சோமாலியக் கடற்பகுதியில் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இந்திய மாலுமி ஒருவர் உட்பட 5 கப்பல் ஊழியர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் தன்னாட்சி பெற்ற மண்டலமான `புண்ட்லாண்ட்’ பகுதியின் கடல்சார் காவல் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதம் சோமாலியத் தலைநகர் மொகதிசுவை நோக்கிச் சென்று கொண்டிருந்த `எம்டி ஹானர் 25′ என்ற எண்ணெய் சுத்திகரிப்புக் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தினர். இக்கப்பலில் 18,500 பீப்பாய் எரிபொருள் மற்றும் 17 ஊழியர்கள் இருந்தனர்.
இந்நிலையில், `தரின்-பார்’ பகுதியில் ரோந்துப் படையினர் நடத்திய மீட்பு நடவடிக்கையின்போது, கப்பலை கடத்திய சோமாலிய கொள்ளையர்கள் சரணடைய முன்வந்தனர்.
இருப்பினும், அவர்கள் கப்பலில் இருந்த 5 ஊழியர்களை ஏற்கெனவே சுட்டுக் கொன்றுவிட்டனர். இதில் ஒரு இந்தியர், 3 பாகிஸ்தானியர்கள் மற்றும் மியான்மரைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர். எஞ்சிய 12 பேரில் 10 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
`எம்டி ஹானர் 25′ கப்பல், பாதுகாப்புப் படையினரின் முழு கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 16 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய எஞ்சிய கொள்ளையர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மற்றொரு கப்பல் மீட்பு
டோகோ நாட்டு கொடியுடன் செங்கடலில் பயணித்த ‘எம்டி யூரேகா’ என்ற மற்றொரு எரிபொருள் கப்பலையும், அதிலிருந்த 12 ஊழியர்களையும் (8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள்) சோமாலியக் கொள்ளையர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை விடுவித்தனர். மீட்கப்பட்ட 12 பேரும் தற்போது உள்ளூர் மக்களின் பராமரிப்பில் பாதுகாப்பாக உள்ளனர்.



