இனிமேல் நான் யாரிடம் போவேன்!’’ என்று புலம்பிக்கொண்டே

மந்திர உபதேசமோ, தெய்வத்தை நேருக்கு நேராகத் தரிசித்து அருள்பெறுவதோ எல்லோருக்கும் வாய்க்காது. அப்படி வாய்த்தும் அதைச் சரிவரப் பயன்படுத்த வில்லையென்றால்… என்னவாகும்? இந்த தொகுப்பில் காணலாம்.ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் ஆண்டான் என்ற சிறுவன் இருந்தான். அவனுக்கு ஐந்து வயதாகும் போது, அவனைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள் பெற்றோர்கள்.

அந்தப் பள்ளி ஆசிரியர் கண்டிப்பு நிறைந்தவர். ஒழுங்காகப் படிக்காத மாணவர்களைத் தண்டிப்பார். அதன் காரணமாக ஆண்டான், பள்ளிக் கூடத்திற்குப் போகாமல் ஏமாற்றத் தொடங்கினான். வயது பத்தானது. ஒருநாள்… ஆண்டான் பள்ளிக்குப் போகாமல் சுற்றிக் கொண்டிருந்த போது, சித்தர் ஒருவர் எதிர்ப்பட்டார். சற்றுநேரம் ஆண்டானை உற்றுப் பார்த்தார். சித்தருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.

ஆண்டானை அருகில் அழைத்து, “சிறுவனே! உனக்கு நான் காளியின் மந்திரத்தை உபதேசம் செய்கிறேன் வா!’’ என்று அழைத்து, ஆண்டானுக்குக் காளி மந்திரத்தை உபதேசித்து, “இதை நன்றாக உருவேற்று! நல்லதைப்பெறுவாய்!’’ என்று சொல்லிச் சென்றார். பார்த்தான் ஆண்டான்; “ஊர் சுற்றினால் நம்மைப் பார்க்கும் மற்ற பள்ளிச் சிறுவர்கள் யாராவது பிடித்துக் கொண்டுபோய், பள்ளிக் கூடத்தில் விட்டுவிடுவார்கள்.

 

பேசாமல் இந்த ஊர்க் காளிகோயிலில் போய்க் காளியின் பின்னால் மறைந்திருந்து, சித்தர் கூறிய மந்திரத்தை உருவேற்ற வேண்டியதுதான்’’ என்று தீர்மானித்தான் ஆண்டான். தீர்மானம் செயலானது. காளி கோயிலின் உள்ளே போய் காளிக்குப் பின்னால் ஔிந்து கொண்டு, மந்திரத்தை உருவேற்றத் தொடங்கினான், ஆண்டான். பல நாட்கள் நீடித்தது அந்த நிலை. ஒருநாள்… ஆண்டானுக்கு முன்னால் காளி தோன்றினாள்; “ஆண்டானே! உனக்கு இசைபாடும் வரம் வேண்டுமா? அல்லது வசைபாடும் வரம் வேண்டுமா? இரண்டில் ஏதாவது ஒன்றைக் கேள்! அந்த வரத்தைத் தருகிறேன்’’ என்றாள்.

சித்த புருஷரே நேராக வந்து மந்திர உபதேசம் செய்திருந்தும்; காளிதேவியே நேருக்குநேராகக் காட்சியளித்து நல்லது கெட்டதை எடுத்துச்சொல்லி, “தேவையானதைக் கேள்!’’ என்று சொல்லியும், ஆண்டானின் வினை அவனைத் தடுத்தது. ஆண்டான் கேட்டான்; “எனக்கு வசைபாடும் வரம்தான் வேண்டும். அதையே எனக்கு அளிப்பாயாக!’’ என வேண்டினான். காளி சிரித்தாள். மெல்லிய வேப்பங்குச்சி ஒன்றால், ஆண்டான் நாக்கில் எழுதினாள்; “இன்று முதல் நீ சொல்லும் சொற்கள் எல்லாம் அப்படியே பலிக்கும்’’ என்றுகூறி, ஆண்டான் பார்வையில் இருந்து மறைந்தாள். ஆண்டானுக்குக் குறுகுறுத்தது. வயது வேறு சிறு வயதல்லவா?

“காளிதேவி வரம்கொடுத்துவிட்டுப் போய்விட்டாள். அது உண்மையா – பொய்யா என்பதை முதலில் அவளிடமே பரிசோதித்துப் பார்த்துவிட வேண்டியதுதான்!’’ என்று தீர்மானித்தான் ஆண்டான். தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கத் துணிந்தான் ஆண்டான். காளி உருவச் சிலையும், கோயிலின் முன்னால் இருந்த கொட்டகையும் அவன் பார்வையில் பட்டன;

“காளி சிலை பின்னப்பட வேண்டும்! கொட்டகை தீப்பற்றி எரிய வேண்டும்!’’ என்று ஒரு பாடல் பாடினான். அப்போதே காளி சிலை பின்னப்பட்டது. கொட்டகை தீப் பற்றி எரிந்தது. காளி கொடுத்த வரத்தை வைத்து, அவளுக்கே தீங்கு உண்டாக்கிய ஆண்டான், பயம் முழுவதையும் விட்டான். அவனுடைய குணம் கோர குணமாக மாறிவிட்டது.

மறுநாள் காலையில் ஆண்டான் எழுந்து, வீம்பிற்காகப் பலர் பார்வையிலும் படும்படியாக, வீதியில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனைப்பார்த்த ஆசிரியர், “போய் அவனைப்பிடித்து இழுத்து வாருங்கள்!’’ என்று மாணவர்கள் சிலரை ஏவினார். மாணவர்கள் போய் ஆண்டானைக் கட்டியிழுத்து வந்து, ஆசிரியரின் முன்னால் நிறுத்தினார்கள். ஆசிரியர் ஆண்டானை அடிக்கத் தொடங்கினார்.

“காளியையே ஒரு கை பார்த்த என்னை, இந்த ஆசிரியர் அடிப்பதைப் பொறுப்பேனா நான்?’’ என்று கொதித்தெழுந்த ஆண்டான்;

“கூலி யீந்தனன் குறைத்திலன் படித்திலன் கொடிய,

கோலி லங்கு கை வாத்தியான் கொண்ட பெண்டாட்டி,

தாலி யற்றிடும்படி வரந்தாடி….’’– என்ற வசைகவியைப் பாடத் தொடங்கினான்.

ஆசிரியர் தலை பிளந்து கீழே விழுந்து மாண்டார். பார்த்துக் கொண்டிருந்த மற்ற மாணவர்கள், பயந்து சிதறி ஓடினார்கள். ஆசிரியரின் மகன் சடகோபன் என்பவன் தந்தையின் நிலைகண்டு கலங்கினான். ஆண்டான் கால்களில் விழுந்து அழுதான். அவன் நிலைகண்டு இரங்கிய ஆண்டான்,“நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். பயப்படாதே!’’ என்று ஆறுதல் கூறினான். ஆண்டானின் கொடுங்குணமும் வசைபாடும் சக்தியும் தெரிந்த செல்வந்தர்கள், அவனிடம் மிகுந்த பயம் கொண்டார்கள். ஆண்டானுக்குப் பொருள் – பல்லாக்கு முதலியவைகளை வழங்கினார்கள். அந்தப் பொருட்கள் அனைத்தையும் ஆசிரியரின் மகன் சடகோபனுக்கே வழங்கினான் ஆண்டான். தன்னிடம் யாராவது சிறு தவறு செய்தால்கூட, ஆண்டான் யோசிக்க மாட்டான். உடனே வசைபாடி விடுவான். அதன் காரணமாக யாராக இருந்தாலும் சரி! அனைவரும் ஆண்டானிடம் பயந்து நடுங்கினார்கள்.

ஒருநாள்… வெற்றிலைத் தோட்டம் ஒன்றின் வழியாக ஆண்டான் போய்க் கொண்டிருந்தான். அங்கிருந்த வெற்றிலைத் தோட்டக்காரரைப் பார்த்ததும், “எனக்குக் கொஞ்சம் வெற்றிலை கொடுங்கள்!’’ எனக்கேட்டான். அந்தத் தோட்டக்காரருக்கு ஆண்டானைப்பற்றித் தெரியாது. அதனால் அவர், “கொடுக்க மாட்டேன்’’ என்றார். ஆண்டானுக்குக் கோபம் தாங்கவில்லை; உடனே வசை கவி ஒன்று பாடி, அந்த வெற்றிலைத் தோட்டம் எரியும்படியாகச் செய்தான். இதேபோலத் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என்பதற்காகக் கல்யாண வீடு ஒன்றிலும் விபரீதம் நடக்கச்செய்தான் ஆண்டான்.

ஒரு சமயம் நாட்டில் பெரும்பஞ்சம் ஏற்பட்டது. உணவில்லாமல் மக்கள் திண்டாடினார்கள். அதையறிந்த ஆண்டான், கேரள மன்னரிடம் கேட்டு உதவி பெற்று வரலாம் என்று கேரளா போனான். ஆண்டான் வருகையை அறிந்த ஒற்றர்கள், மன்னரிடம் சென்று, “மன்னா! ஆண்டான் என்பவன், வசைபாடி அழிப்பதில் வல்லவன். அப்படிப்பட்டவன் இப்போது, நம் நாட்டிற்கு வந்திருக்கிறான். அவனிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆபத்தானவன் அவன்; அழிவை உண்டாக்கிவிடுவான் அவன்’’ என்று தகவலைச் சொன்னார்கள். அதைக் கேட்ட கேரள மன்னர், சிம்மாசனத்தில் இருந்தபடியே நடுங்கினார்.

உடனே முதலமைச்சரை அழைத்து, “நீ அந்த வசை கவி ஆண்டானிடம் சென்று, தாங்கள் என்ன செய்யச் சொன்னாலும் அப்படியே செய்யக் காத்திருக்கிறோம். எங்கள் மீது வசைகவி பாடாமல் செல்ல வேண்டும்’’ என்று வேண்டிக் கொள்!’’ என்று சொல்லி அனுப்பினார். முதலமைச்சரும் சென்று, ஆண்டானிடம் தகவலைச் சொல்லி வேண்டிக் கொண்டார். தேவையானவற்றை எல்லாம் சொல்லி, “கூடவே மறக்காமல், ஒரு வண்டி நிறையச் சர்க்கரையும் அனுப்பி வைக்க வேண்டும்!’’ என்று உத்தரவிட்டான் ஆண்டான்.

உத்தரவிட்ட ஆண்டான் உடனே ஊர் திரும்பினான்.ஆண்டானின் விருப்பப்படி அனைத்தையும் செய்த கேரள மன்னர், மறவாமல் ஒரு வண்டி நிறையச் சர்க்கரையும் அனுப்பினார். வந்த சர்க்கரையை மக்கள் பலருக்கும் வழங்கினான் ஆண்டான். பலரும் பெற்றுச் சென்றார்கள். அப்போது ஆண்டானின் தந்தையும் வந்து,“எனக்குச் சர்க்கரை கொடு!’’ என்று பலமுறை கேட்டுத் தொந்தரவு செய்தார். வழக்கப்படி ஆண்டானுக்குக் கோபம் எனும் கொடுங்குணம் தலை நீட்டியது.

“நக்கவரிச் சித்தவிடோ டுடுப்பதற்குத்

துணியுமின்றி நாட்டில் உள்ளோர்

ஒக்கவருந் திடும் பஞ்ச காலத்தில்

சிறிதேனும் உணர்வி லாமல்

சர்க்கரைசர்க் கரையென்றே

சிணுங்குதற்குத் தலைப்பட்டாய்’’– என்று பாடத் தொடங்கினான் ஆண்டான்.

அப்போதே, ஆண்டானின் தந்தையான வைகுந்தநாதன் தலை திடீரென்று வெடித்தது. அவர் கதை முடிந்தது. அதைக் கண்டு ஆண்டான் வருந்தினான். அவன் கொடூரத்தைக் கண்ட அனைவரும், அவனை வெறுக்கத் தொடங்கினார்கள். அதற்காக ஆண்டான், தன் கொடுங்குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. ஒரு சமயம், ஆண்டானின் நன்செய் நிலத்தை அளப்பதற்காக வந்த கணக்கப்பிள்ளை, நிலத்தை அளக்கத் தொடங்கினார். அப்போது ஆண்டானுக்கும் கணக்குப் பிள்ளைக்கும் பிரச்னை உண்டானது.

வழக்கப்படி ஆண்டானுக்குக் கோபம் வர, “இந்தக் கணக்குப் பிள்ளையின் கையில் பாம்பு கடிக்கட்டும்!’’ என்று மூன்று பாடல்கள் பாடினான். அவன் பாடி முடித்ததும், எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை; ஒரு பாம்பு வந்து கணக்குப் பிள்ளையின் கை விரலில் கடித்துவிட்டது. ஆனால் கணக்கப்பிள்ளை பயப்படவில்லை. ஒரு கத்தியை எடுத்துப் பாம்பு கடித்தவிரலை, உடம்பில் விஷம் ஏறுவதற்கு முன்னால் கையை வெட்டியெறிந்து விட்டுத் தைரியமாக உயிருடன் வீடு திரும்பினார். ஆண்டானால் அதைத் தாங்க முடியவில்லை; “அனைவரையும் ஆட்டிப் படைக்கும் நம்மிடம் இருந்து இந்தக் கணக்குப்பிள்ளையைத் தப்ப விடக்கூடாது’’ என்று கொதித்துப்போய், `காளி மடல்’ எனும் நூலைப்பாடிக் கணக்குப் பிள்ளையைக் கொன்று விட்டான் ஆண்டான். அந்தக் காலத்தில் `சிந்துக் களஞ்சியப் புலவர்’ என்ற புலவர் ஒருவர் இருந்தார்.

அவர் தமிழில் வண்ணங்கள் – சிந்துக்கள் முதலானவைகளைப் பாடுவதில் மிகவும் புகழ் பெற்றவர்.அவர் புலவர்களிடம் திறை – கப்பம் வாங்கும் பெரும் புலவராகத் திகழ்ந்தார். அப்படிப்பட்ட அந்தப் புலவர், ஆண்டானைப் பற்றிக் கேள்விப்பட்டார்.“இந்த ஆண்டானையும் அடக்கித் திறை – கப்பம் பெற வேண்டும்’’ என்ற எண்ணத்தில் பெரும் ஆரவாரத்தோடு ஒட்டப் பிடாரம் வந்தார். பல்லக்கில் வந்த அவர், திண்டு – மெத்தை ஆகியவைகளைப் போட்டு அமர்ந்து, பெரும் கம்பீரத்தோடு இருந்தார். ஏற்கனவே சிந்துக் களஞ்சியப் புலவரிடம் தோற்றுப் போய்க் கப்பம் கட்டி வந்த புலவர்கள் சிலர், ஆண்டானிடம் ஓடினார்கள்.

“நீங்கள்தான் அந்தச் சிந்துக் களஞ்சியப் புலவனின் கொட்டத்தை அடக்க வேண்டும்’’ என வேண்டினார்கள். உடனே ஆண்டான் கையில் ஒரு தேங்காயை எடுத்துக் கொண்டு, சிந்துக் களஞ்சியப் புலவரிடம் போனான். போன அவன், மெத்தையில் அமர்ந்து திண்டில் சாய்ந்து கொண்டிருந்த சிந்துக் களஞ்சியப் புலவரைப் பார்த்தான். யோசிக்கவே இல்லை. நேரே போய்ச் சிந்துக் களஞ்சியப் புலவரின் பக்கத்தில் அந்த மெத்தையிலேயே அமர்ந்தான்; திண்டில் சாய்ந்தான்.

அதைப் பார்த்த சிந்துக் களஞ்சியப் புலவருக்குக் கோபம் உண்டானது. அவர் கண்களில் கோபத்தைக்காட்டி, “என்னைப் போல நீ சிந்து பாட முடியுமா?’’ என்று ஆண்டானிடம் கேட்டார். ஆண்டான் பேசவே இல்லை; தான் கொண்டுபோன தேங்காயைச் சிந்துக்களஞ்சியப் புலவர் முன்னால் வைத்து, “துண்டு! துண்டு! துண்டு! துண்டு!’’ என அடுக்கடுக்காகச் சொன்னான். அதே விநாடியில் அங்கே முன்னால் வைக்கப்பட்டிருந்த தேங்காய், தானாகவே தூள் தூளாக உடைந்தது.

அதைச் சுட்டிக் காட்டிய ஆண்டான், “இதே போல உன் தலையையும் பாட்டுப் பாடியே உடைக்கும் சக்தி எனக்கு உண்டு. இப்படிப்பட்ட சக்தி உனக்கு இருக்கிறதா?’’ என்று கேட்டான். சிந்துக் களஞ்சியப் புலவருக்குப் பயத்தால் உடம்பு நடுங்கியது; எழுந்தார்; ஆண்டானை வணங்கி, “ஐயா! ஆண்டானே! என்னை ஒன்றும் செய்யாதே! தோற்றுப்போய் விட்டேன் நான்’’ என்று சொல்லிவிட்டு, ஒட்டப்பிடாரத்தை விட்டு ஓடியே போய்விட்டார். ஆண்டான் தன் இருப்பிடத்திற்குத் திரும்பினான். நாளாக.. நாளாக ஆண்டானின் மனத்தில் ஓர் எண்ணம் தோன்றி, நிலை பெறத் தொடங்கியது.

“இதுவரை நாம் பல உயிர்களுக்கு எமனாக இருந்தோம். பெரும்பாவம் இது! இந்தப் பாவம் தீர சேதுவிற்குப்போய்க் கடலில் மூழ்கி, இந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்’’ என்ற அந்த எண்ணத்தைச் செயல்படுத்தத் தீர்மானித்தான் ஆண்டான். அப்போதும் அவனுக்கு ஒரு பிரச்னை முளைத்தது. அவன் ஒரு பெண்ணை மிகவும் நேசித்து வந்தான்; அவளைத் தனியாக விட்டுவிட்டு எப்படிப் போவது? என்ற எண்ணம் ஆண்டானுக்குத் தோன்றியது.

ஆகவே, “சேதுக்குப் போய்நான் திரும்பும் அளவும் இந்த மாதுக்குக் காவல் வயிரவனும் மாடனுமே’’ என்று பாடி, வயிரவரையும் மாடனையும் காவல் வைத்து விட்டுச் சென்றான் ஆண்டான். அன்று முதல் அந்தப் பெண் குடியிருக்கும் வீதிப்பக்கம் செல்லும் ஆண்கள், உடனே ரத்தம் கக்கி இறக்கத் தொடங்கினார்கள். அதைக் கண்ட மக்கள், “ஆண்டானின் இந்தச் செயல், புலி ஏகாதசி விரதம் இருப்பதைப்போல் இருக்கிறது.

ஊரையே அழிக்கும் இவன், தன் பொருள் என்றதும் தெய்வங்களைக் காவல் வைத்துவிட்டுப் போகிறான் பார்!’’ என்று பேசினார்கள். ஊர் திரும்பிய ஆண்டான் நடந்தவைகளை அறிந்து வருந்தினான். அதன்பின் திருச்செந்தூருக்குச் சென்ற ஆண்டான், அங்கே முருகப் பெருமான் மீது பாடல்கள் பாடத் தொடங்கினான். பழக்க வாசனை காரணமாக வசைப் பாடல்களாக வரத் தொடங்கின. அப்போது, “டேய்! போதும் நிறுத்து! நீ நிறுத்தவில்லை என்றால், இன்று உன் வாழ்நாள் முடிந்துவிடும்.

இனிமேல் நீ, இந்த உலகத்தில் பலருக்கும் எமனாக இருக்க மாட்டாய். அதி விரைவில் நீ விண்ணுலகம் அடைவாய்’’ என்று ஓர் அசரீரி ஒலித்தது. ஆண்டான் வியந்தான்; “இதுவரை எந்த ஊரிலும் இப்படிப் பட்ட புதுமையைக் கண்டதில்லை’’ என்று வாய்விட்டுச் சொல்லியபடி, உடனே திருச்செந்தூரை விட்டுப் புறப்பட்டான். புறப்பட்ட ஆண்டான் போய்க் கொண்டிருந்த போது, அவன் காலில் கடுமையாகப் புண் உண்டானது; வலி தாங்கவில்லை; “சீ! இதுநாள் வரை நாம் தீய வழியில் சென்று, அடுத்தவர்க்குத் தீங்கு செய்ததோடு நமக்கும் பெரும் தொல்லையைத் தேடிக் கொண்டோம்’’ என்று வருந்தினான். போய்க் கொண்டிருந்தவன் ஓர் ஊரில், கடுமையான நோயில் விழுந்துவிட்டான். அவனைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்பதால், யாரும் ஆண்டான் அருகில்கூட வரவில்லை.

ஆண்டானின் உயிர் மிகவும் கேவலமான நிலையில் அவனை விட்டுப் பிரிந்தது. அப்போது அவன் உடம்பில் இருந்து கறுத்த உருவம் ஒன்று,“இனிமேல் நான் யாரிடம் போவேன்!’’ என்று புலம்பிக்கொண்டே வெளிப்பட்டு ஓடி மறைந்ததாக வரலாறு பதிவு செய்திருக்கிறது. தெய்வம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் அருள்புரிகிறது. விருப்பமானதைத் தேர்ந்து எடுக்கிறோம். அதை வைத்து அடுத்தவர்க்கு நல்லதைச் செய்யாமல் தீமை செய்வதையே குணமாகக் கொண்டால், விளையும் தீமை என்ன என்பதை விரிவாக விளக்கும் இந்த வரலாறு ஒட்டப் பிடாரத்தில் நடந்தது