மரண தண்டனைக்குமுன் திருமணம் செய்த வாலிபர்!!! தூக்கிலிடப்பட்டார்.

 

ஈரானை சேர்ந்தவர் அலிரேசா செபாஹி (25). இவர் மக்ஷாத் கேஷானி என்ற 22 வயது பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணும், அலிரேசாவை உயிருக்கு உயிராக நேசித்தார். இருவருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தினரும் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றதாக கூறி, இருவருமே கைது செய்யப்பட்டனர். வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டதால், இருவராலும் நேரில் சந்திக்கக்கூட முடியவில்லை. இந்த வழக்கில் அலிரேசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மக்ஷாத் கேஷானிக்கு 5 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேஷானி, தனது காதலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் முன் அவரை சிறையிலேயே திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரி அதிகாரிகளிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றார். பிறகு கேஷானியின் திருமண விருப்பம் குறித்து அலிரேசாவிடம் சொன்னபோது, அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். தொடர்ந்து சிறை நிர்வாகம் தரப்பில், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இருவரின் பெற்றோர்களும் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்தனர்.

மனித உரிமை வழக்கறிஞர் அமிர்சலார் டாவூதி திருமணத்துக்கான வாசகங்களை படித்தார். ஆனால் மணமக்கள் 2 பேருமே ஜெயிலில் இருந்ததால், அவர்கள் நேரில் இல்லாத நிலையில், ஆடியோ ரிக்கார்ட் மூலமாக திருமணம் நடந்தது. சிறையில் தனது காதலியுடன் தொலைபேசி வாயிலாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இருவரின் தந்தைகளும் தொலைபேசியில் இணைந்திருக்க, வழக்கறிஞர்களும் சட்ட நடைமுறைகளை நடத்தி வைத்துள்ளனர். மீண்டும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கொள்ளவே முடியாது என்பதை நன்கு அறிந்த அந்த இளம் காதலர்கள், தொலைபேசி வாயிலாகவே திருமண உறுதிமொழி ஏற்று முறைப்படி மணமுடித்து கொண்டனர்.

மணமகளின் வீட்டிலிருந்து குர்ஆன் பிரதி, சில இனிப்புகள் மற்றும் ஒரு சிவப்பு ரோஜா மட்டும் பாரம்பரிய வரதட்சணையாக வழங்கப்பட்டன. ஆனால் இந்த சட்ட நடைமுறைகள் அனைத்தும் சில நிமிடங்கள் மட்டுமே நீடித்துள்ளன. இந்நிகழ்வின்போது, அங்கிருந்த சில சிறை ஊழியர்களும் கண் கலங்கினர். திருமணம் முடிந்தவுடன், அலிரேசா செபாஹி நேராக மரண தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.