விமானவிபத்து 6 பேர் ரஷ்யாவில் உயிரிழப்பு

 

ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் பயிற்சி விமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்த Tupolev Tu-95 மூலோபாய குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தின் காரணமாக அதில் இருந்த ஆறு விமானப் பணியாளர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமூர் பிராந்தியத்தில் உள்ள கிராஸ்னோயரோவோ கிராமத்திற்கு அருகிலுள்ள மக்கள் வசிக்காத பகுதியில் விமானம் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் வெடிமருந்துகள் அல்லது ஆயுதங்கள் எதுவும் இல்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

விபத்தில் உயிர் தப்பிய ஒரே விமானப் பணியாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விமானம் தரையில் மோதுவதற்கு முன்பு, மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தவிர்த்து விமானத்தைத் திருப்பும் முயற்சியில் குழுவினர் ஈடுபட்டதாக அமூர் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தரையில் இருந்தவர்களில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானதற்கான சாத்தியமான காரணத்தை ரஷ்ய அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இணையத்தில் பரவி வரும் காணொளி ஒன்றில், நான்கு இயந்திரங்களைக் கொண்ட விமானம் கீழ்நோக்கி இறங்கிய பின்னர் தரையில் மோதுவது போன்று காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எனினும், விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் முழுமையான வரிசை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.