3 நாட்களில் 3 கொலை பீதியில் மக்கள்

 

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கிறிஸ்துராஜா (31), இவரது மனைவி ஆக்னேஸ் பவலி (26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருப்பூர் திருக்குமரன் நகர் அரசு பள்ளி பின்புறம் வசித்து வந்தனர். கிறிஸ்துராஜா பிரிண்டிங் நிறுவனத்திலும், ஆக்னேஸ் பவலி பனியன் நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். ஆக்னேஸ் பவலி யாரிடமோ நீண்ட நேரம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த வாரம் கிறிஸ்துராஜா கே.வி.ஆர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆக்னேஸ் பவலி மீது அதிக நேரம் யாரிடமோ செல்போனில் பேசுகிறார் என புகார் அளித்துள்ளார். புகாரைத் தொடர்ந்து போலீசார் ஆக்னேஸ் பவலியை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். தொடர்ந்து ஆக்னேஸ் பவலி செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை என தெரிகிறது. இதனால் நேற்று அதிகாலை மீண்டும் கிறிஸ்துராஜாவுக்கும் ஆக்னேஸ் பவலிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, மது போதையில் இருந்த கிறிஸ்துராஜா அம்மிக்கல்லை எடுத்து ஆக்னேஸ் பவலியின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு, வீரபாண்டி காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். விவசாயியை கொன்று கிணற்றில் வீச்சு?: உடுமலையை அடுத்த சாளையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி (61). விவசாயியான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் சாளையூரில் உள்ள 45 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் சடலமாக கிடந்தார்.

முன் விரோதம் காரணமாக ஆறுச்சாமி கொலை செய்யப்பட்டதாக புகார் தெரிவித்த உறவினர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறினர். விவசாயியின் மர்ம மரணம் குறித்து தளி போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூரில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 3 நாட்களில் 3 கொலை சம்பவங்கள் நடந்திருப்பது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.