விமானம் அல்லது வேறு எந்த வழியிலும் பயணம் செய்யும்போது ஏனையவர்களுக்கு சொந்தமான பொதிகளையோ அல்லது பயணப்பொருட்களையோ கொண்டு செல்வதை தவிர்க்குமாறு விமான பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை கடத்துவதற்காக, அறியாத பயணிகளை கடத்தல்காரர்கள் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம் இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை சுங்கத்துறை ஊடகப்பேச்சாளர் சந்தனா புஞ்சிஹேவ தெரிவிக்கையில்,
தாங்கள் என்ன கொண்டு செல்கிறோம் என்பதை அறியாமலேயே சாதாரண மக்கள் கடுமையான குற்றங்களில் சிக்குவதற்கான அதிக அபாயம் இருப்பதாக கூறியுள்ளார்.
மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் கூட போதைப்பொருள் கடத்தல்காரர்களால் இந்த வழியில் அறியாமல் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும், சமீபத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் போதைப்பொருள் இருப்பை இறக்குமதி செய்ய முயன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், தாங்களே பயணப்பொருட்களை சோதித்தாலும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி போதைப்பொருட்களைக் கவனமாக மறைத்து வைப்பார்கள் என்றும், ‘இலவச விமான டிக்கெட் கொடுத்து வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்வதாக’ ஒருவர் கூறினால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைப் பற்றி மக்கள் கவனமாக சிந்திக்க வேண்டும் என்றும் சுங்கத்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் பல நாடுகளில், போதைப்பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், தங்களுக்குச் சொந்தமில்லாத பொருட்களையோ அல்லது பொதிகளையோ எந்த சூழ்நிலையிலும் கொண்டு செல்ல ஒப்புக்கொள்வது அனுமதிக்கப்படாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



