வெறும் செங்கல் சுவர்களால் சூழப்பட்ட கட்டிடம் மட்டும் அல்ல. அது ஒரு மனிதனின் கனவு, பாதுகாப்பு மற்றும் வாழ்நாள் உழைப்பின் அடையாளம்.
ஒரு வீட்டில் 70 ஆண்டுகள் வாழ்ந்த மனிதருக்கு ஒருவருக்கு அவரின் அந்திமக் காலம் தெருமுனையில் கழியப் போகிறது எனச் சொன்னால் எப்படி இருக்கும்? தான் வாழ்ந்த நாட்களின் நினைவுகள் நிறைந்த வீட்டிலிருந்து துரத்தப்பட்டு, வீதியில் வீசி எறியப்பட்டபோது, கண்ணீருடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இருந்த 87 வயதான மரியா விவரிக்க முடியாத அந்த உணர்வில்தான் தத்தளித்திருப்பார்.
இரக்கமில்லாமல் நடந்த மரியாவின் இந்த வெளியேற்ற நடவடிக்கை, ஸ்பெயினின் மனதில் கனன்று கொண்டிருந்த கோபத்தை பெருந்தீயாகப் பற்றி எரிய செய்திருக்கிறது.
87 வயதில் தான் வாழ்ந்த வீட்டின் நினைவுகளை இழந்து, வீடற்றவராகக் கண்ணீர் மல்க உயிர் துறந்த மரியாவின் மரணம், ஸ்பெயின் மக்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஜொலிக்கும் ஸ்பெயினின் நகரங்களுக்குப் பின்னால், அந்நாட்டின் சொந்த மக்கள் தங்குவதற்கு இடமின்றி அகதிகளாகத் தவிக்கும் இருண்ட பக்கம் ஒன்று ஒளிந்திருக்கிறது.
ஸ்பெயினில் நிலவும் கடுமையான வீட்டு வாடகை உயர்வு, வீடில்லா மக்களின் சோகங்கள், சொந்த நாட்டிலேயே அம்மக்களை அகதிகளாக மாற்றியுள்ளது. இந்தச் சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பு அந்நாட்டின் அரசாங்கத்தையும் ஆட்டம் காண வைத்துள்ளது.
மரியாவின் துயரமும் மக்கள் கொந்தளிப்பும்:
ஸ்பெயினில் நீண்ட காலமாகப் புகைந்து கொண்டிருந்த வீட்டு வசதி நெருக்கடி, 87 வயது மரியா டெல் கார்மென் அபாஸ்கல் என்ற மூதாட்டியின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து மிகப் பெரிய போராட்டமாக வெடித்தது.
மாட்ரிட் நகரின் ரெதிரோ பகுதியில் 1956-ஆம் ஆண்டு முதல் தன் தந்தை காலத்தில் இருந்து மரியா வாழ்ந்து வந்தார். பெற்றோர் மறைவுக்குப் பின் வாடகை கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் அங்கேயே வசித்து வந்த அவரிடம், 2018-ல் வீட்டை வாங்கிய ‘உர்பாகெஸ்டியோன்’ என்ற முதலீட்டு நிறுவனம் வாடகையை 500 யூரோவிலிருந்து 2,650 யூரோவாக உயர்த்தியது. பின்னர் 1,650 யூரோவாகக் குறைத்தாலும், ஓய்வூதியத் தொகையை மட்டுமே நம்பி வாழ்ந்த மரியாவால் அதைச் செலுத்த இயலவில்லை.
இதனைத் தொடர்ந்து, காவல் துறை உதவியுடன் சக்கர நாற்காலியில் இருந்தவாறே அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அவரது பொருட்களும் தெருவில் வீசி எறியப்பட்டன. மரியா கண்ணீருடன் மன்றாடியும் அந்நிறுவனம் இரக்கம் காட்டவில்லை. வீட்டை இழந்த அதிர்ச்சியிலும் உடல்நலக் குறைவாலும் பாதிக்கப்பட்ட மரியா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அக்டோபர் 7-ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் ஸ்பெயின் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாட்ரிட், பார்சிலோனா, வெலன்சியா, மலகா மற்றும் கேனரி தீவுகள் எனப் பல்வேறு நகரங்களில் மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் குதித்தனர்.
“இனி ஒரு மரியா கூட வீட்டை விட்டு வெளியேற்றப்படக் கூடாது!” என்ற முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கித் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.
வீடுகள் பற்றாக்குறையும் வாடகை உயர்வும்:
ஸ்பெயினில் கடுமையான வீடுகள் பற்றாக்குறை நிலவுகிறது. ஸ்பெயின் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது நாட்டில் 7,50,000 வீடுகளுக்கான பற்றாக்குறை உள்ளது. இது 2028-ஆம் ஆண்டுக்குள் 10 லட்சத்தை எட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுமானங்களின் வேகம் குறைவு, கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதாரச் சிக்கல்கள் இதற்கு முக்கியக் காரணங்களாகும்.
கடந்த பத்தாண்டுகளில் ஸ்பெயினில் சராசரி வாடகை இரண்டு மடங்குக்கும் மேலாக, அதாவது 84 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சில முக்கிய நகரங்களில் இந்த உயர்வு இன்னும் தீவிரமாக உள்ளது.
உதாரணமாக, தெற்கு நகரான மலகாவில் 113 சதவீதம் மற்றும் மார்பெல்லாவில் 150 சதவீதம் வரை வாடகை அதிகரித்துள்ளது. தேசிய புள்ளியியல் நிறுவனத்தின் தகவல்படி, ஸ்பெயினில் சராசரி மாத வருவாய் 2,460 யூரோக்கள் ஆகும். ஆனால், மாட்ரிட் நகரில் 50 சதுர மீட்டர் கொண்ட ஒரு குடியிருப்புக்கு மாத வாடகையே சுமார் 1,170 யூரோக்கள் வசூலிக்கப்படுகிறது. இது சராசரி வருமானத்தில் பாதியாகும். இதனால் மக்கள் வருமானத்தின் பாதியை வாடகைக்கே செலவிடும் அவலநிலை காணப்படுகிறது.
வாடகை உயர்வுக்கு என்ன காரணம்?
ஸ்பெயின் அரசியலமைப்பின் 47-வது பிரிவின்படி, மக்களுக்குக் கண்ணியமான மற்றும் போதுமான வீட்டு வசதிக்கான உரிமையை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது. ஆனால், ஏர்பிஎன்பி (Airbnb) போன்ற சுற்றுலாத் தலங்கள் மூலம் வீடுகள் அதிக லாபத்துக்கு வாடகைக்கு விடப்படுகின்றன. சர்வதேச நிதி நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் மொத்தமாக வீடுகளை விலைக்கு வாங்கி, செயற்கையாக வாடகையை உயர்த்துகின்றனர்.
மேலும், ஸ்பெயினில் அரசுக்குச் சொந்தமான சமூக நல வீடுகளின் எண்ணிக்கை 3 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. 2008-ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவைத் தொடர்ந்து, வீட்டு வசதித் துறை பெரும்பகுதி தனியாரிடம் சென்றதும் நெருக்கடியை ஆழப்படுத்தியது. ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் நாடுகளிலும் இதேபோன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன.
தேர்தல் அறிவிப்பும் அரசுக்கு நெருக்கடியும்
மக்களின் கோபத்தைத் தணிக்க, பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான அரசு அவசரச் சட்டங்களைக் கொண்டு வந்தது. எனினும், நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சிகளான மக்கள் கட்சி (PP), தீவிர வலதுசாரி Vox மற்றும் கத்தலோனியக் கட்சி (Junts) ஆகியவை ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடித்தன. வாடகை உரிமையாளர்களைக் கட்டுப்படுத்தினால் சந்தையில் வீடுகளின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இந்த அரசியல் முடக்கத்தாலும் தொடரும் போராட்டங்களாலும் பெரும் பின்னடைவைச் சந்தித்த பிரதமர் சான்செஸ், நாடாளுமன்ற முடக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டு திடீரென 2026 நவம்பர் 29 அன்று நாட்டில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
மக்களின் முதன்மைக் கோரிக்கைகள்
எளிய வாடகைதாரர்களை 2030 வரை வெளியேற்றத் தடை மற்றும் சர்வதேச நிதியமைப்புகள் வீடு வாங்குவதற்குத் தடை போன்றவற்றை அரசு முன்வைத்தாலும், நாடாளுமன்ற ஒப்புதல் இன்றி அவை முடங்கியுள்ளன.



