கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விசாரணைகளில் வெளியான புதிய திடுக்கிடும் தகவல்கள்!

 

கொஸ்கொட – மஹா இந்துருவ பகுதியில் ‘கரந்தெனிய சுத்தா’ மற்றும் ‘கொஸ்கொட சுஜீ’ ஆகியோரின் கூட்டாளிகள் நால்வரைக் கொலை செய்யத் தீட்டப்பட்ட திட்டத்தை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் முறியடித்த சம்பவத்தில், பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் உள்ள ‘கரந்தெனிய சுத்தா’வின் கூட்டாளியின் வீட்டைக் இலக்கு வைத்தே இத்தாக்குதல் திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு தங்கியிருக்கும் 4 பேரையும் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்வதே இவர்களின் முதன்மை இலக்காகும்.

‘பொடி பெட்டி’யைக் கொலை செய்ய வந்த துப்பாக்கிதாரி நடந்து வந்ததனால், இவர்களுக்கும் நடந்து சென்று தாக்குதல் நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வீட்டுக் கதவைத் தட்டித் திறக்க வேண்டும் என்றும் கதவைத் திறக்காவிட்டால் “நாங்கள் பொலிஸ்” எனக் கூறித் திறக்க வைக்க வேண்டும் என்றும் அதற்கும் கதவு திறக்கப்படாவிட்டால் கதவை உடைத்து உள்ளே புகுந்து அனைவரையும் சுட்டுக்கொன்று கைக்குண்டையும் வீசி எறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவத்தைச் செய்து முடிப்பதற்காகச் சந்தேகநபர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் பணம் வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாட்டிற்காகவே போலி இலக்கத் தகடு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் ஓட்டுநருக்கும் துப்பாக்கி வழங்கப்பட்டிருந்தது.

இக்கொலைத் திட்டத்தின் முக்கிய சூத்திரதாரியான ‘லொக்கு பெட்டி’ தற்போது வெலிசர கடற்படை முகாமிலுள்ள விசேட சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்தவாறு அவர் எவ்வாறு தொடர்புகொண்டார் என்பது குறித்து தனியான தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலமளிக்கும் போது, “எனக்கு லொக்கு பெட்டியை நீண்டகாலமாகத் தெரியும். அவரது குரலை என்னால் அடையாளம் காண முடியும். அவரே தொலைபேசியில் அழைத்துப் பேசி எனக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தப்பிச் சென்ற சந்தேகநபரைக் கைது செய்வதற்காகவும், சம்பவ இடத்தில் மேலதிக சான்றுகளைச் சேகரிப்பதற்காகவும் வலான ஊழல் தடுப்புப் பிரிவினரும் கொஸ்கொட பொலிஸாரும் இணைந்து தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.