பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானிய தலிபான் என்று அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஒரு மாவட்டமான டேரா இஸ்மாயில் கானில் சாலையோரத்தில் இருந்த காவல் சோதனைச் சாவடி ஒன்றில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை வெடிக்க செய்து தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய தற்கொலை தாக்குதலில் 11 பேர் பலியாகினர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் சுங்க மற்றும் கலால் துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் அடங்குவர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.



