ஏழு மாதங்களாக நீடித்து வரும் ஈரான்–அமெரிக்கா போருக்கு மத்தியில், உலகின் முக்கிய எண்ணெய் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை “Trump Strait” என மாற்றும் வரைபடத்தை ட்ரம்ப் பகிர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலால் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்தும் நீடித்து வருகிறது. இப்போரின் ஒரு பகுதியாக, உலகின் முக்கிய எண்ணெய் வழிப்பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் முடங்கியுள்ளது. போர் நிறுத்தத்திற்கான பலகட்ட பேச்சு வார்த்தைகளும் தோல்வியையே தழுவி இருக்கின்றன.
இதற்கிடையில் தான், இந்தப் போரையொட்டி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிடும் கருத்துக்கள் அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம், ஹார்முஸ் நீரிணையை “New U.S. Territory”, அதாவது “புதிய அமெரிக்கப் பகுதி” எனக் குறிப்பிடும் வரைபடத்தை ட்ரம்ப் தனது ட்ரூத் சோசியல் (Truth Social) பக்கத்தில் வெளியிட்டார். அந்த வரைபடத்தில் அமெரிக்கக் கொடியின் வடிவமைப்பும் இடம்பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி, “ஹார்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதன் பெயரை ட்ரம்ப் நீரிணை (Trump Strait) என மாற்றலாமா?” என ட்ரம்ப் பதிவிட்டார்.
இந்தச்சூழலில் தான், தற்போது வெளியிட்டிருக்கும் ஒரு சமூக வலைதளப் பதிவில், ஹார்முஸ் நீரிணையின் வரைபடத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஹார்முஸ் நீரிணையின் பெயர் ட்ரம்ப் நீரிணை எனக் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், இது குறித்து ஈரான் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கவில்லை.



