள் இருக்கும் அகங்காரம், ஆணவம், பொறாமை, தீய எண்ணங்கள் ஆகியவற்றுக்கும் ஒரு குறியீடாகப் பார்க்கலாம். அவற்றை அழித்தால்தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.
பத்தாம் நாள் – விஜயதசமி
ஒன்பது நாட்கள் அம்மனை வழிபட்ட பிறகு வரும் பத்தாம் நாள் விஜயதசமி. இது வெற்றியின் நாள். மனத்தூய்மையிலிருந்து தொடங்கி, அன்னதானம், அறிவு, அன்பு, துணிவு, வளம், கல்வி, பயமின்மை, அகங்கார அழிப்பு என்று ஒன்பது படிகளைக் கடந்து வந்த மனிதன் இறுதியில் தர்மத்தின் வெற்றியை அடைகிறான். நவராத்திரி என்பது வெறும் அலங்காரமும் நிவேதனமும் கொண்ட திருவிழா அல்ல.அம்மனை வெளியே வழிபடுவது ஒரு பக்கம்.அந்த அம்மனின் ஒவ்வொரு குணத் தையும் நமக்குள் வளர்த்துக் கொள்வதே நவராத்திரியின் உண்மையான நோக்கம்.
27. குங்கும அர்ச்சனையும் லலிதா சகஸ்ரநாமமும்
நவராத்திரி நாட்களில் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்வது சிறப்பான வழிபாடாகும். குங்குமம் மங்களத்தின் அடையாளம். அம்மனின் திருவடிகளில் குங்குமத்தைச் சமர்ப்பித்து, ஒவ்வொரு நாமத்தையும் சொல்லி அர்ச்சனை செய்வது, மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு வழிபாட்டு முறையாகும். இதனுடன் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நவராத்திரி வழிபாட்டில் இன்னும் சிறப்பு. அம்மனின் ஆயிரம் திருநாமங்களும் அவளுடைய பல்வேறு சக்திகளையும் குணங்களையும் எடுத்துச் சொல்கின்றன. ஒவ்வொரு நாமத்தையும் சொல்லும்போது, ஒரு குங்குமப் பொட்டினை அம்மன் திருவடிகளில் அல்லது அர்ச்சனைத் தட்டில் சமர்ப்பிப்பது வழக்கம். கூட்டாகச் சேர்ந்து லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து, குங்கும அர்ச்சனை செய்யலாம். குங்குமம் ஒரு சிறிய பொருள். ஆனால், அதன் பின்னால் இருக்கும் எண்ணம் பெரியது.ஒரு நாமம் –
“எனக்கு மட்டும் நன்மை வேண்டும்” என்ற பிரார்த்தனை யிலிருந்து“எல்லோரும் நலமாக வாழ வேண்டும்” என்ற பிரார்த் தனைக்கு மனம் உயர்வதே கூட்டுப் பிரார்த்தனையின் சிறப்பு.
28. கொலு – தத்துவம்
நவராத்திரி என்றாலே நம் நினைவுக்கு வருவது கொலு. படிக்கட்டுகளில் பொம்மைகளை அடுக்கி வைத்து வழிபடுவது வெறும் அலங்காரம் அல்ல. அதன் பின்னால் நம் முன்னோர்கள் அழகான ஒரு தத்துவத்தை வைத் திருக்கிறார்கள். கொலுவில் மேலிருந்து கீழாகப் படிகள் அமைக்கப்படுகின்றன. இந்தப் படிகள் படைப்பின் படிநிலைகளை நினைவுபடுத்து வதாக பார்க்கப்படுகின்றன.
மேல்நிலையில் தெய்வங்களையும், அதற்குக் கீழே முனிவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று பல வகையான உயிரினங்களையும், தாவரங்களையும் அமைப்பது வழக்கம். இதன் மூலம் உலகில் உள்ள அனைத்தும் ஒரே பரம்பொருளின் படைப் புகள் என்ற எண்ணம் வெளிப்படுகிறது. மனிதன் உயர்ந்தவன் என்று பெருமை கொள்ள முடியாது. அவனுடைய வாழ்க்கைக்கு தாவரங்கள் உண வையும் காற்றையும் தருகின்றன.
விலங்குகள் இயற்கைச் சமநிலையில் பங்கு வகிக்கின்றன. பறவைகள் விதைகளைப் பரப்புகின்றன. இவ்வாறு பார்த்தால், ஒவ்வொரு உயிருக்கும் இந்த உலகத்தில் ஒரு இடமும் ஒரு பயனும் இருக்கிறது. கொலுவின் படிகளில் பொம்மைகள் வெவ்வேறு நிலைகளில் இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே கொலுவின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அதுபோலத்தான் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், தேவர்கள் என்று தோற்றத்தில் வேறுபட்டாலும், அனைத்தும் இறைவனுடைய படைப்பில் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கின்றன. கொலுவில் வைக்கப்படும் விவசாயக் காட்சிகள், திருமணக் காட்சிகள், கிராம வாழ்க்கை, சந்தை, பள்ளி, கோயில் போன்ற சிறிய பொம்மைகள் நம் சமூக வாழ்க்கையையும் நினைவுபடுத்துகின்றன. குழந்தைகள் அவற்றைப் பார்த்து விளையாடுவதோடு, வாழ்க்கையைப் பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள்.
29. படைத்தவனின் பார்வையில் அனைத்தும் சமமே
கொலு என்பது வெறும் பொம்மைகளின் வரிசை அல்ல.
1. படிகளில் பொம்மைகள்.
2. பொம்மைகளுக்குள் வாழ்க்கை.
3. வாழ்க்கைக்குள் இயற்கை.
4. இயற்கைக்குள் இறைவன்.
கொலுவைப் பார்க்க வரும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, குங்குமம் கொடுப்பதும், குழந்தைகளுக்கு சுண்டல் வழங்குவதும் இந்த விழாவை ஒரு கூட்டுப் பண்பாட்டு நிகழ்வாக மாற்றுகிறது. வீடு மட்டும் அல்லாமல் உறவுகளும், அக்கம் பக்கத்தினரும் ஒன்றாகச் சேரும் வாய்ப்பாகவும் கொலு அமைகிறது.
கொலு நமக்குச் சொல்லும் செய்தி மிக எளியது. “படைப்பில் உயர்வு-தாழ்வு என்று நாம் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால் படைத்தவனின் பார்வையில் அனைத்தும் அவனுடைய படைப்புகளே.”அந்த உணர்வை மனதில் விதைப்பதே கொலுவின் அழகான ஆன்மிகத் தத்துவம்.
30. அம்பு போடுதல் – விஜயதசமியின் சிறப்பு
விஜயதசமி வெற்றி தரும் நாள். இந்த நாளில் புதிய கலைகள், கல்வி மற்றும் தொழில்களைத் தொடங்கலாம்; மூன்று வயது நிரம்பிய குழந்தைகளுக்குக் கோவில்களிலும் கல்வி நிலையங்களிலும் அரிசியில் ‘ஹரி ஓம்’, ‘ஹரிஸ்ரீ ’ என்று எழுதி கல்வியைத் தொடங்கலாம்.சரஸ்வதி பூசையில் வைக்கப்பட்ட புத்தகங்களை விஜயதசமி அன்று காலையில் எடுத்து முறைப்படி வாசிக்கத் தொடங்கலாம். இந்த நாளில் சில ஆலயங்களிலும் ஊர்களிலும் வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். இது ஒரு பழமையான மரபு. தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றியை நினைவுபடுத்தும் அடையாளமாக இது கருதப்படுகிறது.
அம்பு என்பது வெறும் ஆயுதம் அல்ல. அது நமது குறிக்கோளையும், அதை நோக்கிச் செல்லும் உறுதியையும் குறிக்கிறது. வில் இலக்கை நோக்கி வளைந்து நிற்பது போல, மனிதனும் தனது மனதை ஒரு நல்ல இலக்கை நோக்கி ஒருமுகப்படுத்த வேண்டும். அம்பு இலக்கை நோக்கிப் பாய்வது போல, நமது எண்ணங்களும் செயல்களும் தர்மத்தை நோக்கிச் செல்ல வேண்டும். ஒன்பது நாட்கள் அம்மனை வழிபட்டு மனத்தைத் தூய்மைப்படுத்திய பிறகு, பத்தாம் நாளில் அம்பை இலக்கை நோக்கி செலுத்துவதுபோல, நல்ல எண்ணத்தை செயலாக மாற்ற வேண்டும் என்பதே இந்த மரபின் உள்ளார்ந்த பொருள்.
“தீமை எவ்வளவு வலிமையாக இருந்தாலும், தர்மத்தின் பக்கம் உறுதியாக நின்றால் வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கையைத் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கிறது நவராத்திரி பண்டிகை.



