
நமது சூரிய மண்டலத்தின் தொடக்கக் காலத்தில், பூமியைப் போல பல மடங்கு பெரியதான ‘சூப்பர்-எர்த்’ வகைக் கோள் ஒன்று சூரியனால் முழுமையாக விழுங்கப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் புதிய கோட்பாட்டை முன்வைத்துள்ளனர். துருக்கியின் எஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முட்லு யில்டிஸ் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
மற்ற விண்மீன் மண்டலங்களுடன் ஒப்பிடும்போது நமது சூரிய மண்டலத்தில் பெரிய அளவிலான சூப்பர்-எர்த் கோள்கள் ஏதும் இல்லாதது நீண்ட காலமாகவே வானவியலாளர்களுக்குப் புதிராகவே இருந்தது. இந்தச் சூழலில், நமது இளம் சூரியனின் ஈர்ப்பு விசையில் சிக்கிய அந்த ராட்சதக் கோள் அதன் மீது மோதிச் சிதைந்துள்ளதாகவும், அது சூரியனின் உட்பகுதியில் அழியாத இரசாயன அடையாளங்களை விட்டுச் சென்றுள்ளதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
சூரியனின் கட்டமைப்பு மற்றும் அதன் மேற்பரப்பில் உள்ள லித்தியம் உள்ளிட்ட தனிமங்களின் அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளுக்கு இந்தக் கோள் விழுங்கப்பட்ட நிகழ்வே காரணமாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கோள்கள் மற்றும் விண்மீன்களின் பரிணாம வளர்ச்சியை ஆராயும் எம்.இ.எஸ்.ஏ மென்பொருள் மூலம் நடத்தப்பட்ட கணினி வழிப் பரிசோதனைகளில் இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், இது உறுதியான முடிவு அல்லவென்றும், சூரியனின் உட்பகுதியை ஆய்வு செய்யும் முறைகள் மூலம் இந்த இரசாயன தடயங்களை நேரடியாகக் கண்டறிய மேலதிக ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முடிவுகள் விண்வெளி அறிவியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



