
திரைத்துறையில் 23 ஆண்டுகளுக்கு மேலாக பிரபல நடிகையாக வலம் வரும் திரிஷா சமீப காலமாக அரசியல் தளங்களிலும் பேசு பொருளாக இருக்கிறார். முதல்வர் விஜய்யுடன் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் இவர், விரைவில் அரசியலில் குதிக்கவுள்ளார் என்ற செய்தி தீயாய் பரவி வருகிறது. ஆனால் அதற்கு அவர் நேரடியாக எந்த பதிலும் தெரிவிக்காமல் இருக்கிறார்.
இதனிடயே திரிஷாவை ஆதரித்து ஆங்காங்கே ரசிகர்கள் அணி திரள ஆரம்பித்துள்ளனர். கடந்த ஆகஸ்டில் மதுரையில் திரிஷா பெயரில் நற்பணி மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. இதையொட்டி ஒட்டப்பட்ட போஸ்டரில் அவரை அரசியலுக்கு வரவேற்கும் விதமாக எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை என்றும் திரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் தற்போது இதன் அடுத்த கட்டமாக திருநெல்வேலியில் புதிய பேரவை தொடங்கப்பட்டுள்ளது. ‘இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை’ எனும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இப்பேரவை சமூக பணிகளில் செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பேரவையின் அறிமுக வெளியீட்டு விழா நெல்லை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அதில் பேரவையின் லோகோவை அதன் நிறுவனரும் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ராஜகோபால் என்பவர் நிர்வாகிகளுடன் வெளியிட்டார். அந்த லோகோவில் ‘பதவிக்காக அல்ல, தமிழக மக்களின் உரிமைக்காக’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு இந்த பேரவை செயல்படும். இனிமேல் எங்களின் சமூக பணிகள் மாவட்ட வாரியாக எடுத்து செல்வோம். மருத்துவ முகாம், சட்ட உதவி முகாம், மரம் நடுதல் போன்ற நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளவுள்ளோம். இதற்காக பேரவை பெயரில் ஒரு வலைதளத்தை உருவாக்கவுள்ளோம். அதில் பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரியப்படுத்தினால் உரிய உதவிகள் செய்து கொடுக்கப்படும். சமூக பணி மற்றும் மக்கள் பணி மீது ஆர்வம் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் உறுப்பினர்களாக சேரலாம்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் விஜய்யுடன் திரிஷா அரசியல் பயணம் செய்தால் மக்களுக்கு நல்லது. எங்கள் பேரவையின் நோக்கம் முழுக்க முழுக்க சமூக பணிகளும் நலத்திட்ட உதவிகளும் தான். இது குறித்து திரிஷாவிடம் இன்னும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர் எங்கள் பேரவைக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் எங்கள் நற்பணிகள் தொடரும். அவர் இனிமேல் மக்கள் பிரச்சனைக்கு குரல் கொடுக்க வேண்டும். கண்டிப்பாக கொடுப்பார் என்று நம்புகிறோம். அவர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்” என்றார்.



