புனித நகரமான மெக்காவை குறிவைத்து கடந்த செப்.15 அன்று ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய டிரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த செயலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த குற்றச்சாட்டை ஹவுதி அமைப்பு முற்றிலுமாக மறுத்தது.
இந்நிலையில், ‘மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி’ சவுதிக்கு முழு பாதுகாப்பு அளிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது 3 நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.
இது குறித்துப் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ‘‘புனித நகரமான மெக்காவை பாதுகாக்க எந்த ஒப்பந்தமும் தேவையில்லை; அது எங்களது கடமை. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தின்படி மூன்று நாடுகளின் எல்லைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் கூட்டுப் பாதுகாப்பு வழங்கப்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாகிஸ்தான் எப்போதுமே சவுதி அரேபியாவுக்குத் தோளோடு தோள் நின்று ஆதரவு அளிக்கும்’’ என்றார்.



