நகைக்கடை கொள்ளை நிஷாந்த் கைது – நடந்தது என்ன?

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் காவல்துறையால் தேடப்பட்டு வந்த நிஷாந்த் கைது செய்யப்படுள்ளார்.

நவம்பர் 12-ஆம் தேதி அன்று கொள்ளை சம்பவம் நடந்த நிலையில், 5 நாட்களுக்கு பிறகு இவரை தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கில் சமூக ஊடகப் பிரபலம் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஐந்த கிலோ கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு போலீஸ் தெரிவித்துள்ளது.

முதல் தகவல் அறிக்கையின்படி மதுரையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை கொள்ளை நடைபெற்றது. நவம்பர் 12-ஆம் தேதி காலை சுமார் 9.45 மணிக்கு கடையைத் திறக்க வந்த ஊழியர், முதல் தளத்தில் தங்க வளையல்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் சிதறிக் கிடப்பதைக் கண்டார். இதையடுத்து, கடை நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

கடையின் பிரதான நுழைவாயிலில் இருந்த பூட்டுகள் உடைக்கப்படாமல் இருந்தன. இதனால், கொள்ளையடித்த நபர் வேறு வழியாகக் கடைக்குள் நுழைந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர்.

கடையின் மொட்டை மாடிக்குச் சென்று ஆய்வு செய்தபோது, மின்தூக்கிக்காக அமைக்கப்பட்டிருந்த கட்டடப் பகுதியின் காற்றோட்டச் சாளரம் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கட்டடத்தின் பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்புச் சாரக்கட்டின் வழியாக மேலே சென்ற நபர், அந்தப் பகுதி வழியாகக் கடைக்குள் நுழைந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

முகத்தை மறைத்தபடி ஒருவர் கடைக்குள் நுழைந்து நகைகளை எடுத்துச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்ததாகவும் காவல்துறை தெரிவித்தது.

இந்தக் கொள்ளை வழக்கில் விசாரணை தொடங்கிய பின்னர், சமூக ஊடகப் பிரபலமான மீனாட்சி கைது செய்யப்பட்டார்.

மீனாட்சி அளித்த தகவலின் அடிப்படையில், குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதியை மீட்டதாகக் காவல்துறை தெரிவித்திருந்தது.

மேலும், நிஷாந்தின் தந்தை சுரேஷும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இதுவரை ஐந்தரை கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட நகைகளின் துல்லியமான எடை, அவற்றின் மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாகக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நிஷாந்தின் தந்தை சுரேஷும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்

கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற நவம்பர் 12-ஆம் தேதிக்கு முந்தைய கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

அதில், நவம்பர் 5-ஆம் தேதியே நகைக்கடைக்குள் நுழைய முயற்சி நடைபெற்றதற்கான காட்சிகள் கிடைத்துள்ளதாக மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் முன்னர் தெரிவித்திருந்தார்.

நவம்பர் 5-ஆம் தேதி கடைக்குள் நுழைய முயன்ற நபருக்கும், நவம்பர் 12-ஆம் தேதி கொள்ளையடித்ததாகச் சந்தேகிக்கப்படும் நபருக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாகக் காவல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

எவ்வளவு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன?

இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 15 கிலோ தங்க நகைகளும், 3 கிலோ வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு 15 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகார்தாரர் அளித்த புகாரின்படி, நவம்பர் 11-ஆம் தேதி இரவு கடை மூடப்பட்டபோது, இருப்புப் பட்டியலில் 3,324 நகைகள் இருந்தன. அவற்றின் மொத்த எடை 40 கிலோ 957 கிராம்.

மறுநாள் காலை கடையைத் திறந்து பார்த்தபோது, சுமார் 15 முதல் 18 கிலோ வரையிலான நகைகள் காணாமல் போயிருக்கலாம் எனத் தெரியவந்ததாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகைகளின் எடையைத் துல்லியமாகச் சரிபார்த்த பின்னரே கொள்ளையடிக்கப்பட்ட அளவை உறுதிப்படுத்த முடியும் என்றும் 12- ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், மதுரை மாநகரக் காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன், இந்தச் சம்பவத்தில் 10 கிலோ தங்க நகைகளும், 1.5 கிலோ வைர நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.