திருகோணமலை உவர்மலைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் விபச்சார மற்றும் பாலியல் தொழில் நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் அதிரடிச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு நாட்கள் விளக்கமறியல்
இதன்போது விடுதியின் பொறுப்பாளர் எனக் கூறப்படும் 54 வயதுடைய ஆண் ஒருவரும், 48, 43 மற்றும் 38 வயதுடைய மூன்று பெண்களும் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காகத் திருகோணமலை தலைமையகப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



