யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள 242B இலக்க வர்த்தகக் கட்டிடத்தைப் பயன்படுத்துவது தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைக்கட்டளையைப் பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் முன்னிலையில் கடந்த 24ஆம் திகதி ஒகஸ்ட் 2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகள்
வழக்காளிகளான விஜிதா தியாகராஜா மற்றும் கணபதிப்பிள்ளை கேதீஸ்வரநாதன் ஆகியோர், தமக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் குறித்த சொத்தினை டக்ளஸ் தேவானந்தா 30 வருடங்களுக்கு மேலாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குறித்த சொத்தை மீள ஒப்படைக்குமாறு பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்ததாகவும், 2015ஆம் ஆண்டு சொத்தை மீள ஒப்படைப்பதாக டக்ளஸ் தேவானந்தா எழுத்து மூலம் உறுதியளித்திருந்தபோதிலும், இதுவரை சொத்து மீள ஒப்படைக்கப்படவில்லை என்றும் வழக்காளிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் வழக்காளிகள் சார்பில் மனு மற்றும் பல ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், எதிராளி தரப்பிலும் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டிருந்தது.
இடைக்கால தடைக்கட்டளை வழங்குவதற்கான சட்டக் கோட்பாடுகளை ஆராய்ந்த நீதிமன்றம், வழக்காளிகளுக்கு ஆரம்ப நிலையில் பரிசீலிக்கத்தக்க வலுவான வழக்கு இருப்பதாகவும், இறுதி விசாரணையில் அவர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இடைக்கால தடைக்கட்டளை வழங்கப்படாவிட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஒப்பிடுகையில், வழக்காளிகளுக்கே அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே, குறித்த சொத்தை சுமார் 30 ஆண்டுகளாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அனுமதியுடன் அங்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் எதிராளி தரப்பில் முன்வைக்கப்பட்டது.
எனினும், இந்த வாதங்கள் வழக்காளிகள் கோரிய இடைக்கால தடைக்கட்டளையை நிராகரிப்பதற்கு போதுமானவை அல்ல என நீதிமன்றம் கருதியுள்ளது.
குறிப்பாக, எதிராளி முன்னர் வழக்காளிகளின் உரிமையை ஏற்றுக்கொண்டிருந்ததாகவும், பல சந்தர்ப்பங்களில் குறித்த சொத்தை மீள ஒப்படைப்பதாக உறுதியளித்திருந்ததாகவும் ஆவணங்கள் மூலம் தெரியவருவதாக நீதிமன்றம் தனது கட்டளையில் குறிப்பிட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நீதிமன்றத்தின் உத்தரவு | Court Issues Interim Order Against Douglas
இதனையடுத்து, யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள 242B இலக்க கடைக் கட்டிடத்தில் அல்லது அதன் எந்தப் பகுதியிலும் எந்தவொரு வர்த்தக அல்லது வியாபார நடவடிக்கையையும் மேற்கொள்வதற்கு டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட எதிராளி தரப்பினருக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அத்துடன், குறித்த கட்டிடத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்வதற்கும், அதன் உடமை அல்லது உரிமையை எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் மாற்றுவதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த இடைக்கால தடைக்கட்டளை, வழக்கு இறுதியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும் என யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தனது கட்டளையில் தெரிவித்துள்ளது.



