இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி. இந்த நாளில் பகவான் கிருஷ்ணரை குழந்தையாக பாவித்து, அவரை வீட்டிற்கு அழைத்து, அவருக்கு விருப்பமான உணவுப் பொருட்களை நைவேத்தியமாக படைத்து, அவரது மனம் மகிழும் படியாக பூஜைகள், அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும். கிருஷ்ணருக்கு விருப்பமான பாடல்கள் பாடி மகிழ்வதால், அவரும் மனம் மகிழ்ந்து நமக்கு அருளை வழங்குவார். நம்முடைய விருப்பங்களை நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை.
கிருஷ்ண ஜெயந்தி
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். புராணங்களின் படி, ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளிலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 04ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் எப்படி வழிபட்டால் கிருஷ்ணரின் அருளை முழுவதுமாக பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். கிருஷ்ணரை முறையாக எப்படி வீட்டிற்கு அழைத்து, எந்த முறையில் வழிபட வேண்டும், என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணனை வீட்டிற்கு அழைக்கும் முறை :
1. வீட்டை முழுவதுமாக சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
2. கிருஷ்ணர் படம் அல்லது சிலையை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம், வாசனை மலர்களை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்.
3. வாசலில் இருந்து பூஜை அறை வரை அரிசி மாவினால் குழந்தை கிருஷ்ணரின் பாதங்களை நம்முடைய கைகளால் வரைய வேண்டும். இந்த பாதச்சுவடுகள், கிருஷ்ணரே நம்முடைய வீட்டில் அவதரித்து, நம்முடைய பூஜையை ஏற்க வீடு தேடி வந்திருப்பதாக அர்த்தம்.
4. பாதச்சுவடுகள் வரையும் போது, “கிருஷ்ணரா வா…கோபால கிருஷ்ணா வா…” என்று பாடிக் கொண்டே பூஜை இடம் வரை வரைய வேண்டும். சிறு குழந்தையை கையை பிடித்து நடக்க வைத்து அழைத்து வந்தால் எப்படி மெதுவாக அழைத்து வருவோமோ அப்படி நினைத்துக் கொண்டு, கண்ணனை மொதுவாக வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.
5. நம்முடைய வீட்டிற்குள் கண்ணனே அடித்து எடுத்து வைத்து வருவதாக நினைத்துக் கொண்டு, பூஜை செய்யும் இடம் வரை பாதச்சுவடுகளை பக்தியுடன் வரைய வேண்டும்.
வழிபடும் முறை :
1. கண்ணனின் படம் அல்லது சிலைக்கு முன்பாக நெய் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
2. கண்ணனுக்கு மிகவும் பிரியமான துளசியால் அர்ச்சனை செய்யலாம்.
3. அப்படி அர்ச்சனை செய்ய முடியாவிட்டால் இரண்டு துளசி இலைகளை மட்டுமாவது கிருஷ்ணனின் பாதங்களில் சமர்ப்பித்து, போற்றி வழிபட வேண்டும்.
4. பிறகு தீப, தூபம் காட்டி ஆராதனை செய்யலாம்.
5. “ஓம் நமோ பகவதே வாசுதேவாய”, “ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா” ஆகிய மந்திரங்களை சொல்லி வழிபடலாம்.
6. கிருஷ்ண அஷ்டோத்திரம், கிருஷ்ணர் 108 போற்றி மந்திரங்கள், கிருஷ்ணர் சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும்.
எப்போது வழிபட வேண்டும்?
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி தினமான செப்டம்பர் 04ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை முதல் இரவு 11.45 வரை பகவான் கிருஷ்ணர் அவதரித்ததாக சொல்லப்படும் ரோகிணி நட்சத்திரமும், அஷ்டமி திதியும் இணைந்தே இருக்கின்றன. அதனால் வசதிக்கு ஏற்ப எப்போது வேண்டுமானாலும் பூஜை செய்து வழிபடலாம். ஆனால் கோவில்களில் பொதுவாக கிருஷ்ணர் அவதரித்ததாக சொல்லப்படும் நள்ளிரவு நேரத்திலேயே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடைபெறும். கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருப்பவர்கள் நள்ளிரவு பூஜைக்கு பிறகு விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
என்ன நைவேத்தியங்கள் படைக்கலாம்?
வெண்ணெய், பால், தயிர், அவல், பால் பாயாசம், லட்டு, முறுக்கு, சீடை, அதிரசம், பலவிதமான இனிப்புக்கள் ஆகியவற்றை படைக்கலாம். வசதி இல்லாதவர்கள் சிறிதளவு வெண்ணெய் மற்றும் வெல்லம் கலந்த அவல் மட்டும் நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். பண்டை காலம் முதல் நம்முடைய முன்னோர்கள் இவற்றை தான் பிரதான நைவேத்தியமாக கண்ணனுக்கு படைத்தனர். காரணம், கண்ணன் பிருந்தாவனத்தில் வெண்ணெய் திருடி உண்டதாலும், கண்ணனுக்கு காணிக்கையாக ஒரு பிடி அவல் கொடுத்த குசேலர் தன்னுடைய வறுமை நீங்கி, அனைத்து செல்வங்களையும், கண்ணனின் அருளையும் பெற்றதால் இவற்றையே முக்கியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.



