தமிழக முதலமைச்சர் விஜய் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்

 

தமிழகத்தில் உள்ள மதுரை ராஜாஜி அரசாங்க வைத்தியசாலையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் செயல்படும் அரசாங்க வைத்திய சாலைகள் மற்றும் தொடக்கநிலை சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சார்பில் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழக வெற்றிக்கழக அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தை மதுரையில் உள்ள ராஜாஜி அரசாங்க வைத்திய சாலையில் இன்று நடைபெற்ற தொடக்க நிகழ்வில் பங்கு பற்றி, முதல்வர் விஜய் அந்த தருணத்தில் பிறந்த 30 பிள்ளைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் என். ஆனந்த், அருண்ராஜ், நிர்மல் குமார், விஸ்வநாதன், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் பங்கு பற்றினர்.

முன்னதாக சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய், ராஜாஜி அரசாங்க வைத்தியசாலை வரை சாலை வழியாக வருகை தந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இடைத்தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களை தவிர்த்து ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.

இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது என்பதும், இதற்காக தமிழக அரசு ஆண்டுதோறும் 756 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் விஜய் 10 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். இதனைத் தொடர்ந்து மதுரை அரசாங்க விருந்தினர் மாளிகை ஓய்வெடுக்கும் முதலமைச்சர், மாலையில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசனம் செய்கிறார்.

பிறகு ஆறு மணி அளவில் மதுரையிலிருந்து சென்னைக்கு தனி விமான மூலம் திரும்புகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.