ஓராண்டு கொலைக்குப் பின் சிக்கினார் கணவன் மகாராஜா

 

திருநெல்வேலி அருகே இரண்டாவது திருமணம் செய்ததைக் கண்டித்த காதல் மனைவியைக் கல்குவாரி குட்டையில் தள்ளிவிட்டுப் படுகொலை செய்த மகாராஜா என்ற வாலிபர், ஓர் ஆண்டிற்குப் பிறகு காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். திருநெல்வேலி அருகேயுள்ள சுத்தமல்லி கொண்டாநகரைச் சேர்ந்தவர் மகாராஜா (38), தொழிலாளி. இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம்,

பண்ருட்டி புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அமராவதி (34) என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவருடன் வசித்து வந்த அமராவதி, கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பு திடீரென மாயமானார். அவரது தாயார் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கடந்த 23-ஆம் தேதி சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கல்குவாரி குட்டையில் தள்ளிக் கொலை மகாராஜா மீது சந்தேகமடைந்த சுத்தமல்லி காவல்துறையினர், அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அமராவதியைக் கங்கைகொண்டான் அருகே உள்ள பாப்பாங்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்று, ஆத்திரம் தீரச் சரமாரியாக அடித்துக் கல்குவாரி குட்டையில் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தார். இதையடுத்து, காவல்துறையினர் நேற்று மகாராஜாவைச் சம்பந்தப்பட்ட கல்குவாரிக்கு அழைத்துச் சென்றனர்.

மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்பு கல்குவாரியில் மகாராஜா சுட்டிக்காட்டிய இடத்தில் நடத்தப்பட்ட தேடுதலில், அங்கிருந்து ஒரு சேலை, மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மீட்கப்பட்டன. முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், “ஏற்கனவே அமராவதியைக் காதல் திருமணம் செய்த மகாராஜா, கடந்த 2024-ஆம் ஆண்டு வேறொரு பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையறிந்த அமராவதி அவரைக் கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகாராஜா, 2025-ஆம் ஆண்டு மே மாதம் அமராவதியைத் தனது இருசக்கர வாகனத்தில் பாப்பாங்குளம் கல்குவாரி குட்டைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்” என்பது தெரியவந்தது.

ஓர் ஆண்டிற்குப் பின் சிக்கினார் கொலைக்குப் பிறகு மகாராஜா கங்கைகொண்டான் பகுதியில் வசித்து வந்துள்ளார். தனது மகன்களிடம் தாய் அமராவதி வெளியூருக்குச் சென்றுள்ளதாகக் கூறி சமாளித்து வந்துள்ளார். ஆனால், அமராவதியின் தாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரிலேயே, ஓர் ஆண்டிற்குப் பிறகு மகாராஜா தற்போது காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து மகாராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர்.