இலங்கையின் பொருளாதாரம் 2018-ஆம் ஆண்டில் இருந்த பழைய நிலைக்குத் திரும்பியுள்ளது என்றும், 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது. 2022-இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, இலங்கை தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ள உலக வங்கி, 2027-இல் இது 4.2 சதவீதமாகக் குறையலாம் எனக் கூறியுள்ளது.
அதேவேளையில், இந்த மீட்புப் பணி முழுமையடையாமலும், சீரற்ற முறையிலும் உள்ளது என எச்சரித்துள்ளது. 2019 முதல் 2023 வரை சுமார் 20 லட்சம் மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டனர். 2019-இல் 11.5 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 2026-இல் 15.8 சதவீதமாக இருக்கும் என்றும், வறுமை இன்னும் பழைய நிலையை அடையவில்லை என்றும் உலக வங்கி அதிகாரி ஜேக்கப் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.



