பிரான்சின் வட பகுதியில் உள்ள கலே நகருக்கு அருகில் அமைந்துள்ள யூரோடன்னல் தளத்தின் ஏறும் மேடையில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. லீ ஷட்டில் சேவையைப் பயன்படுத்திப் பயணிக்கத் தயாராக இருந்த சரக்கு லாரி ஓட்டுநர்களை ஏற்றிச் சென்ற மினி பேருந்து ஒன்று, அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்குத் தொடருந்து மீது மோதியதாகப் பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பேருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 19 பேர் காயமடைந்த போதிலும், யாருடைய காயங்களும் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனப் பா-டிரே-காலே மாகாண நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரகால மருத்துவக் குழுவினர், தீயணைப்பு வீரர்களும் மற்றும் மீட்புப் படையினரும் காயமடைந்தவர்களை மீட்டுச் சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்ட போதிலும், வழக்கமான ரயில் சேவைகளில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என யூரோஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்துப் பிரான்ஸ் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



